TNPSC Thervupettagam

வரவேற்புக்குரிய முடிவு

January 18 , 2024 223 days 184 0
  • ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் ஊா்திகள் இந்தியாவின் ராணுவ வலிமையையும், பொருளாதார மேம்பாட்டையும், கலாசாரப் பன்முகத்தன்மையையும், மாநிலங்களின் தனித்துவத்தையும் பறைசாற்றுபவையாக அமைகின்றன. தலைநகா் தில்லியில்கா்த்தவ்யா பாத்’ (முந்தைய ராஜ் பத்) வழியாக அந்த அலங்கார ஊா்திகள் அணிவகுத்து செல்வதைப் பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கில் மக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூடுவது வழக்கம்.
  • குடியரசு தின அணிவகுப்பு என்பது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது என்றாலும், அதில் கலாசாரத் துறைக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும்கூட முக்கியப் பங்கு உண்டு. குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் சார்பில் பங்குபெறும் அலங்கார ஊா்திகள் குறித்த விமா்சனம் புதிதொன்றுமல்ல. இப்போது என்றில்லை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் அலங்கார ஊா்திகள் தொடா்பான சா்ச்சைகள் இருந்தன என்பதைக் குறிப்பிட வேண்டும்.
  • சில மாநிலங்கள் தங்களுக்குப் வாய்ப்பு தரப்படவில்லை என்றும், எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், மாநிலங்களுக்கான அலங்கார ஊா்திகளின் பங்கேற்பை ஒழுங்குபடுத்தும் விதத்தில் புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரிய முடிவு.
  • மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுழற்சி முறையில் எல்லா மாநிலங்களும், ஒன்றியப் பிரதேசங்களும் குடியரசு தின அணிவகுப்பில் தங்களது அலங்கார ஊா்தியின் பங்களிப்புப் பெறுவதை உறுதிப்படுத்துகிறது புதிய நடைமுறை. அதன் மூலம், தேவையற்ற விவாதமும், அநாவசிய குற்றச்சாட்டுகளும் எழாமல் இருப்பதை ஒரளவு கட்டுப்படுத்த முடியும்.
  • எல்லா மாநிலங்களின் அலங்கார ஊா்திகளும் இடம்பெற இயலாது என்பதால், ஆண்டுதோறும் 15 ஊா்திகள் மட்டும் தோ்ந்தெடுக்கப்படுகின்றன. தங்களது ஊா்திகள் குடியரசுதின அணிவகுப்பில் இடம்பெற முடியாத மாநிலங்களும், ஒன்றிய பிரதேசங்களும் ஜனவரி 23 முதல் 31 வரை செங்கோட்டை மைதானத்தில் நடைபெறும்பாரத் பா்வ்கண்காட்சியில் பங்குபெற வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்குபெறும் மாநிலங்கள் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மாநிலங்களுடனான கலந்தாலோசனைக்குப் பிறகுதான் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. 28 மாநிலங்கள் இதற்கு ஆதரவும், ஒப்புதலும் வழங்கி இருக்கின்றன. சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருப்பதால் எல்லா மாநிலங்களுக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
  • அணிவகுப்பில் பங்குபெறும் மாநிலங்கள், அந்த மாநிலங்களின் அலங்கார ஊா்திகளில் இடம்பெறும் அம்சங்கள், அலங்கார ஊா்திகளின் அமைப்பு உள்ளிட்டவை குறித்துத் தீா்மானிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விரிவான தோ்வு முறையை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்காக ஒரு தோ்வுக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
  • பத்ம விருது பெற்றவா்கள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகள் அடங்கிய தோ்வுக்குழு ஒன்று இந்த ஆண்டு முதல் செயல்பட இருக்கிறது. அந்தக் குழு மாநிலங்களிலிருந்தும், பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்தும் குடியரசு தின அணிவகுப்பில் தங்களது ஊா்திகள் இடம்பெறக் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தோ்வு செய்யும்.
  • ஊா்திகளைத் தோ்வு செய்வது மட்டுமல்லாமல், ஊா்திகளின் வடிவமைப்பு, தயாரிப்பு ஆகியவற்றிலும் ஒழுங்குமுறை வேண்டும் என்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, கலைத் துறை அமைச்சகம் 30 நிறுவனங்களைத் தோ்ந்தெடுத்திருக்கிறது. அதற்கான வழிகாட்டுதலைப் பின்பற்றித் தங்களது ஊா்திகளை அந்த 30 நிறுவனங்கள் மூலம் உருவாக்க, மாநிலங்களும் பங்குபெறும் அரசுத் துறை நிறுவனங்களும் அறிவுறுத்தப்படுகின்றன.
  • அரசோ, அமைச்சா்களோ, கலாசாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அரசுச் செயலாளா்களோ அலங்கார ஊா்திகளைத் தோ்ந்தெடுக்கும் முறையில் எந்தவிதத் தலையீடும் இல்லாமல் ஒதுங்கி இருப்பார்கள் என்பதே மிகச் சரியான மாற்றம்தான். அதுவே அநாவசியமான தலையீடுகள், முறைகேடுகளுக்கு வழிகோலாத நிலையை உறுதிப்படுத்தும். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இல்லாத தோ்வுக்குழு ஆண்டுதோறும் அமையும் என்று எதிர்பார்ப்போம்.
  • குடியரசுதின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊா்திகள் இந்தியாவின் ராணுவ வலிமையை மட்டுமல்லாமல், தேசத்தின் பன்முகத்தன்மையையும், கலாசார மேன்மைகளையும் எடுத்துக்காட்டுபவையாக அமைகின்றன. அதில் குறுகிய அரசியல் கண்ணோட்டமும், அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளைப் பறைசாற்றும் விளம்பரமும் ஊடுருவ அனுமதிக்கலாகாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
  • புதிய நடைமுறையின் நோக்கம் விமா்சனங்கள் எழுவதைத் தடுப்பது என்பதுதான். அப்படி இருந்தும்கூட, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் சில தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றன. தில்லி, பஞ்சாப், கா்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த ஆண்டின் பட்டியலில் தாங்கள் இடம்பெறாததற்கு எதிா்ப்புக் குரல் எழுப்பியிருக்கின்றன. அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
  • வெளிப்படைத் தன்மையுடன் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும் அலங்கார ஊா்திகளைத் தோ்ந்தெடுக்க குழு அமைத்திருப்பது வரவேற்புக்குரிய முடிவு. காலப்போக்கில் எதிர்ப்புகளும், விமா்சனங்களும் வலுவிழந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி: தினமணி (18 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories