- உலக வரலாற்றில் எத்தனையோ நிகழ்வுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் பெரும்பகுதி இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்தான் நிகழ்ந்திருக்கின்றன. வரலாற்றின் கொடுமைகள் இந்திய விடுதலை காலத்தின் எல்லாப் பக்கங்களிலும் அழுந்திக் கிடக்கின்றன. அப்படி ஒரு நிகழ்வுதான் இந்தியாவின் நெற்றியில் செந்திலகமாகவும் பிரிட்டனின் முகத்தில் கரும்புள்ளியாவும் நிலைத்துப் போன ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்வு.
- வாணிபத்திற்காகத்தான் இந்தியாவே தவிர ஆள்வதற்காக அல்ல என்பதுதான் ஆங்கிலேயர்களின் முதல் நோக்கமாக இருந்தது. ஆனால் நடந்தது வேறு. கொடூர ஆயுதங்களாலும் கொடிய யுத்த தந்திரங்களாலும் தங்களைப் பெருவீரர்கள் என்று கருதிக் கொண்ட ஜெனரல்கள் இந்தியாவின் அப்பாவி மக்கள்மீது தங்களின் ஏகாதிபத்தியத்தை எல்லைகடந்து செலுத்தத் தொடங்கினர்.அடக்குமுறை தலைவிரித்தாடியது.
- 1757 ஜூன் 23 அன்று 900 ஆங்கிலேயர்களையும், 2,000 இந்தியர்களையும் கொண்ட ஒரு படையைக் கொண்டு வங்காளத்தின் பிளாசி வயல்வெளியில் மழைவெள்ளத்தோடு ரத்த வெள்ளத்தைக் கலந்துதான் இந்தியாவின் மீதான பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைக் கர்னல் ராபர்ட் கிளைவ் நிறுவ நேர்ந்தது. இத்தகு கொடுமைகள் எல்லாம் பின்னால் வந்த ஜெனரல்களுக்கு சாகசக் கதைகளாகக் கூறப்பட்டன.
- திருவள்ளுவர் சுட்டுகிற கொலைமேற்கொள்ளுதலில் முன்னின்றது பிரிட்டிஷ் அரசு. இந்தக் கொடுமையை மாவீரம் என்று மார்தட்டிக் கொண்டதுதான் அவலத்திலும் அவலம்.
- வன்முறைக்கு மாற்று வன்முறையாகாது. அது நிரந்தரத் தீர்வும் தராது. அறிவுடையோர் செயலாக அது இருக்காது என்ற கருத்துகளையுடைய மகாத்மா காந்தியடிகள் அகிம்சை முறையில் சத்தியாகிரகப் போரைத் தொடங்கினார். வெள்ளையருக்கு எதிராக அகிம்சையை மேற்கொண்டதால் அவர் வெற்றியடைய முடிந்தது.
- பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்மீது காந்தியடிகளும் அத்துணை நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அவருக்கே கடுஞ்சோதனைகளை உருவாக்குபவர்களாக பிரிட்டிஷ் ஜெனரல்கள் விளங்கினார்கள். எதற்கும் கட்டுப்படாத மூர்க்கக் குணம் நிறைந்தவர்களாகத் திகழ்ந்த அவர்கள் இந்தியர்களைப் பெருங்கொடுமைப்படுத்தினர்.
- பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு இணங்கிச் செல்வது என்பது காந்தியடிகளின் போராட்ட முறையில் ஒரு பெரிய உத்தியாகவே தொடக்கத்தில் இருந்தது. அதுபோலவே அவர்களுடைய சட்டங்களையும் மாண்புகளையும் மதிப்பதிலும் அவர் எக்காலத்தும் தவறியதில்லை. அவற்றை எதிர்ப்பதிலும் கூட அறவழியிலான அமைதி முறையையே அவர் பெரிதும் பின்பற்றினார்.
- மிதவாதம் என்றழைக்கப்பட்ட அம்முறையால் முதலாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு இணக்கமான சூழலை ஏற்படுத்தினார். நாம் அவர்களுக்கு உதவுகிறபோது அவர்களும் நமக்கு உதவுவார்கள் என்று நம்பினார்.
- ஆனால் பாம்பின் பல்லிருந்து பால் வடியுமென்று எதிர்பார்க்க முடியுமா? காந்தியடிகள் சுயராஜ்ஜிய ஆயுதத்தைக் கையிலெடுத்தார். முன்புபோலவே கொடுங்கோன்மையை அதிகரிப்பதற்காக வஞ்சக பிரிட்டிஷ் அரசு 1919-ஆம் ஆண்டு ரெளலட் சட்ட முறையை அறிமுகப்படுத்தியது. சர் சிட்னி ரெளலட் என்பவர் பெயரில் அமைந்த இந்த சட்டம் சுதந்திரம் என்று பேச்செடுப்போரின் குரல்வளையை நசுக்கத் தொடங்கியது.
- காந்தியடிகள் இதற்கு மாற்றான ஒரு புதிய போராட்ட முறை குறித்துச் சிந்தித்தபோது அவர் மனத்தில் உதித்ததுதான் ஹர்த்தால் எனப்படுகிற அமைதியான வேலைநிறுத்த உத்தி. இதுதான் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகவும் இருந்தது. இதற்கு 1919 ஏப்ரல் 7ஆம் நாளை அவர் தீர்மானித்திருந்தார்.
- அதன்படி, இந்திய மக்கள் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்திருந்த ரெளலட் சட்டத்தை எதிர்ப்பார்கள். அமைதியாக எதிர்ப்பார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டார். மானுடக் கொடுமைகளின் நாயகமாக கொடுமைகளின் கொடுமையாக வரலாற்றுக் கொடுமைகளின் உச்சமாக அமைந்ததுதான் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்னும் பஞ்சாப் படுகொலை.
- காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று, நாடு முழுவதும் போராட்டங்கள் அமைதியான முறையிலேயே நடந்தன. 1919 மார்ச் 29 அன்று பஞ்சாப் மாநிலத்தின் அமிருதசரஸ் நகரத்தில் உள்ள ஜாலியன்வாலா பாக் திடலில் மக்கள் பெருங்கூட்டமாகத் திரண்டனர். அதற்கடுத்தநாள் மாபெரும் கடையடைப்புப் போராட்டம் நடந்து பெருவெற்றியாயிற்று. பொதுமக்கள் தாங்களே முன்வந்து ஆர்வத்துடன் இப்போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
- இடையில் சில துயர நிகழ்வுகளும் அரங்கேறின என்றாலும் இந்திய மக்களின் போராட்ட வெற்றியும் அதன் தொடர்ச்சியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குப் பெரும் அதிர்ச்சியை உருவாக்கின. இன்னொரு வாய்ப்பாக ஆண்டுதோறும் தாங்கள் கொண்டாடுகிற வைசாக நாள் விழாவுக்காகவும் ஜாலியன்வாலா பாக் பூங்காவில் ஆயிரக்கணக்கில் மக்கள் அமைதியாகக் கூடி விட்டனர். பகைகொண்டு காத்திருந்த ஏகாதிபத்தியப் பாம்புக்கு இது இரையாக்கப்பட்ட கதையாயிற்று.
- அமிருதசரஸின் போர்க்கால சட்ட அமலாக்க அதிகாரி பிரிகேடியர் ஆர். இ. டையர் தலைமையில் சிப்பாய்கள் அந்தச் சிறிய குறுகலான பூங்காவின் வாயில்களை அடைத்துக் கொண்டனர். எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் விடுக்காமல் இயந்திரத் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். சுடவேண்டாம் என்று கரங்களை உயர்த்தியபடி மக்கள் அலறியும் எந்தப் பலனுமில்லை.
- பத்து நிமிடம். 1,650 சுற்று துப்பாக்கிச் சூடு. 1,516 பேர் உயிரிழந்தனர். இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட இந்தக் குருதிவெள்ளம் இந்தியத்தாயின் நெற்றியில் இட்ட செந்திலகமாக ஆனது; பிரிட்டிஷ் வெள்ளை முகத்தில் அழியாத கரும்புள்ளியாகிப் போனது.
- இந்தக் கொடுமையைப் பற்றி, பஞ்சாப் மாகாண வர்த்தக சபை டெபுடி சேர்மனும் அமிருதசரஸ் ஃப்ளோர் அண்டு ஜெனரல் மில்ஸ் கம்பெனியின் மேலாண்மை இயக்குநருமாகிய கிர்தரிலால் தனது வாக்குமூலத்தில், "சிப்பாய்கள் துப்பாக்கிகளுடன் ஜாலியன்வாலா தோட்டத்திற்கு ஓடினர். ஹான்ஸ்லி என்கிற உயரமான இடத்தில் நின்று கொண்டனர். உடனே சுடுவதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. ஜனங்களுக்கு யாதொரு எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை.
- பத்து நிமிடம் விடாமல் சுட்டனர். நூற்றுக்கணக்கான ஜனங்கள் உடனே மாண்டனர். அவ்விடத்தில் சுமார் பதினைந்தாயிரம் ஜனங்கள் கூடியிருந்தனர். அவர்களில் பலர் வைசாக உற்சவம் கொண்டாட வந்தவர்கள். அந்த ஜாலியன்வாலா தோட்டத்திற்கு வரும் வழிதோறும் ஜனங்களின்மேல் குண்டுகள் மழைபோல் விழுந்தன. ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓடும்பொழுது மிதிபட்டிறந்தோர் பலர்.
- தரையில் படுத்துக்கொண்டவர்களும் சுடப்பட்டார்கள். முடிவில் சுடுவதை நிறுத்தி அவ்விடத்தை விட்டுத் துருப்புகள் சென்றன. இறந்தவர்களையும் காயம்பட்டு வீழ்ந்து கிடப்போரையும் கவனிக்கக்கூட சர்க்கார் எந்த ஏற்பாடும் செய்யவில்லை' என்று பதிவு செய்கிறார்.
- இந்தக் கொடுமையைத் தொடர்ந்து நடந்ததுதான் மேலும் கொடுமை. அதுவும் அவருடைய வாக்குமூலத்தில் தொடர்கிறது. "பதினான்காம் தேதி டெபுடி கமிஷனர் ஒரு கூட்டம் கூட்டினார். அவர் இரண்டு நிமிடம்தான் பேசினார். உடனே ஜெனரல் டையர் தன் பரிவாரங்களுடன் அங்கு தோன்றினார். அவர் நின்று கொண்டு பேசினதால் நாங்களெல்லாரும் நிற்கும்படியாகி விட்டது.
- "ஜனங்களே நான் ராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய், உங்களுக்குச் சண்டை செய்வதில் பிரியமா அல்லது சமாதானமாயிருக்க இஷ்டமா? சண்டைபோட இஷ்டமாயின் கவர்ன்மெண்ட் சித்தமாயிருக்கிறார்கள். இல்லாவிடில் என் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து நடங்கள். கடைகளை உடனே திறக்க வேண்டும். இல்லாவிடில் சுடுவேன். எனக்கு பிரான்ஸ் தேசச் சண்டைக்களமும் அமிருதசரஸும் ஒன்றுதான்.
- நான் ராணுவச் சிப்பாய். நினைத்த காரியத்தைச் சிறிதும் தவறாது முடிப்பேன்' என்று இத்தனை கொடுமைகளுக்குப் பின்னரும் சற்றும் மனம் வருந்தாது கொடுங்கோன்மையோடு கொக்கரித்திருப்பது வரலாறு.
- இந்தத் திமிர்ப் பேச்சினைத் தொடர்ந்து மைல்ஸ் இர்விங் இன்னும் கடுமையாக, "நீங்கள் ஜெனரலின் உத்தரவைக் கேட்டீர்கள். பட்டணம் முழுவதும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தார் உங்களிடத்தில் மிகவும் கோபம் கொண்டிருக்கிறார்கள். உங்களால் சர்க்காரை எதிர்க்க முடியாது. சர்க்காருக்கு விரோதமாய்ப் பேசுவோர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்' என்று தங்கள் சர்வாதிகாரத்தின் திமிரை வெளிக்காட்டியதும் வரலாறு.
- இதற்கப்புறம் ஆங்கில ஜெனரல்கள் தொடங்கிச் சிப்பாய்கள் வரையிலும் இந்தக் கொடுங்கோன்மையைத் தங்களுக்குரிய பதக்கங்களாக அணிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர்.
- வெள்ளையரை இந்தியாவிலிருந்து வெளியேற்றி விட்டோம். ஆனால் அவர்கள் ஏற்படுத்திய ஏகாதிபத்தியக் கொடுங்கோன்மை இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இன்னும் ஒழிந்தபாடில்லை. மானுடத்திற்கு எதிராகக் கொக்கரிக்கிற இராக்கதமாகிய அதனை நாம் வெல்வதற்கு ஜாலியன்வாலா பாக்கை கணந்தோறும் மனத்தில் நிறுத்துவது நம் கடமை.
- இன்று (ஏப். 13) ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்வு நாள்.
நன்றி: தினமணி (13 – 04 – 2023)