- இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் சுற்றுச்சூழல் குற்றம் நடந்தேறி, அது, நிலம், நீர், காற்றின் தரத்தைப் பாழ்படுத்தி, சூழல் அமைப்பிலுள்ள ஒவ்வொரு உயிர்களுக்கும், மனிதர்கள் உள்பட, ஆபத்தைவிளைவித்த பின், நடக்கும் காட்சிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையே! அந்த வகையில், ஒரு குற்றம் நிகழ்ந்ததையும் அல்லது நிகழ்த்தப்பட்டதையும் முதலில் உணர்வது, புவியியல்ரீதியாக மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளுக்கு அருகில் வசிக்கும் சமூக, பொருளாதாரரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களே. அவர்களின் மூலமாகவே சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அக்குற்றம்செய்தியாகப் பதிவாகும். ஆனால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அக்குற்றத்துக்குப் பொறுப்பேற்காது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
எடுத்துக்காட்டான எண்ணெய்க் கசிவு
- இதுபோன்ற குற்றங்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரிக்கும்போது, அரசு இயந்திரங்கள்செயலாற்றத் தொடங்கும். மீட்பு நடவடிக்கைகளிலும், சூழலமைப்பில் பரவியிருக்கும் மாசைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கும். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாகவோ, அவர்களின் சங்கங்கள் மூலமாகவோ சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் வாயிலாகவோ, மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குப் புகார் அளிப்பதும், நீதிமன்றத்தில் (பெரும்பாலும் பசுமைத் தீர்ப்பாயத்தில்) வழக்குத் தொடர்வதும் நடந்தேறும். இவற்றுக்கிடையே, செய்தி ஊடகங்களில் நடக்கும் விவாதங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில், ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வாதிடுவார்கள்.
- அவ்விவாதங்களில் பங்குபெறும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், அரசு இயந்திரத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவார்கள். இவற்றுக்கிடையே முறையான பயிற்சி பெற்ற வல்லுநர்களைவிட, அதிகமான எண்ணிக்கையில் உள்ளூர் மக்களும், தன்னார்வலர்களும், தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, நிலத்திலும் நீரிலும் பரவியிருக்கும் மாசை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தங்களின் உடைமைகள் சேதமடைந்ததாலும் உடல்நலத்திலும் வாழ்வாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டதாலும் கோபமுற்றிருக்கும் மக்களை ஓரளவுக்கு ஆற்றுப்படுத்த அரசு நிவாரண உதவிகளையும் அறிவிக்கும். ஏறக்குறைய மேற்சொன்ன காட்சிகள் சமீபத்தில் நடந்தேறின.
- மணலியில் இருக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) வளாகத்திலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவு, கொற்றலை ஆற்றிலும் வங்கக் கடலிலும் கலந்தபோது இவை அனைத்தும் நடைபெற்றதை நாம் காண முடிந்தது. எனவே, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் யாவும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகவே தொடர்கின்றன.
வழக்குப் பதிவு எப்போது
- சிபிசிஎல் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதில் அலட்சியப் போக்குடன் செயல்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவே தோன்றுகிறது. ஏனென்றால், மிக்ஜாம் புயலால் மிகக் கனமழையும், அதனால் நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலைகள், அவற்றின் வளாகத்தில் இருக்கும் அபாயகரக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
- அதனை மாசுக் கட்டுப்பாடு வாரியமும் உறுதி செய்திருக்கவும் வேண்டும். இவை இரண்டுமே நடந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், சிபிசிஎல் நிறுவனமோ பூண்டி, புழல் ஆகிய ஏரிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 48,000 கன அடி நீரின் வெள்ளத்தின் காரணமாகவே தங்கள் நிறுவனத்தின் எண்ணெய்க் கழிவுகளும் கொற்றலை ஆற்றில் கலந்திருக்கலாம் என்றும், மணலியில் பல தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில், தங்களை மட்டும் இந்நிகழ்வுக்குப் பொறுப்பாக்குவது சரியல்ல என்றும் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம், அந்நிறுவனம் தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதோடு, புயலுக்கு முன்பும் பின்பும் அலட்சியத்தோடு செயல்பட்டதாகவே தெரிகிறது.
- எனவே, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986இன் பிரிவு 8, 9, 16 ஆகியவற்றின் கீழும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 268, 425, 431 ஆகியவற்றின் கீழும் அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்வதற்கான முகாந்திரம் இருந்தும், இதுவரையில் குற்றவழக்குகள் ஏதும் பதிவுசெய்யப்பட்டதாகப் பொதுவெளியில் தகவல்கள் இல்லை. ஒருவேளை, எண்ணெய்க் கழிவு வெளியேறியதால் மனித உயிரிழப்பு ஏற்பட்டிருப்பின் உடனடியாகக் குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கும். ஏனென்றால், நம் சட்டங்கள்பெரும்பாலும் மனித மையக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே செயல்படப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன.
- எண்ணெய்க் கசிவால் மீன்கள், இறால்கள், நண்டுகள், ஆமைகள் இறந்திருக்கின்றன. பறவைகள் எண்ணெய் தோய்ந்த உடலோடு கருமை நிறம் படிந்து காணப்படுகின்றன. அலையாத்திக் காடுகளின் வேர்கள் எண்ணெய்ப் படலத்தால் சூழப்பட்டுள்ளன. இருந்தும் நாம் இத்தகு சூழலியல் பாதிப்புகளை வெறும் ‘மாசு’என்ற குறுகிய கண்ணோட்டத்திலேயே புரிந்துகொள்கிறோம்.
அரசின் கடமை
- இத்தகு செயல்களைச் சுற்றுச்சூழலுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றமாக நாம் எப்போதுதான் காணப்போகிறோம் எனத்தெரியவில்லை. சுற்றுச்சூழலை அதன் பாதிப்பில்இருந்து மீட்டுருவாக்க, மாசு ஏற்படுத்திய நிறுவனத்திடமிருந்து அபராதம் வசூலிப்பதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதையும் தாண்டி, அந்நிறுவனங்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்; குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும். ஏனென்றால், ஏறக்குறைய அனைத்து மாசு ஏற்படுத்தும் இயங்குமுறைகளைக் கொண்டு, தொழிற்சாலைகள் ஒருமுறையாவது விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கும். எந்த நிறுவனம், எத்தனை முறை, எவ்வளவு தொகையை அபராதமாகச் செலுத்தியது என்பதிலேயே வேறுபாடுகள் இருக்கும்.
- இதிலிருந்து, வெறும் அபராதம் விதிப்பது என்பது நிறுவனங்கள் போதுமான தடுப்பு-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதில்லை எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது குற்ற வழக்குகள் பதிவுசெய்வது இன்றியமையாததாகிறது. அதுதான் இயற்கை மீது மனிதர்களால் இழைக்கப்படும் அநீதிகளுக்குச் சக மனிதர்கள் சார்பில் வழங்கப்படும் குறைந்தபட்சத் தண்டனையாக அமையும்!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 12 – 2023)