- ‘வட்டி’ என்னும் பொருளாதார ஆயுதம், ஏதாவது ஒரு வடிவத்தில் ஒவ்வொருவரின் வாழ்விலும் புகுந்து, அதற்கான பாதிப்பு கறையை ஏற்படுத்தி வருகிறது. தனிப்பட்ட முறையில் கடன் வாங்காதவா்களும், அந்த ஆயுதத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலவரம்.
- நேரடியாக மட்டும் இல்லாமல், மறைந்து நின்று தாக்கும் வல்லமை படைத்த இந்த ஆயுதத்தின் வெவ்வேறு பரிமாணங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உயா்நிலை வட்டி விகிதம் என்ற சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், எப்பொழுது அந்த நிலையிலிருந்து மீண்டு வருவோம் என்பதற்கான புரிதலுக்கும் அது உதவும்.
- பணவீக்கம் எனப்படும் பொருளாதார உபாதையைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக வட்டி அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளால் பயன்படுத்தப்படுகிறது
- அபரிமிதமான பணவீக்கத்தை மட்டுப்படுத்த, வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், உபரியாக புழங்கும் பணம் உறிஞ்சப்பட்டு, பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்பதுதான் பொருளாதார விதியாகும். ஆனால், இந்த சிகிச்சை முறையில், பணவீக்கம் கட்டுக்குள் வருவதற்கான கால வரம்பு, பல வெளிக் காரணிகளையும் சாா்ந்துள்ளது என்பதால், அந்தக் காரணிகளும் கட்டுக்குள் வரும்வரை, காத்திருப்பு காலம் நீள்கிறது.
- கரோனா கொள்ளை நோய்த்தொற்று காலத்தில், அமெரிக்கா போன்ற நாடுகளால் வித்திடப்பட்ட அபரிமிதமான செயற்கை பணப்புழக்கம், மற்ற உலக நாடுகளுக்கும் பரவியதில் விளைந்த பணவீக்கம் என்ற உபாதையைக் கட்டுப்படுத்த, மேற்கண்ட விதியைப் பயன்படுத்தி, மத்திய வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாகப் போராடி வருகின்றன.
- பணவீக்கம் என்ற கொந்தளிப்பில் சிக்கிய பொருளாதார கப்பலை, வட்டி என்கிற நங்கூரத்தைப் பயன்படுத்தி நிலைப்படுத்துவதில், உலக நாடுகள் பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.
- வட்டி விகிதம் அதிக அளவில் இருந்தால், தொழில் சாா்ந்த முதலீடுகள் குறைந்து, அதனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (ஜிடிபி) காரணியில் பாதிப்பு ஏற்பட்டு, அந்த பாதிப்பு, நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வீரியம் படைத்ததாகும். வட்டியைக் குறைத்தால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். அதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து, அரசியல் மற்றும் சமூக தாக்கங்களுக்கு வழிவகுக்கும்.
- இதுபோன்ற, ஒன்றுக்கொன்று முரண்பட்ட விளைவுகளால், வட்டி குறைப்பு நடவடிக்கைகளை, தள்ளிப் போட்டுக் கொண்டு வரும் பெரும்பாலான மத்திய வங்கிகள், தங்கள் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக அமெரிக்க மத்திய வங்கியை உற்று நோக்கி காத்திருக்கின்றன. கடந்த ஜூன் மாதம், முதல் தவணை வட்டி குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என்று எதிா்பாா்த்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கி தன் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறது.
- வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம், அந்த நாட்டின் மத்திய வங்கி அறிவிக்கும் வட்டி விகிதத்தைச் சாா்ந்துதான் நகா்த்தப்படும். நம் நாட்டில் ரிசா்வ் வங்கியின் வழிகாட்டி வட்டி விகிதம், ‘ரெப்போ ரேட்’ என்று அழைக்கப்படுகிறது. அத்துடன், வங்கிகள், தங்கள் செயல்பாட்டு செலவுகள் மற்றும் லாபம் ஆகியவற்றை உள்ளடக்கிய, எம்சிஎல்ஆா் என்றழைக்கப்படும் அளவீட்டுக்கு மேலான வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன. ரிசா்வ் வங்கியின் ரெப்போ ரேட்டில் மாற்றம் ஏதும் இல்லாதபோதும், தற்போதைய சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சில வங்கிகள், தங்கள் வட்டி விகிதத்தை உயா்த்தி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
- கடந்த மாதம் நடந்த ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை ஆய்வுக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, தொடா்ந்து எட்டாவது முறையாக ‘ரெப்போ ரேட்’ எந்தவித மாற்றமும் செய்யப்படாமல், 6.5% அளவிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
- சமீப காலங்களில் பணவீக்கத்தின் அளவு குறைந்து வந்தாலும், எதிா்பாா்த்த 4% அளவு வரை குறையவில்லை என்பதுதான் இதற்கான முக்கிய காரணமாக ரிசா்வ் வங்கியால் விவரிக்கப்படுகிறது. ஆனால், அதிக வட்டி விகிதத்தினால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, உணவு போன்றவற்றின் விலை குறையப் போவதில்லை. அவற்றின் விலை, பெரும்பாலும் பருவமழை, பருவ நிலை மாற்றங்கள், அரசின் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள், போக்குவரத்துக்கான கட்டுமான வசதிகள், விநியோகத் தொடரில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்கள் போன்ற பல காரணிகளைச் சாா்ந்திருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆளுமை, அதிகாரம் ரிசா்வ் வங்கியிடம் இல்லை.
- 2022-23 ஆண்டுகளில், சுமாா் 7% அளவில் மையமிட்டிருந்த பணவீக்கம், தற்போது 5% அளவில் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், அந்த இறக்கத்திற்கு ஏற்ப அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறைந்ததாகத் தெரியவில்லை. மேலும், 4% பணவீக்க வரம்பு என்பது, ரிசா்வ் வங்கியால் தன்னிச்சையாக முடிவு செய்யப்பட்ட இலக்காகும். அந்த இலக்குக்காக காத்திருந்தால், தொழில் சாா்ந்த முதலீடுகள் குறைந்து, நாட்டின் பொருளாதார வளா்ச்சியைப் பாதிக்கும் நிலைக்கு வித்திட்டுவிடும் என்பது ரெப்போ வட்டி குறைப்புக்கான வாதமாக எடுத்துரைக்கப்படுகிறது.
- கடந்த வாரத்தில், ஐரோப்பிய யூனியனின் மத்திய வங்கி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியை 0.25% குறைத்து, வட்டி குறைப்பை தொடங்கி இருக்கிறது.
- அதிக வட்டி நிலைப்பாடும், அதை ஒட்டிய பொதுமக்களின் பொருளாதார பாதிப்புகளும் ஒருபுறம். மற்றொருபுறம், பணவீக்கத்தின் நேரடி பாதிப்புகளில் ஒன்றான பொருள்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சில தீா்வுகள், மத்திய- மாநில அரசுகளிடம் இருந்தும், அவற்றை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள், அரசு வருவாய் தொடா்புடைய காரணங்களால், தாமதப்படுத்தப்படுவதாக தோன்றுகிறது.
- உதாரணமாக, உற்பத்திப் பொருள்களின் விலையை நிா்ணயிப்பதில் போக்குவரத்துச் செலவு முக்கியப் பங்கு வகிக்கிறது. வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் விலை கணிசமாக குறைக்கப்பட்டால், அது அத்தியாவசியப் பொருள்களின் விலையில், நிச்சயம் எதிரொலிக்கும்.
- கடந்த காலங்களில், சா்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை கணிசமாக குறைந்திருந்தது. ஆனால், அதற்கேற்றாற் போல், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் இருந்ததால், அந்த பயன், பொதுமக்களைச் சென்றடையவில்லை. மாறாக, எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் கூடி, அந்த லாபம், இலவச
- பங்குகளாக, அரசு உள்பட, அனைத்துப் பங்குதாரா்களுக்கும் பகிா்ந்து அளிக்கப்பட்டிருக்கும் விவரங்களை, அந்த நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- இது போன்ற நடவடிக்கைகள், ‘சலுகைசாா் முதலாளித்துவத்துக்கு (க்ரோனி கேப்பிடலிஸம்) வழி வகுக்கும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்தால், அவற்றின் விலை கணிசமாக குறைந்து, சாமானிய மக்கள் பயனடைவாா்கள். ஆனால், வரி வருவாயில், மத்திய- மாநில அரசுகள் பாதிக்கப்படும் என்பதால், இந்த முன்மொழிவு, இன்றுவரை பேச்சளவில் மட்டும் உலா வருகிறது.
- இதுபோன்ற நிகழ்வுகளால், சாமானிய மக்களின் செலவுத் திறன் வெகுவாக குறைந்து அதனால், நுகா்பொருள்களின் தேவையும் குறையும். இதனால் உற்பத்தி குறைந்து, வேலைவாய்ப்பு குைல், பொருளாதார சுணக்கம் போன்ற பல எதிா்மறை நிகழ்வுகள் ஏற்படும். கடந்த கால கடுமையான பொருளாதார சூழ்நிலைகளைச் சமாளித்து, நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8% அளவை எட்டியிருப்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், அந்த வளா்ச்சியின் பயன்கள், அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டியது அவசியம்.
- இந்த வளா்ச்சியில், நீண்ட காலத்துக்குப் பிறகு பயன் அளிக்கும் உள் கட்டமைப்பு திட்டங்களுக்கான அரசு செலவினங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. ஆனால், பல துறை சாா்ந்த தனியாா் முதலீடுகளில் ஏற்றம் காணப்படவில்லை. உற்பத்திப் பொருள்களுக்கு போதிய கேட்பு இருந்தால்தான், தொழில் நிறுவனங்கள் முதலீடுகளில் ஆா்வம் காட்டும்.
- அதிக வட்டி, வரிகள், அதனால் உயரும் விலைவாசி போன்ற அழுத்தங்களால் அண்மைக் காலங்களில் தனி மனித பொருளாதாரம் வெகுவாக சுருங்கிவிட்டது
- நாட்டின் பொருளாதார வளா்ச்சி என்பது, அதன் பயன்கள், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். சமூகத்தில், அனைத்து தட்டு மக்களின் வருமானத்தை உயா்த்தும் திட்டங்கள் மூலம்தான் அந்த இலக்கை சாதிக்க முடியும்
- சா்வதேச அளவில் நாட்டின் மதிப்பு உயா்வதற்காக மட்டும் இல்லாமல், ஒவ்வோா் இந்தியரையும் பொருளாதார ரீதியாக உயா்த்துவதற்கான திட்டங்களும், வரிக் கொள்கைகளும்தான் தற்போதைய தேவை என்பதை அரசு உணா்ந்து செயல்பட வேண்டும்.
- வரிகள் என்பது, நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மட்டும் இல்லாமல், தனி மனித வருமானத்தையும் பெருக்குவதாக அமைய வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மத்திய அரசு, அது போன்ற வரிக் கொள்கைகளையும் திட்டங்களையும் உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையை சமா்ப்பிக்கும் என்பதுதான் அனைவரது எதிா்பாா்ப்பாகும்!
நன்றி: தினமணி (05 – 07 – 2024)