TNPSC Thervupettagam

வரலாற்றில் மதமாற்றம்

April 10 , 2023 652 days 578 0
  • மதம், சாதி என்பன தாயின் கருவில் இருக்கும்போதே உறுதிப்படுத்தப்பட்டுவிடுகின்றன. இவற்றுள் மதம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கது. சாதியோ இறக்கும்வரை தொடர்வதுடன் அடக்கம் செய்யும் இடத்தின் வழியே, இறப்புக்குப் பின்னரும் தன்னை நினைவு படுத்திக் கொண்டிருப்பது.
  • இவ்வகையில், மதமானது சாதியைவிடச் சற்று நெகிழ்வுத்தன்மை உடையதாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும். அத்துடன் சாதியைப் போன்றே ஒரு குழும அடையாளத்தையும் வழங்கும் தன்மையது. சைவர், சமணர், பௌத்தர், வைணவர், சீக்கியர், கிறித்துவர், இஸ்லாமியர் என்கிற மதங்கள் அவற்றைப் பின்பற்றுவோரின் மத அடையாளங்களாக மட்டுமின்றிக் குழும அடையாளங்களாகவும் விளங்குகின்றன.
  • இதனால் ஒருவர் தனது மதத்தைத் துறந்து மற்றொரு மதத்தைத் தழுவும்போது, அவர் ஏற்கெனவே பெற்றிருந்த குழும அடையாளத்தை இழந்து புதிய குழும அடையாளத்தைப் பெற்றுவிடுகிறார். இதுவே மதமாற்றத்தின் முக்கியக் கூறாகும்; இது ஒருவகையான அடையாள மாறுதலாக அமைகிறது. மதமாற்றமானது, தனிமனித மதமாற்றம், குழும மதமாற்றம் என இரண்டு வகைப்படும்.

தனிமனித மதமாற்றம்:

  • தனிமனிதன் ஒருவன் தன்னிச்சையாகத் தனித்தோ குடும்பத்துடனோ தன் மதத்திலிருந்து விலகி, வேறொரு மதத்தைத் தழுவுதல் தனிமனித மதமாற்றமாகும். இது ஆன்மிகக் காரணத்தின் அடிப்படையிலோ உலகியல் காரணங்களின் அடிப்படையிலோ நிகழலாம்.
  • தன் சமயத்தின் தத்துவம், இறையியல் என்பனவற்றை மற்றொரு சமயத்தின் தத்துவம், இறையியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து, மதம் மாறுவது ஆன்மிகக் காரணம். பொக்காஷியா என்பவரின் கதை ஒன்றில் இடம்பெறும் நற்குணமிக்க யூதர் ஒருவரின் மதமாற்றம், சற்று மாறுபாடான ஆன்மிகக் காரணத்தை உள்ளடக்கியது.
  • யூதரின் நண்பரான கத்தோலிக்கர் ஒருவர், அவரைத் தம் மதத்தில் சேரும்படி அடிக்கடி வற்புறுத்திவந்தார். அவரோ கத்தோலிக்கத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் வாடிகன் நகரில் சிறிது காலம் தங்கி போப், கார்டினல்கள், குருக்கள் என்போரின் வாழ்க்கையைக் கண்டறிந்த பின்னர் முடிவெடுப்பதாகக் கூறிவிட்டார்.
  • ஒருநாள் அந்த யூதர் தம் கழுத்தில் சிலுவையுடன் காட்சியளித்தார். அவர் கூறியபடி வாடிகன் சென்றாரா, அவரை மதம் மாறச்செய்த உந்துசக்தி எது என்று அவரது கத்தோலிக்க நண்பர் வினவியதற்கு, அவர் அளித்த விடை இதுதான்: “போப், இத்தனை கார்டினல்கள், குருக்கள் ஆகியோர் அனைவரும் சேர்ந்தும் இம்மதத்தை அழிக்க முடியவில்லையே! அப்படியானால், இம்மதத்தில் ஓர் ஆற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.”
  • உலகியல் காரணம்:
  • ஒரு பயன் கருதி (திருமணம், வேலைவாய்ப்பு, கல்வி) மதம் மாறுவது உலகியல் காரணங்களுக்கான மதமாற்றமாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெண்களின் சொத்துரிமையானது மதம் சார்ந்து இருந்தது. இந்து சொத்துரிமைச் சட்டப்படி ஒருவர் தம் சொத்துக்களைத் தனது மகள்களுக்குக் கொடுக்க முடியாது.
  • இதிலிருந்து விடுபடும் வழிமுறையாக வளம்படைத்தவர்களில் ஒரு சிலர் கிறித்துவர்களாக மதம் மாறினர். ஏனென்றால், கிறித்துவர்களின் சொத்துரிமைச் சட்டத்தின்படி பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு. இவை மட்டுமின்றி, அடக்குமுறைக்குப் பயந்தும் மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை குழும மதமாற்றங்களாகவே அமையும்.

மன்னராட்சியில் மதமாற்றம்:

  •  மன்னராட்சிக் காலத்தில், சில மன்னர்கள் தாம் பின்பற்றும் மதத்தையே குடிமக்களும் பின்பற்ற வேண்டும் என வற்புறுத்தியதால் விருப்பமின்றியே மன்னரது மதத்தையே மக்களும் பின்பற்ற வேண்டியிருந்தது. மாற்று மதத்தினர் மன்னர்களால் கொல்லப்பட்டதும் உண்டு. மௌரியப் பேரரசில் படைத் தளபதியாக இருந்த புஷ்யமித்திரன் என்பவர், தன் அரசரைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • அசோகர் பௌத்த மதத்தைத் தழுவிய பின், மௌரியர் ஆட்சியில் வேள்விகள் தடைசெய்யப்பட்டிருந்தன. வேள்விகளை நடத்தும் குடியில் பிறந்தவரான புஷ்யமித்திரன் ஆட்சியைக் கைப்பற்றியதும் ஆயிரக்கணக்கான பௌத்த பிட்சுக்களின் தலையை வெட்டிக் கொன்றார். உயிருக்கு அஞ்சிய பௌத்தர்கள் பலர் வைதிக சமயத்தைத் தழுவினர். தமிழ்நாட்டில் இன்றும்கூட தமிழ்ச் சமணர்கள் வாழ்கின்றனர். (‘சீவகசிந்தாமணி’யைப் பதிப்பிக்கும்போது இவர்களின் துணையை உ.வே.சாமிநாதர் ஐயர் பெற்றுள்ளார்.)
  • ‘நயினார்’ என்கிற பின்னொட்டை இவர்களில் சிலர் இட்டுக்கொள்வது உண்டு. வட்டார ஆட்சியாளர்கள் சிலர் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தியபோது, இவர்கள் சைவர்களாக மாறியுள்ளனர். ‘நீறு பூசிய நயினார்’ என்று இவர்களை அழைக்கும் வழக்கம் முன்பிருந்துள்ளது.

குழும மதமாற்றம்:

  • ஒரு மதக் குழுவினர் ஒரு குழுமமாக மதம் மாறுவதே குழும மதமாற்றமாகும். இது ஆன்மிகக் காரணங்களுக்காக அன்றிப் பெரும்பாலும் தம் சமூகத்தின் பாதுகாப்பு கருதியே நிகழும். 16ஆம் நூற்றாண்டில் ராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரைப் பகுதியில் வாழ்ந்துவந்த தொன்மையான கடலோடிகளான பரதவர்கள், அரேபிய மூர்களின் தாக்குதலுக்கு ஆளாயினர். அவர்களிடமிருந்து பரதவர்களைப் பாதுகாத்த போர்த்துக்கீசியர்களின் விருப்பத்தின்படி பரதவர் சமூகம் முழுவதும் கத்தோலிக்கத்தைத் தழுவியது.
  • ஆதிக்க சாதியினர், காவல் துறையினர் ஆகியோரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறை யாகத் தென்காசி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் வாழ் தேவேந்திரகுல வேளாளர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இது தொடர்பாக இம்மக்களிடம் நிகழ்த்திய நேர்காணல்கள், ‘மதமும் மதமாற்றமும்’ என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இதைப் படிக்கும்போது இம்மதமாற்ற நிகழ்வுக்குப் பாதுகாப்பு வேட்கையே காரணமாக இருந்துள்ளது புலப்படுகிறது.
  • மதம் என்பது ஒரு மனிதரின் தனிப்பட்ட உரிமை; அதே நேரத்தில் அது அரசியல். சமூகம், கல்வி என்பனவற்றில் ஆதிக்கம் செலுத்த முனையும்போது சமூக அமைதியைக் குலைக்கிறது. இவ்வகையில் திட்டமிட்ட மதமாற்றங்களை மேற்கொள்வோரும் மதம் மாறும் உரிமையைப் பறிக்க முன்வருவோரும் சமூக அமைதிக்கு எதிரானவர்களாகி ஒரே வட்டத்துக்குள் நிற்கிறார்கள் என்பதே உண்மை.

நன்றி: தி இந்து (10 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories