கரோனாவும் ஆண்-பெண் விகிதமும்
- உலகெங்கும் கரோனா ஆண்-பெண் பேதமில்லாமல் கிட்டத்தட்ட சரிசமமாகப் பரவிவருகிறது. ஆனால், இதற்கும் விதிவிலக்காக இரண்டு நாடுகள் இருக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும்தான் அவை.
- இந்தியாவில் உறுதிசெய்யப்பட்ட தொற்றுகளில் 6,771 பேரில் 76% ஆண்கள். பாகிஸ்தானில் உறுதிசெய்யப்பட்ட தொற்றுகளில் 4,601 பேரில் 72% ஆண்கள். ‘குளோபல் ஹெல்த் 50/50’ என்ற அமைப்பு 40 நாடுகளிடமிருந்து திரட்டிய தரவுகளிலிருந்து இந்தத் தகவல் தெரிய வந்திருக்கிறது.
- கிரேக்கத்தில் 1,955 தொற்றாளர்களில் 55% ஆண்கள்; இத்தாலியில் 1,43,626 தொற்றாளர்களில் 53% ஆண்கள்; சீனாவில் 81,907 பேரில் 51% ஆண்கள்; ஜெர்மனியில் 1,18,235 தொற்றாளர்களில் ஆண்களும் பெண்களும் 50:50 என்ற விகிதத்தில் இருக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தானுக்கு நேர்மாறு தென் கொரியா.
- 10,450 பேரில் 60% பெண்கள். 18 நாடுகளிலிருந்து கிடைத்த தரவுகளின் படி கரோனாவால் பெண்களைவிட இரண்டு மடங்கு ஆண்கள் இறந்திருக்கிறார்களாம்.
வயதான பணியாளர்களைக் காப்போம்!
- மருத்துவ இதழான ‘லான்செட்’ சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்றால் அந்த வயதுக்குக் கீழே உள்ளவர்களைவிட 4 மடங்கு அதிகம் இறப்பு ஏற்படும் என்பது தெரியவந்திருக்கிறது.
- இதுவே 70 வயதுக்கும் மேலே என்றால் 12 மடங்கு வாய்ப்பு இருக்கிறது.
- இந்த மருத்துவ உண்மை வேறுசில விஷயங்களை உணர்த்துகிறது. கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போன்ற மருத்துவத் துறையினர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் குறிப்பிடத் தகுந்த அளவில் இருக்கிறார்கள்.
- இத்தாலியில் மருத்துவத் துறையினரில் 20% பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
- ஆகவே, மருத்துவப் பணியாளர்கள் தொடங்கி தூய்மைப் பணியாளர்கள் வரை வயதானவர்களை கரோனா பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்ற கூக்குரல் உலகெங்கும் ஒலிக்கிறது. தற்காப்பு உடைகள், முகக்கவசம் போன்றவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில் அவர்களெல்லாம் உயிரைப் பணயம் வைத்துதான் கரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.
- ஆகவே, கூடுமானவரை வயதானவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது.
நன்றி: தி இந்து (16-04-2020)