TNPSC Thervupettagam

வஞ்சிக்கப்படும் தமிழகம்

May 23 , 2024 231 days 181 0
  • பாலாற்றில் பல இடங்களில் தடுப்பணை கட்டியுள்ள ஆந்திரத்துடனும், மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டுவரும் கர்நாடகத்துடனும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்க் கொள்ளளவு விவகாரத்தில் கேரளத்துடனும் தமிழகம் சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில், இதில் அடுத்ததாக இணைந்திருக்கிறது அமராவதி அணையின் நீராதாரமான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு எடுத்துவரும் நடவடிக்கை.
  • திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. 1958-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
  • அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களாக கேரள மாநிலம் சட்டமூணாறு பகுதியில் உள்ள பாம்பாறு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. இடுக்கி மாவட்டம் தேவிகுளம் வட்டம் வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
  • சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதை தமிழக பொதுப் பணித் துறை பொறியாளர்கள் குழு நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கேரள மாநிலம் காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டிசேரி எனும் இடத்தில், அமராவதி அணையின் மற்றொரு முக்கிய நீர் ஆதாரமான பாம்பாற்றுக்கு வரும் நீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டது. இந்நிலையில், சிலந்தி ஆற்றின் குறுக்கேயும் கேரளம் தடுப்பணை கட்டி வருவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
  • குடிநீர்த் தேவைக்காக இந்தத் தடுப்பணை கட்டப்படுவதாக கேரளம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தடுப்பணையின் அருகிலேயே கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளதாகவும், அந்த ஆலையின் தேவைக்காக சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருவதாகவும் தமிழக விவசாய அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றன.
  • சிலந்தி ஆற்றில் தடுப்பணை தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது. சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை, தேசிய வன விலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பி, அவ்வாறு அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
  • சிலந்தி ஆற்றில் தடுப்பணை தொடர்பாக ஏப்ரலில் நடைபெற்ற 29-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற 30-ஆவது கூட்டத்திலும் தமிழக அரசு கேள்வி எழுப்பியது. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி குறித்த விவரங்கள் கீழ் நதிக்கரையோர மாநிலமான தமிழகத்துக்கு தெரிவிக்கப்படாதது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆணையம் இதுகுறித்து விவரங்களைச் சேகரித்து கேரள அரசிடம் விளக்கம் கோர வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
  • காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வந்த நிலையிலும், தமிழகத்துக்கு உரிய நியாயம் இதுவரை கிடைத்தபாடில்லை. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஒட்டுமொத்தமாக 419 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும், அதில் கர்நாடக அரசு 192 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • 2018 மே 16-ஆம் தேதி உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரியில் வழங்க வேண்டிய நீரின் அளவு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. காவிரி நீரை பிரதானமாகக் கொண்டு தமிழகத்தில் வேளாண் பாசனம் நடைபெற்று வருவதால், மாதந்தோறும் கர்நாடகம் அளிக்க வேண்டிய நீரின் அளவும் தெளிவாக வகுக்கப்பட்டது. அந்த அளவீட்டின்படி நீரைப் பெறுவதற்குக்கூட அவ்வப்போது உச்சநீதிமன்றத்தையும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையும் அணுகி நிவாரணம் பெற்று வருகிறது தமிழகம்.
  • இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள் அனைத்தும் தேசிய சொத்து என்று காவிரி இறுதித் தீர்ப்பில் சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், இதில் எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது எனத் தெரிவித்தது. அதன்படி பார்த்தால், சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருவது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாகும்.
  • சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டுசென்றது சரியான நடவடிக்கை என்றாலும், தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த சட்டப் போராட்டம் நடத்தவும் தமிழக அரசு தயங்கக் கூடாது!

நன்றி: தினமணி (23 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories