TNPSC Thervupettagam

வந்தடைந்த பாதையும் வருங்காலமும்

March 6 , 2024 139 days 212 0
  • பொதுவாக, கடைசியாக நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே மக்களவை, சட்டமன்றத் தொகுதிகள் வரையறை செய்யப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் கூறு 81 சொல்கிறது. இதற்கென்று நியமிக்கப்படும் தொகுதி மறுவரையறைக் குழு இந்தப் பணியை மேற்கொள்ளும்.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் அம்மாநிலத்தின் மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதம் (ratio) கூடுமானவரை சமமாக இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் 81ஆம் கூறு வலியுறுத்துகிறது.
  • அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காகவே இந்த ஏற்பாடு. 60 லட்சத்துக்குக் குறைவான மக்கள்தொகை உள்ள மாநிலங்களுக்கு இது பொருந்தாது.
  • சுதந்திர இந்தியாவில், 1951 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு 1952இல் முதல் முறையாக மக்களவைத் தொகுதிகள் வரையறுக்கப்பட்டன. அப்போதுஅரசமைப்புச் சட்டத்தின் கூறு 81 இல் ‘ஒரு மக்களவை உறுப்பினர் 7,50,000க்கு மேற்பட்டோரின் பிரதிநிதியாக இருக்கக் கூடாது’ என்னும் வரி நீக்கப்பட்டது.
  • இதுவே அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது திருத்தம். இதன்படி, 1952இல்முதல் மக்களவையில் 494 தொகுதிகள் என்று வரையறுக்கப்பட்டது (அப்போதைய மக்கள்தொகை 36.1 கோடி). 1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 1963இல்மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 522ஆக அதிகரித்தது (ம.தொ. 43.9 கோடி). இறுதியாக, 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 1972இல் தொகுதிகளின் எண்ணிக்கை 543ஆக அதிகரிக்கப்பட்டது (ம.தொ. 54.8 கோடி).
  • மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை வரையறுப்பது மக்கள்தொகை வேகமாக அதிகரிக்கும் மாநிலங்களுக்குச் சாதகமாக இருந்தது; எனவே, அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறை செய்யப்படக் கூடாது என்று 1976இல் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • அனைத்து மாநிலங்களும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கால அவகாசமாக இதைக்கருதலாம். ஆனால், 2001இல் இந்தத் தடை மேலும் 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2026 வரை நீட்டிக்கப்பட்ட வேண்டியதானது. எனினும், 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், 2002இல்தொகுதிகளின் எல்லைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டன; எண்ணிக்கை மாற்றப்படவில்லை.
  • 2026க்குப் பிறகு 2031இல்தான் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்; எனவே, 2032இல் தான் அடுத்த தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கோவிட்-19காரணமாகத் தள்ளிப்போன 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பே இன்னும் நடத்தப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
  • 1971க்குப் பிந்தைய கடந்த ஐந்து தசாப்தங்களில் இந்திய மக்கள்தொகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் மிகஅதிகமாகவும் தென் மாநிலங்களில் குறைவாகவும் மக்கள்தொகை அதிகரித்துள்ளது.
  • எனவே, இப்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை மேற் கொள்ளப்பட்டால், அதுவும்மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குப் பாதகமாகவே அமையும்; 1976இல் தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப் பட்டதன் நோக்கம் நிறைவேறாது என்று விமர்சிக்கப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories