TNPSC Thervupettagam

வயிற்றுப்போக்கு: அலட்சியம் கூடாது

July 16 , 2023 545 days 667 0
  • காய்ச்சல், தலைவலி, சளி போன்று அனைவருக்கும் ஏற்படும் பொதுவான நோயே வயிற்றுப்போக்கு. சராசரியாக, பெரியவர்கள் ஆண்டுக்கு நான்கு முறையும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் சுமார் பத்து முறையும் வயிற்றுப்போக்கு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ‘வயிற்றுப்போக்கு நமக்குத் தீவிர உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தாது; மிகுந்த சங்கடத்தையும் அசௌகரியத்தையும் மட்டுமே அளிக்கும்’ என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
  • ஆனால், மன அழுத்தம், வேலைப் பளு, தூக்கமின்மை காரணமாக இன்றைய இளைஞர்களுக்கு ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு அவர்களை உடல்ரீதியாக பாதிப்பதோடு, அவர்களின் வேலைத் திறனை குறைத்து, பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது.

வயிற்றுப்போக்கு

  • உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையின்படி, அதிக நீரோடு மலம் தளர்வாக வெளியேறினாலோ ஒரு நாளில் மூன்று முறைக்கு மேலே மலம் கழித்தாலோ அது வயிற்றுப்போக்கு. வயிற்றுப்போக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தால், அது ‘நீடித்த வயிற்றுப்போக்கு’ (Persistent Diarrhea). மலத்தில் ரத்தம் கலந்திருந்தால், அது வயிற்றுக்கடுப்பு. இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் வயிற்றுப்போக்குக்குச் சிகிச்சை அவசியம்.

எதனால் ஏற்படுகிறது?

  • வயிற்றுப்போக்கு நோய்கள் ஏற்படுவதற்கு இது மட்டுமே காரணம் என வரையறுக்க முடியாது. பல்வேறு காரணிகள் வயிற்றுப்போக்கைத் தூண்டலாம். பொதுவாக, பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. உணவு ஒவ்வாமை, சுகாதாரக் குறைபாடு போன்ற காரணிகளாலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இவை தவிர ஆன்டிபயாடிக் மருந்துகள், ஆன்டாசிட்கள், உயர் ரத்த அழுத்த மருந்துகள் உள்ளிட்டவையும் வயிற்றுப்போக்குக்கான பொதுவான காரணங்கள்.
  • இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் வயிற்றுப்போக்குக்கு இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (IBS), வயிற்றுப்புண் (Ulcerative colitis), பெருங்குடல் அழற்சி (Crohn’s disease) போன்றவை காரணங்களாக இருக்கலாம். மன அழுத்தம், மனப் பதற்றம், பயணங்கள், தூக்கமின்மை, மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்றவற்றின் காரணமாகவும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சில வகைப் புற்றுநோய்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.

பாதிக்கப்படும் குழந்தைகள்

  • குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு தீவிரமானது. அவர்களுக்கு நீரிழப்பு விரைவாக ஏற்படும் என்பதால், மருத்துவரின் கண்காணிப்பு உடனடித் தேவை. தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் சாத்தியம் அதிகம். ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இருப்பினும், குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணமாகத் தொற்றும், சுகாதாரக் குறைபாடும் உள்ளன. சர்க்கரை அதிகம் உள்ள பானங்களாலும் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில், 17 கோடிப் பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்’ என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த இறப்புகளில் பெரும்பாலானவற்றைப் பாதுகாப்பான குடிநீர், சுத்தம், சுகாதாரம் போன்றவற்றை வழங்குவதன் மூலம் தடுத்திருக்க முடியும்.

நீர்ச்சத்துக் குறைபாடு

  • வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடே, நாம் எதிர்கொள்ளும் முதல் பாதிப்பு. இது மிகுந்த ஆபத்தானதும்கூட. நமது உடலானது 60 சதவீதம் நீரால் நிறைந்துள்ளது. தொடரும் வயிற்றுப்போக்கால், மலத்தின் வழியே இந்த நீர் முழுமையாக வெளியேறிவிடும். நீர் மட்டுமல்லாமல், அதனுடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான Electrolytes எனும் நுண்சத்துகளும் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்றவை) வெளியேறும். நுண்சத்துகளின் வெளியேற்றம் காரணமாக, நமது உடலின் அமில – காரச் சமநிலை பாதிப்படையும். இதனால் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தும் உண்டு.

ஊட்டச்சத்துக் குறைபாடு

  • வயிற்றுப்போக்குக் காலகட்டத்தில் நாம் சாப்பிட்ட உணவு செரிக்காது என்பதால், நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போக நேரிடும். ஊட்டச்சத்து போதாமையை ஈடுகட்ட, நமது உடலிலுள்ள ஊட்டச்சத்துகள் பயன்படுத்தப்படும். வரவின்றிச் செலவு மட்டும் செய்யப்படுவதால், நமது உடலின் ஊட்டச்சத்துகள் விரைவில் தீர்ந்துவிடும். இது நம்மை ஊட்டச்சத்துக் குறைபாடு நிலைக்கு இட்டுச் செல்லும்.

சிகிச்சை

  • 95 சதவீத வயிற்றுப்போக்குப் பாதிப்புகள் ஒரு சில நாள்கள் (மூன்று நாட்கள்) மட்டுமே நீடிக்கும். இந்தப் பாதிப்புகளுக்கு எவ்விதச் சிகிச்சையும் பெறாமல் வீட்டிலிருந்தே குணமடைந்துவிட முடியும். இருப்பினும், வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றை ஈடுகட்டுவதற்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள நீராகாரங்கள் அதிகம் தேவைப்படும். உப்பு, சர்க்கரை கலந்த நீர், உப்பு கலந்த கஞ்சி, இளநீர், சர்க்கரை அதிகம் கலக்காத பழச்சாறுகள், ஒ.ஆர்.எஸ். பானங்கள் போன்றவற்றை அதிகம் பருகுவது பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும். பாதிக்கப்பட்டவருக்கு நீர்ச்சத்துக் குறைபாடு தீவிரமாக இருந்தால் அல்லது மயக்கநிலையை அடைந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

தடுக்கும் வழிகள்

  • சுத்தமும் சுகாதாரமுமே வயிற்றுப்போக்கைத் தடுப்பதற்கான சிறந்த வழி. நம் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது இதன் முதல் படி. வேகவைக்கப்படாத இறைச்சி, பிற உணவு வகைகள் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் பாக்டீரிய வகைகளைக் கொண்டிருக்கலாம். எனவே, சமையலறையில் சுகாதாரமும் தூய்மையும் மிகவும் முக்கியம்.
  • சமையலறையின் மேற்பரப்பைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருள்களை முறையான வகையில் சேமித்து வைக்க வேண்டும். முக்கியமாக, புகைபிடித்தலையும், மது அருந்துவதையும் அறவே தவிர்க்க வேண்டும்; மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்; போதுமான அளவு தூங்க வேண்டும்.

யாருக்கு ஏற்படலாம்?

  • சுகாதாரமற்ற இடங்களில் வசிப்பவர்கள்.
  • அசுத்தமான நீரைக் குடிப்பவர்கள்.
  • ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.
  • குறைவான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்கள்.
  • தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள்.
  • எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

அறிகுறிகள்:

  • எரிச்சலான மனநிலை
  • கண்ணீர் சுரப்பது குறைவது
  • வாய், நாக்கு உலர்தல்
  • அதீதத் தாகம்
  • சிறுநீர் கழிப்பதில் சிரமம்
  • தீவிர நிலையில் தூக்கம் அல்லது மயக்கம் ஏற்படுவது

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?

  • வயிற்றுப்போக்கு மூன்று நாள்களுக்கு மேல் நீடிப்பது
  • 24 மணி நேரத்துக்குள் வயிற்று வலி தீவிரமடைவது
  • அடிக்கடி குமட்டல் அல்லது வாந்தி
  • மலத்தில் ரத்தம்
  • உலர்ந்த ரத்தம் கொண்ட மலம் (காபி நிறத்தில் இருப்பது)
  • அதீதத் தாகம்
  • வாய் உலர்தல்
  • பேசவோ பார்க்கவோ இயலாமை
  • மனக் குழப்பம்
  • சுயநினைவிழப்பு
  • சருமமும் கண்களும் மஞ்சள் நிறமாதல்
  • வலிப்பு ஏற்படுவது
  • பிறப்புறுப்பில் வீக்கம்
  • பொதுவாக, குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களுக்கும் வயிற்றுப்போக்கு மிகவும் ஆபத்தானது. இவர்கள் மருத்துவர்களை உடனே சந்திப்பது ஆபத்தைத் தவிர்க்கும்.

நன்றி: தி இந்து (16 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories