TNPSC Thervupettagam

வருங்கால வைப்பு நிதிக்கும் வருமான வரியா?

February 4 , 2021 1445 days 835 0
  • வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு ஓராண்டில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் அதற்கும் வரி விதிக்கப்படும் என்று 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பாஜக ஆட்சியில் வருங்கால வைப்பு நிதியின் மீது வரிவிதிக்கும் இரண்டாவது முயற்சி இது. ஏற்கெனவே 2016-17ம் ஆண்டுக்கான நிதியறிக்கையில் வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப் பெறும்போது அதன் 60% தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • பின்பு, அந்தத் திட்டம் திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இப்போது வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வருமான வரி விதித்திருப்பதால், தொழிலாளர்களின் பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்பு ஒன்றுக்குக் கதவடைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் மாத ஊதியம் வாங்கும் தொழிலாளர்களில் பெரும் பகுதியினருக்கு வருங்கால வைப்பு நிதியொன்றே அவர்களது முக்கியமான சமூகப் பாதுகாப்பாக இருந்துவருகிறது. அதன் காரணமாகவே அதற்கு வருமான வரிச் சலுகையும் வழங்கப்பட்டுவருகிறது.
  • நிதியறிக்கையின் புதிய அறிவிப்புகள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் பயனாளிகளுக்குப் பாதகமாக அமைந்திருக்கின்றன. ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் திட்டங்களிலும் குறைகள் இல்லாமல் இல்லை.
  • வருங்கால வைப்பு நிதி விதிமுறைகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றாத இளம் வயதுத் தொழிலாளர்களைப் பாகுபாட்டுடன் நடத்துவதாகவே அவை அமைந்துள்ளன.
  • கரோனா பெருந்தொற்றின் காரணமாக வேலையிழப்பைச் சந்தித்துள்ள தனியார் துறைத் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியின் விதிமுறைகள் மேலும் துயரம் விளைவிப்பவையாகவே இருந்தன.
  • வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் இணையும் தொழிலாளி ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார். அல்லது, ஐந்தாண்டுகளுக்கு முன்பே அந்தத் தொழிலாளி வேலையிலிருந்து விலகுகிறார் என்றால், அவருடைய விலகலானது உடல்நலமின்மையின் காரணமாக இருக்க வேண்டும்.
  • இல்லாவிட்டால், அந்தத் தொழிலை நடத்துபவரே அந்த வேலையைக் கைவிட்டிருக்க வேண்டும் அல்லது வேலையிலிருந்து விலக எடுக்கப்பட்ட முடிவானது தொழிலாளியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
  • இந்த நிபந்தனைகள் பூர்த்தியாகாத பட்சத்தில், வேலைக்குச் சேர்ந்து ஐந்தாண்டுகளுக்குள் வருங்கால வைப்பு நிதியிலிருந்து எடுக்கப்படுகிற தொகையானது வருமான வரிக்கு உட்படுத்தப்படும்.

பெருந்தொற்றின் பாதிப்பு

  • கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். பணிவழங்குநரே வேலையை விட்டு நீக்கினால் அந்தத் தொழிலாளர் தனது வருங்கால வைப்பு நிதி நிலுவையைத் திரும்பப் பெற இயலும்.
  • அதே நேரத்தில், ஒரு தொழிலாளி தானே பணியிலிருந்து விலகிய பிறகு ரூ.50,000-க்கு மேல் வருங்கால வைப்பு நிதியைக் கோரினால், அவர் வருமான வரியைச் செலுத்த வேண்டும் என்பது கட்டாயம்.
  • பெருந்தொற்றுக் காலத்தில் தொழிலாளர்கள் தங்களது மூன்று மாத கால அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, வருங்கால வைப்பு நிதியில் 75% இவற்றில் எது குறைவோ அதைத் திரும்பச் செலுத்தத் தேவையில்லாத முன்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது.
  • பெருந்தொற்றால் பொருளாதாரம் முடங்கிக் கிடந்த சூழலில், ஊதியக் குறைப்பை அனுபவித்த தொழிலாளர்களுக்கு இந்த வாய்ப்பு ஒரு பெரும்பேறாக இருந்தது. அவ்வாறு வருங்கால வைப்பு நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளும் தொகைக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று கூறப்பட்டது.
  • எனினும், திரும்பச் செலுத்தத் தேவையில்லாத வருங்கால வைப்பு நிதி முன்பணத்துக்கு வரி உண்டா இல்லையா என்பது குறித்து எந்தத் தெளிவும் ஏற்படுத்தாதது குழப்பங்களை விளைவித்தது.

வேலையின்மையின் சவால்கள்

  • பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு வலுவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எதுவுமில்லை. சில நாடுகள் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காலகட்டத்துக்கான காப்பீட்டையும்கூட வழங்குகின்றன.
  • இதற்கான மிகச் சிறந்த உதாரணமாக அமெரிக்காவைச் சொல்லலாம். ஒரு தொழிலாளர் வேலைவாய்ப்பு இல்லாதபோது, அந்நிலைக்கு அவர் ஒரு காரணமாக இல்லையென்றால், அவருக்குக் காப்பீட்டுச் சலுகையைப் பெறுவதற்கான முழுமையான தகுதி உண்டு.
  • கனடாவைப் பொறுத்தவரை, வேலையை இழந்த தொழிலாளர், மற்றொரு வேலையை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இருந்தாலும் காப்பீட்டுச் சலுகையைப் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்.
  • இந்தியாவில் இப்படிப்பட்ட எந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் இல்லை. குறைந்தபட்சம், வருங்கால வைப்பு நிதியிலிருந்து வட்டியில்லாமல் முன்பணம் பெறுவதற்கான வாய்ப்பையாவது வழங்க வேண்டும்.
  • ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதான் வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம் என்ற விதிமுறையை அப்படியே நீட்டித்தாலும்கூட எதிர்பாராத மருத்துவச் செலவுகள், பெருந்தொற்று, குழந்தைகளின் கல்விச் செலவுகள், திருமணச் செலவுகள், வசிப்பதற்கான வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் போன்ற அத்தியாவசியக் காரணங்களுக்காவது அந்நிதியை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டியது அவசியம்.
  • கரோனா பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து மீண்டுவருவதற்கான திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கும்போது, தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் நிலவிவரும் குழப்பங்களையும் தெளிவின்மைகளையும் சரிசெய்ய வேண்டும்.
  • குறிப்பாக, வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டங்களில் பங்களிப்புகளுக்கு வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்புகளை நீக்க வேண்டும்.

அனைவருக்கும் பாதுகாப்பு

  • வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பே நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின்படி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளன. இதன் மூலம் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் 40 கோடித் தொழிலாளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதற்கேற்ப, வருங்கால வைப்பு நிதி அமைப்பும் தனது பணிகளை மறுவடிவமைப்புக்குத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். முக்கியமாக, அமைப்புசாரா தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் இணையும்போது அதற்கான பங்களிப்பைச் செலுத்துவது யார், என்ன விகிதம் என்ற கேள்விகளுக்கும் இன்னும் விடையளிக்கப்படாமலேயே உள்ளது.
  • அமைப்புசார்ந்த தொழிலாளர்கள் தங்களது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கே இவ்வளவு விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கையில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இத்திட்டங்கள் அணுக எளிதாக இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
  • தொழிலாளர்களின் பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்பு ஒன்றுக்குக் கதவடைக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் வருங்கால வைப்பு நிதியின் மீது வரிவிதிக்கும் இரண்டாவது முயற்சி இது.

நன்றி: இந்து தமிழ் திசை (04-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories