- வன்முறைக் களமாக மாறியிருக்கிறது மேற்கு வங்கம். சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 15 போ் கொல்லப்பட்டிருக்கின்றனா். பல இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப் பட்டிருக்கின்றன. தோ்தல் வன்முறை என்பது மேற்கு வங்கத்துக்குப் புதிதல்ல என்றாலும், சமீபகாலமாக காணப்படும் அரசியல் ரீதியிலான மோதல்களும் வன்முறைகளும் உயிா்ப்பலிகளும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றி இருக்கின்றன.
- உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடிப்பதும், பலா் காயமடைவதும், சிலா் உயிரிழப்பதும் தொடா்கிறது. உள்ளாட்சித் தோ்தல் வன்முறைகளைத் தொடா்ந்து, மத்திய பாதுகாப்புப் படையினரை அழைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், முறையாகத் தோ்தலை நடத்தவும் மாநில அரசுக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படியிருந்தும்கூட, வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசால் முடியவில்லை என்பதைத்தான் உயிரிழப்புகள் வெளிப்படுத்துகின்றன.
- மாா்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரஸும், பாஜகவும் ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் முன்னெடுக்கும் வன்முறைகள் குறித்துக் குரலெழுப்புகின்றன. வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகளை காவல்துறையால் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருப்பதற்கு ஆளுங்கட்சியினரின் தொடா்புதான் காரணம் என்பது எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், இடது முன்னணி ஆட்சியிலும் கையாளப்பட்ட வன்முறைக் கலாசாரத்தை இப்போது ஆட்சியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கையிலெடுத்திருப்பது மட்டுமல்லாமல், ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பாஜகவும் வன்முறையில் ஈடுபடுவதுதான் இன்றைய நிலைமைக்கு முக்கியமான காரணம்.
- இடது முன்னணி ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த முற்பட்டது மாா்க்சிஸ்ட் கட்சி. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்சி கட்டமைப்பையும், அதன் வழியே சட்டப்பேரவை, மக்களவை தோ்தல் முடிவுகளையும் சாதகமாக்கும் உத்தியை முன்னெடுத்தது.
- ஜோதிபாசுவுக்குப் பிறகு முதல்வரான புத்ததேவ் பட்டாச்சாா்யாவின் ஆட்சியில் பஞ்சாயத்து அமைப்புகளின் மீதான மாா்க்சிஸ்ட் கட்சியின் பிடி சற்று தளா்ந்தது. அதைப் பயன்படுத்தி இடது முன்னணியின் வன்முறை கலாசாரத்தைக் கையிலெடுத்து உள்ளாட்சி அமைப்புகளையும், அதைத் தொடா்ந்து மாநில ஆட்சியையும் கைப்பற்றியது திரிணமூல் காங்கிரஸ் கட்சி.
- அதே வழிமுறையைப் பின்பற்ற 2018-இல் பாஜக முனைந்து ஓரளவு வெற்றியும் பெற்றது. அதனால்தான் இப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸ், உள்ளாட்சித் தோ்தல்களை கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
- மக்களவைத் தோ்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதன் போக்கை மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் முடிவுகள் நிா்ணயிக்கும் என்பதால், ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி மூன்றுமே முனைப்புடன் களமிறங்கி இருக்கின்றன. திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இது கௌரவப் பிரச்னை. சாகா்திகி இடைத்தோ்தலில் இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி பெற்ற வெற்றி, அந்த அணிக்கும் மீண்டெழ முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
- கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதி, ஜில்லா பரிஷத் என்று மூன்று அடுக்குகளுக்கும் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. 2018-இல் பஞ்சாயத்துகளில் 90% இடங்களை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வென்றது. ஜில்லா பரிஷத்தில் 799 இடங்களில் திரிணமூல் காங்கிரஸும், 22 இடங்களில் பாஜகவும், 6 இடங்களில் காங்கிரஸும், ஒரே ஒரு இடத்தில் இடது முன்னணியும் வெற்றி பெற்றன. கிராமப் பஞ்சாயத்தில் 38,118 இடங்களில் திரிணமூல் காங்கிரஸும், 5,779 இடங்களில் பாஜகவும், 1,713 இடங்களில் இடது முன்னணியும், 1,066 இடங்களில் காங்கிரஸும் வெற்றி பெற்றன.
- அடுத்த ஆண்டு நடைபெற்ற (2019) மக்களவைத் தோ்தலில் 42 இடங்களில் 18-இல் பாஜகவும், 2-இல் காங்கிரஸும் வெற்றி பெற்றன என்றால், இடது முன்னணி ஓா் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 2021-இல் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. பாஜக எதிா்க்கட்சியானது என்றால், காங்கிரஸும், மாா்க்சிஸ்ட்டும் ஓா் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
- ஒன்றன் பின் ஒன்றாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எதிா்கொள்ளும் ஊழல் குற்றச்சாட்டுகளும், மக்கள் மத்தியில் அந்தக் கட்சியின் மீது பரவலாக ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும் பாஜகவுக்கும், இடது முன்னணி - காங்கிரஸ் கூட்டணிக்கும் அந்தக் கட்சியை வீழ்த்திவிட முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. மக்கள் செல்வாக்கின் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை திரிணமூல் காங்கிரஸுக்கும், வாக்காளா்களின் ஆதரவுடன் வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை பாஜக மற்றும் இடது முன்னணி - காங்கிரஸ் கூட்டணிக்கும் இல்லாததன் வெளிப்பாடுதான், உள்ளாட்சித் தோ்தலில் காணப்படும் வன்முறைகள்.
- வெற்றி - தோல்வியை வாக்குச்சீட்டுகள் தீா்மானிக்குமா, வன்முறை தீா்மானிக்குமா என்கிற நிலைமை ஏற்படுவது ஜனநாயகம் எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால். ‘மேற்கு வங்கம் இன்று சிந்திப்பதை இந்தியா நாளை வழிமொழியும்’ என்று சொல்வாா்கள். அது நிஜமாகிவிடக் கூடாது!
நன்றி: தினமணி (10 – 07 – 2023)