- பட்டியல் இனத்தவர், பழங்குடிகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளைத் தடுக்க இயற்றப்பட்ட சட்டத்தின் வீரியம் நீர்த்துப்போகும் வகையில், கடந்த ஆண்டில் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது.
- ஆனால், இந்தச் சட்டம் ஏதோ தவறான வகையில் பயன்படுத்தப்படுவது போன்ற பிரச்சாரங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், இடைப்பட்ட காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடும் அச்சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் அமைந்துவிட்ட நிலையில், தன்னுடைய இப்போதைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்த கீழமை நீதிமன்றங்களுக்கு அது உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம்
- ‘வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார் தரப்பட்டு கைது செய்யப்பட்டவரைப் பிணையில் விடுதலை செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், அவர்களுக்குப் பிணை விடுதலை தரலாம், புகாருக்கு உள்ளானவரை மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளரின் அனுமதி பெறாமல் கைதுசெய்யக் கூடாது, புகாருக்கு உள்ளானவர் அரசு ஊழியராக இருந்தால், அவருடைய மேலதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் கைதுசெய்யக் கூடாது, எல்லா புகார்களும் உண்மைதானா என்று உறுதிசெய்துகொள்ள பூர்வாங்க விசாரணை செய்ய வேண்டும்' என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் ‘விதிகள்' என்ற பெயரில் நிபந்தனைகளை விதித்திருந்தது.
- இதைக் கண்டித்து, 2018 ஆகஸ்ட்டில் தலித்துகளும் பழங்குடிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கம் நீர்த்துவிடாதவகையில் நாடாளுமன்றத்தில் சட்டமியற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.
தீர்ப்பு
- வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு அரசு கோரியது. அதை ஏற்க அந்த அமர்வு மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து, வழிகாட்டு விதிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
- இதை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வை இதற்காக நியமித்திருக்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான தகவல்களை மறுஆய்வுசெய்த உச்ச நீதிமன்றம், சமூகத்தில் நிலவும் யதார்த்த நிலைக்கு ஏற்பத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, ஆண்டுகள் பல கடந்தும் நிலைமையில் மாற்றமில்லை என்பதையும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இச்சட்டப்படி புகார் அளிக்கக்கூடத் தயங்குகின்றனர் என்பதையும் ஒருவழியாகப் புரிந்துகொண்டிருக்கிறது
- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்களைப் பெற்றதும் அரசு ஊழியராக இருந்தால் மேலதிகாரியிடமும் மற்றவர்களாக இருந்தால் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளரிடமும் அனுமதி பெற்ற பிறகே கைதுசெய்ய வேண்டும் என்ற தங்களுடைய உத்தரவு, சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றத்தின் செயலில் தலையிடுவதாகும் என்றும் உச்ச நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது.
- இந்த உணர்தல்கள், புரிதல்களுக்குப் பிறகே புதிதாக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
நன்றி: இந்து தமிழ் திசை (10-10-2019)