TNPSC Thervupettagam

வணிக வழி வேளாண் சுற்றுலா - 1

March 25 , 2024 301 days 288 0
  • வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை சுற்றுலாவுக்கு என்றென்றும் உண்டு. சொல்லப்போனால் சுற்றுலாவுக்கு என்றும் இளமைதான். அத்தகைய இளமையின் வசந்த வாசலில் வலம் வர யாருக்குத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கும். இன்னமும் கூறவேண்டுமானால் ஜனநாயக நாட்டில் அவ்வப்போது நெருங்கும் தேர்தல் திருவிழா கூட சுற்றுலாவை ஊக்குவிக்கிறது.
  • ஆம், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி குஜராத் மாநிலத்தை சேர்ந்த சில சுற்றுலா நிறுவனங்கள்தேர்தல் சுற்றுலாவைஅறிமுகப்படுத்தி இருந்தன. இதன் மூலம் தேர்தல் நடக்கும் முறை, மக்களின் வாக்களிக்கும் முறை மற்றும் தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை சுற்றுலாவாசிகள் கண்டுணரும் வகையில் ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் பலரும் பங்குபெற்று இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  • 2022-ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி இந்தியாவுக்கு 62 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் வருகை புரிந்துள்ளனர். அதுவே இந்தியாவின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு 173 கோடி உள்நாட்டு சுற்றுலாவாசிகள் சென்று வந்துள்ளதாக மத்திய அரசின் சுற்றுலாத்துறை கூறுகிறது. நாளுக்குநாள் சுற்றுலாவாசிகளின் வரவு அதிகரித்தாலும் கரோனா காலகட்டத்தில் பெரும் சிக்கலை சுற்றுலாத்துறை சந்தித்தது.
  • குறிப்பாக 2020 முதல் 2022 வரையிலான 3 வருடங்களில் மட்டும் சர்வதேச அளவில் சுற்றுலாத்துறைக்கு 2.6 ட்ரில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. அதனைவீழ்வேன் என்று நினைத்தாயோஎன்கிற பாரதியின் வரிகளை உள்ளடக்கி சுற்றுலாவானது மீண்டு எழுந்து வருகிறது. அதிலும் ஐந்தில் ஒருவர் சுற்றுலா மூலமே வேலை வாய்ப்பை பெறுகின்றனர் என்பதும் நம் இந்திய அளவில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்து 4.4 கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வேளாண் சுற்றுலா

  • சுற்றுலாவின் அவதாரம் என்பது பல வகைகளில் பிறப்பெடுத்து இருந்தாலும் அதில் மண்ணின் மைந்தராய், ஆற்றுப்படுகையின் கரை ஓரமாய், சந்தனத் தென்றல் கமழும் பண்ணை வீடாய், வயல்வெளி செழிக்கும் பசுமை போர்வையாய், சூரியனின் ஒளிக் கீற்றாய் பட்டொளி வீசும் வேளாண் சுற்றுலாவானது என்றென்றும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும்.
  • வேளாண் சுற்றுலா என்பது, ‘வேளாண் பண்ணையில் சுற்றுலாவாசிகளைத் தங்க வைத்து அவர்களுக்கு உணவளித்து வேளாண் பணிகளில் ஈடுபட வைத்து மேன்மை அடையச் செய்வதேஎன்று கூறுகிறது உலகச் சுற்றுலா நிறுவனம்.
  • மேலும் வேளாண் சுற்றுலா என்பது வேளாண் அறுவடையை கொண்டாடுவது, தோட்டத்தில் விளைந்த பழங்கள், காய்கறிகளை தேவையான அளவில் சுற்றுலா வாசிகளே அறுவடைசெய்வது, பண்ணைக் குட்டைகளில் மீன் பிடிப்பது, ஊரகவேளாண் சந்தையைப் பார்வையிடுவது, கிராமப்புற கைவினைக் கலைஞர்களிடம் பொருள்கள் வாங்குவது, மாட்டு வண்டியில் சவாரி செய்வது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் சார்ந்த வகுப்புகளை நடத்தி கற்றுக்கொடுக்க வைப்பது எனப் பலவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

வேளாண் சுற்றுலாவின் வரலாறு

  • 1985-ம் ஆண்டில் இத்தாலிய தேசிய சட்ட கட்டமைப்பு வேளாண் சுற்றுலாவை கட்டமைத்தது. இந்த சட்டத்தின் சாராம்சமே வேளாண் பண்ணையை தொழில் முனையும் இடமாக மாற்றி விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.
  • அத்துடன் இந்த சட்டத்தின் மூலம் சுற்றுலாவாசிகளை விவசாயிகள் தங்களின் பண்ணைகளில் தங்கவைத்துக் கொள்ளலாம். இதனால் இயற்கையை நேசித்து வேளாண்மையை விரும்பி வரும் சுற்றுலாவாசிகளின் வரவு அதிகரித்து இத்தாலிய விவசாயிகளின் வருமானமும் பெருக ஆரம்பித்தது.
  • அதன் பலனாய் விவசாயிகளும் விவசாயத்தை ஆர்வத்துடன் மேற்கொண்டு பல புதுமைகளையும் புகுத்தினர். இதனால் நாளடைவில் இத்தாலியில் உள்ளடஸ்கனிவேளாண்மைச் சுற்றுலாவுக்கே பெயர்போன இடமாய் மாறிப்போனது. இத்தாலியைத் தொடர்ந்து பல வளர்ந்த நாடுகளில் தற்போது வேளாண் சுற்றுலா பிரபலமாக இருந்து வருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories