- எல்லா நாடுகளும் தங்கள் நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளச் சின்னங்களை பாதுகாப்பதில் மட்டுமல்லாமல், அவை குறித்து வெளிநாட்டினருக்கு தெரிவித்து, சுற்றுலாப் பயணிகளைக் கவருவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் புராதனமான உலகில் வேறெங்கும் காண முடியாத கட்டடக்கலை அதிசயங்கள் பல இருந்தும், அவை குறித்த புரிதல் நம்மவர்களுக்கே இல்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
புராதனச் சின்னங்கள்
- புராதனச் சின்னங்களை போற்றிப் பாதுகாப்பதன் மூலம்தான் எந்த ஓர் இனமும் தனது வரலாறு குறித்துப் பெருமிதப்பட முடியும். இந்தியாவிலுள்ள கோயில்கள், உன்னதமான கலை நுணுக்கங்களுடன் கூடிய கட்டடக்கலையின் உச்சம். கோயில்கள் மட்டுமல்லாமல் கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும், சிற்பங்களும் பண்டைய பாரதத்தின் உன்னதத்தை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவை குறித்து வெளிநாட்டினருக்குத் தெரிந்திருக்கும் அளவுக்குக்கூட இன்றைய தலைமுறை இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது.
- இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, இந்தியாவில் 3,693 வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் மிக அதிகமான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் உத்தரப் பிரதேசத்தில்தான் (743) காணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, கர்நாடகத்திலும் (506), தமிழகத்திலும் (413) தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
- கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான வந்தனா சவாண், மாநிலங்களவையில் ஒரு கேள்வியை எழுப்பினார். தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் பாதுகாப்பில் இருக்கும் நினைவுச் சின்னங்களில், எத்தனை சின்னங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதுதான் அவரது கேள்வி. இதற்கு பதிலளித்த கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் திடுக்கிடும் பதிலை வழங்கியிருக்கிறார். மத்திய அரசால் பாதுகாக்கப்படும் 300-க்கும் அதிகமான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்கிற உண்மையை மறைக்காமல் வெளியிட்டதற்கு அமைச்சரைப் பாராட்ட வேண்டும்.
ஆக்கிரமிப்புகள்
- இதுவரை பட்டியலில் காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் நடத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்தோ, சட்ட விரோதமாக அங்கே எழுப்பப்பட்டிருக்கும் கட்டடங்கள் குறித்தோ, அதன் பாதிப்புகள் குறித்தோ முறையாக எந்தவிதமான ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார். மொத்தம் 321 வரலாற்றுச் சின்னங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அவற்றில் மிக அதிகமான எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் (75) முதலிடம் வகிக்கிறது. தொடர்ந்து தமிழ்நாடு (74), கர்நாடகம் (48), மகாராஷ்டிரம் (46), ராஜஸ்தான் (22), தில்லி (11) ஆகிய மாநிலங்களில் நினைவுச் சின்னங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
- தமிழகத்தில் நம் கண் முன்னால் இரண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு கி.பி.1502-இல் விஜய நகர அரசர்களின் ஆளுமையில் இருந்தபோது அங்கே போர்த்துக்கீசியர்கள் போர்ட் ஜல்டிரியா என்கிற கோட்டையை எழுப்பினார்கள். 1609-இல் டச்சுக்காரர்கள் அந்தக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். தங்களது காலனிகளில் உள்ள தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணிபுரிவதற்கு 38,441 இந்திய அடிமைகளை 131 அடிமைக் கப்பல்களில் அங்கிருந்து டச்சுக்காரர்கள் ஏற்றி அனுப்பியிருக்கிறார்கள்.
- 1660 வரை டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைநகராக பழவேற்காடு விளங்கியது. டச்சுக்காரர்களின் கோட்டை இப்போது சிதிலமடைந்து, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ஒரு பழைய கலங்கரைவிளக்கம் மட்டும் பழவேற்காட்டின் பழம்பெருமையை பறைசாற்றிக் கொண்டு செயலிழந்து நிற்கிறது. டச்சுக்காரர்களின் கல்லறை ஒன்று பராமரிப்பில்லாமல் இப்போதும் அங்கே காணப்படுகிறது.
தேவனாம்பட்டினம்
- பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர் தமிழகத்தில் முதலில் காலூன்றிய இடம் கடலூர் அருகிலுள்ள தேவனாம்பட்டினம். 1746-இல் பிரிட்டிஷார் அங்கே கெடிலம் ஆற்றங்கரையில் செயின்ட் டேவிட் கோட்டையை எழுப்பினர். ராபர்ட் கிளைவ் இந்தக் கோட்டையில் முதல் கவர்னராக இருந்திருக்கிறார். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முற்பட்டது இந்தக் கோட்டை.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோட்டை தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை.
- ஒரு கிறிஸ்தவ மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் பராமரிப்பில்லாமல் பாழடைந்து கிடக்கிறது. ஏற்கெனவே பல பகுதிகள் சிதிலமடைந்து விட்டன. இன்னும் சில ஆண்டுகளில் கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள செயின்ட் டேவிட் கோட்டை, மண் மூடிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். கூடவே அதன் பின்னணியில் இருக்கும் வரலாறும்.
இவை இரண்டும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே.
- இதுபோல் இந்தியாவில் நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அடையாளச் சின்னங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. கற்பனை செய்து பார்க்க முடியாத சிற்பங்களுடன் கூடிய கோயில்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. இவை பற்றியெல்லாம் கவலைப்பட நமக்கு நேரமில்லை. இப்படியே போனால், வரலாறு நம்மை எள்ளி நகையாடும்!
நன்றி: தினமணி (04-09-2019)