TNPSC Thervupettagam

வரலாற்று தீர்ப்பு!

September 26 , 2024 5 hrs 0 min 14 0

வரலாற்று தீர்ப்பு!

  • நாகரிகத்தின் வளர்ச்சி என்பது பலவீனர்களை ஒரு சமுதாயம் எப்படி நடத்துகிறது என்கிற அடிப்படையில்தான் அமையும் என்பது அண்ணல் காந்தியடிகளின் பார்வை. சிறப்பு பாதுகாப்பு தேவைப்படும் பிரிவினரை ஒவ்வொரு சமுதாயமும் அவ்வப்போது அடையாளம் கண்டு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வழிமுறைகளை உருவாக்குகிறது. அதற்கு சட்ட அங்கீகாரமும் வழங்குகிறது. இந்திய அரசியல் சாசனம் அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.
  • என்னதான் சட்டரீதியான பாதுகாப்புகள் வழங்கப்பட்டாலும்கூட பாதிக்கப்பட்டவர்களும், சாமானியர்களும் தொடர்ந்து இருந்து வருவதும், அதை பல்வேறு காரணங்களால் சமுதாயம் அடையாளம் காணாமல் இருப்பதும் தொடர்கிறது. அதன் காரணமாக தாங்கள் செய்யாத, தங்களுக்குத் தொடர்பில்லாத குற்றங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் பாதிக்கப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான பகுதியினர், ஒரு பாவமும் அறியாத குழந்தைகள். பெரியவர்களின் தவறுகளில் இருந்து பாதுகாப்புப் பெறும் நியாயமான உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
  • "போக்ஸோ' எனப்படும் (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) 2012 சட்டமும், 2015 சிறார் நியாய சட்டமும் (ஜுவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட்) இந்தக் குறையை ஓரளவுக்கு நிரப்பியது என்றாலும்கூட, குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை. முதலாவது சட்டம் தவறிழைக்கப்பட்ட குழந்தைகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று வரையறுத்தது என்றால், இரண்டாவது சட்டம் பாலியல் தாக்குதலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுடன், தவறிழைத்தவர்களுக்கான தண்டனையை வரையறுத்தது.
  • குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துவரும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் மிக முக்கியமானது பாலியல் தாக்குதல். கைக்குழந்தைகள் முதல் வளரிளம் பருவம் வரையிலான எல்லா சிறாரும் இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நடக்கும் எத்தனையோ சம்பவங்கள் உணர்த்துகின்றன.
  • சிறார்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களுக்கு எதிராக "போக்úஸô' சட்டம் கொண்டுவரப்பட்டது முழுமையான தீர்வாக அமையவில்லை. குழந்தைகள், சிறார்கள் சார்ந்த பாலியல் காட்சிகளை மின்னணு உபகரணங்களில் பாதுகாப்பதும், ரகசியமாகப் பார்ப்பதும், பகிர்ந்து கொள்வதும் "போக்úஸô' சட்டத்தின் அடிப்படையிலோ, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையிலோ குற்றமாக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை வழங்கியிருக்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
  • சிறார்களின் நிர்வாணப் படங்கள், சிறார்கள் தொடர்புடைய பாலியல் காட்சிகள் ஆகியவற்றை ரகசியமாகப் பார்ப்பதும், பாதுகாப்பதும், பகிர்ந்துகொள்வதும் குற்றம்தான் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. அப்படிப்பட்ட படங்களையும், காட்சிகளையும் பாதுகாப்பது, அவற்றைப் பகிர்ந்துகொள்ளும் உத்தேசத்தில்தான் என்று கருதி நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
  • தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் தலைமையில் அமைந்த மூன்று பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பை நீதிபதி ஜெ.பி.பார்திவாலா எழுதினார். அதில் இந்தியாவின் நீதிபரிபாலனம் குறித்த மிக முக்கியமான சில பார்வைகள் அடங்கியிருக்கின்றன. "புதிய பாதை வழங்கியிருக்கும் தீர்ப்பு' என்று அதை தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
  • சிறார்களை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதும், கேமராவில் படம் எடுத்து அதைப் பார்ப்பதும் வேறு வேறு அல்ல என்கிறது தீர்ப்பு. "இரண்டுக்குமே பொதுவான நோக்கம் துன்புறுத்தல்தான். பாலியல் துன்புறுத்தலுக்கு சிறார்களைப் பயன்படுத்துவதும், அவர்களின் உரிமையை அவமதிப்பதும் இந்த செயல்களின் நோக்கம்' என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது. குழந்தைகளின் நிர்வாணப் படங்களை பார்ப்பது எந்தவிதத்திலான அநீதி என்பதை நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் விவரித்திருக்கிறார்கள் - "பாலியல் செயல்பாடு ஆரம்பம் மட்டும்தான். கேமராவில் படம் எடுப்பதன் மூலம் குழந்தை மீதான வன்முறை தொடர்கிறது. இணையத்தைப் பயன்படுத்தும் யாருக்கு வேண்டுமானாலும் அந்தப் படங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவற்றை பலர் பார்க்கின்றனர். தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை, அறிமுகம் இல்லாத பலர் பார்க்கிறார்கள் என்பது அந்த குழந்தைக்கு தெரியாது. பல ஆண்டுகளுக்கு பிறகு அந்தக் குழந்தைக்குத் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்வோம். குழந்தைப் பருவத்தில் திக்குத் தெரியாமல் இழைக்கப்பட்ட பாலியல் அநீதி ஒருபுறம். வயதான பிறகு ஏற்படும் உளவியல் பாதிப்பு வாழ்க்கை முழுவதும் அந்தக் குழந்தையின் தன்மானத்தையே தகர்க்கும்''.
  • "சிறார்களின் பாலியல் ரீதியிலான நிர்வாண படங்களைப் பாதுகாப்பதும், பகிர்ந்துகொள்வதும் "போக்úஸô' சட்டத்தின் 15-ஆம் பிரிவின்படியும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67(பி) - பிரிவின்படியும் தண்டனைக்குரியது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏன் கருதவில்லை?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
  • குழந்தைகளின் நிர்வாண படங்கள் (சைல்ட் போர்னோகிராபி) என்கிற வார்த்தையை அகற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக "சிறார்களை உடல் ரீதியாக, தவறாக பயன்படுத்தியதன் அடையாளங்கள் (சைல்ட் செக்ஷுவல் எக்ஸ்ப்ளாய்டேட்டிவ் அண்ட் அப்யூஸிவ் மெட்டீரியல்) என்று "போக்ஸோ' சட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
  • இந்தத் தீர்ப்பை இந்தியாவில் உள்ள எல்லா நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் உச்சநீதிமன்றத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்!

நன்றி: தினமணி (26 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories