TNPSC Thervupettagam

வரவிருக்கும் சென்னையின் வெள்ளக் காலம்!

October 6 , 2024 110 days 160 0

வரவிருக்கும் சென்னையின் வெள்ளக் காலம்!

  • ஆவணி முடிந்து புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் எனப் பருவமழைக் காலம் தொடங்க இருக்கிறது. சென்னை சந்திக்கும் பெரும் அச்சுறுத்தல் மழை. கடந்த ஆண்டு பெருமழையில் சென்னை தத்தளித்ததைப் பார்த்தேன். பெருமழை நின்ற நேரத்தில், வெள்ளத்தைக் கடந்து நான் இருக்கும் பகுதியின் முதன்மைச் சாலைக்கும், சுற்றி இருக்கிற பகுதிகளுக்கும் சென்று பார்த்தேன். பல வீடுகளின் முதல் தளத்தின் பாதி, முன்வாசல், வீட்டு முன் நின்ற மூழ்கிய கார்கள், இருசக்கர வாகனங்கள் எனப் பெரும் பாதிப்பு.
  • கடந்த வாரம், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் மூத்த பொறியாளர் சங்கம் வெளியிட்டிருக்கிற ‘சென்னைப் பெருமழை – வெள்ளச் சேதங்கள் பற்றி அறிவியல், பொறியியல் அடிப்படையிலான அலசல்’ என்கிற சிறு வெளியீட்டை வாசித்தேன். நதிநீர்ப் பிரச்சினை, கட்டுமானப் பொறியியல், சென்னையின் பாதிப்புகள் குறித்துத் தொடர்ந்து ஆக்கபூர்வமான கருத்துகளையும் வெளியீடுகளையும் இவ்வமைப்பு வெளியிட்டிருக்கிறது.
  • இச்சிறு நூல், வெவ்வேறு காலங்களில், குறிப்பாக மழை வெள்ளத்தால் சென்னை நெருக்கடியையும் பாதிப்பையும் எதிர்கொண்ட காலங்களில் வெளியான அரசின் அறிவிப்புகள், அறிஞர்களின் கருத்துகள், பத்திரிகைச் செய்திகள், பொதுப்பணித் துறையின் திட்டங்கள், சென்னையின் பாதிப்புகள் குறித்த செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது.
  • சென்னையின் பெரும்பாதிப்புக்குக் காரணம், 1884ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கொண்டுவந்த ‘River Conservancy Act’ முன்வைக்கும் ஷரத்துகளைப் புறந்தள்ளியதுதான். ஆற்றுப் புறம்போக்கு, ஓடைப் புறம்போக்கு, ஏரிப் புறம்போக்குகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் அரசுக் கட்டிடங்கள் இன்றைக்கு அமைந்திருக்கின்றன. சென்னையில் கூவம் ஆற்றின் கரைகளில் பன்மாடிக் கட்டிடங்கள். கடந்த 50 ஆண்டுகளாக மிகுதியான நகரமயமாதல், திட்டமிடப்படாத கட்டுமானங்கள், கால ஒழுங்கில் அமையாத நீர் நிலைகளின் பராமரிப்பின்மை, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் செல்லும் கால்வாய்கள், வாய்க்கால்கள் அடைக்கப்பட்டமை, அல்லது தூர்ந்துபோன நிலைமை, நீர்நிலைகளில் இருந்து கடலுக்குச் சென்று சேரும் நீர்ப்பாதைகளும் தொடர்ச்சி அறுந்து, திசைதிருப்பப்பட்டு, அடைக்கப்பட்டிருக்கிற சூழல் குறித்தெல்லாம் அக்கறையுடன் பேசுகிறது நூல்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஒரு நகரம் வெள்ளத்தில் மிதந்து, உயிர்களையும் உடைமைகளையும் பறிகொடுத்து, தடுமாறி மீண்டெழுந்து, மறுபடியும் தன் வரலாற்றுப் பெருமைகளைப் பூரிப்புடன் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, நகரத்துக்கு அதன் குடிகள் கொடுக்கும் தண்டனை.
  • நகரத்தின் பெருமை என்பது அதன் கட்டிடங்களாலும் கடந்த கால வரலாற்று நினைவுகளாலும் பெருமைகளாலும் மட்டுமல்ல. நிகழ்கால மனிதர்களுக்கு நகரம் தரும் அணுக்கமும், பாதுகாப்பும், வாழ்வதற்குத் தகுதியுடையதாக இருப்பதும்தான். அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக இருக்கிற வாளொன்றின் பெருமையைப் பேசுவதுபோல் அல்ல; ஒரு நகரத்தின் பெருமையைப் பேசுவது.
  • வாழ்வைத் தொலைத்தவர்களும், புது வாழ்வின் கனவுகள் சுமந்து வருபவர்களுக்கும் தன் கற்பனைகளுக்குச் சிறகு தேடி வருபவர்களுக்கும் அடையாளம் தேடிவரும் அடையாளமற்ற முகங்களுக்காகவும் மனிதர்கள் என்ற ஒரே திரைச்சீலையின்கீழ் உறங்கவும் வாழவும் மகிழவும் வரும் பல லட்சம் மனிதர்களின் கனவு நகரம் சென்னை. சென்னையைக் காப்பது சமத்துவத்தைக் காப்பது. சென்னையின் மறுபெயர் சமத்துவம்தானே!

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories