- பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11இல் நிறைவடைகின்றன. விளையாட்டு உலகின் மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுவதும் பதக்கங்களை வெல்வதும் விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் லட்சியம்.
- இம்முறை இந்தியா சார்பாக மகளிர் பிரிவில் 47 வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் அதிகமாகப் பங்கெடுத்துவருகின்றனர். அவர்களில் பலர் பதக்கங் களை வென்று வரலாறு படைத்திருக்கிறார்கள்; புதிய பாதை அமைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றிய தொகுப்பு:
முதன் முதலாக
- பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் 1952ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் இந்தியா சார்பில் பெண்கள் முதன் முதலாகப் பங்கு பெற்றனர்.
- சுதந்திர இந்தியாவின் முதல் தடகள வீராங்கனையாக நீலிமா கோஷ் 1952 ஒலிம்பிக்கில் 100 மீ ஓட்டப்பந்தயத்திலும், 80 மீ தடை ஓட்டத்திலும் பங்குபெற்றார்.
- ஓட்டப் பந்தய வீராங்கனைகளைத் தவிர்த்து நீச்சல் பிரிவில் டோலி நசீர், ஆரத்தி சாஹா ஆகியோரும் இந்தியா சார்பாகக் கலந்துகொண்டனர்.
- பாரிஸ் ஒலிம்பிக் நிகழ்வு களைப் பதிவு செய்யும் முதல் இந்தியப் பெண் ஒளிப்படக் கலைஞராக அசாமைச் சேர்ந்த கீதிகா தாலுக்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பில்கிஷ் மிர் இந்தியாவின் முதல் பெண் நடுவராக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்குபெறுகிறார்.
பால் புதுமையர் அணி
- ஒலிம்பிக் போட்டிகளில் கடந்த முறை அகதிகள் அணி தனியாகப் பங்கேற்றதைப் போல் இந்த முறையும்பால் புதுமையர் அணி (எல்ஜிபிடிக்யூ ) பங்கேற்கிறது. பால் புதுமையர் அணியைச் சேர்ந்த 154 வீரர், வீராங்கனைகள் போட்டி களில் பங்கெடுக்கின்றனர். ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவில் பால் புதுமையர் பிரதிநிதித் துவப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
பதக்க சாதனை
- 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் பிரிவில் கர்னம் மல்லேஸ்வரி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையை அவர் பெற்றார்.
- 2002ஆம் ஆண்டுக்குப் பின் 10 வருடங்கள் கழித்து பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கமும், மகளிர் குத்துச் சண்டைப் பிரிவில் மேரி கோம் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
- 2016 ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மல்யுத்தப் பிரிவில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்
- 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில்தான் இந்தியப் பெண்கள் அதிக அளவில் பதக்கங்களை (3) வென்று சாதனை படைத்தனர்.
- மீராபாய் சானு பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோ ஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- பாட்மிண்டன் பிரிவில் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் இரண்டு தனி நபர் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையையும் சிந்து பெற்றார்.
- 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிவரை முன்னேறி இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியது. அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்த ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனுடன் போராடி தோல்வி அடைந்தது. இது இந்திய ரசிகர்களால் வெற்றிக்கரமான தோல்வியாகப் பார்க்கப்பட்டது.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 07 – 2024)