TNPSC Thervupettagam

வருவாய், மோசடி, பாதிப்பு!

November 12 , 2024 4 hrs 0 min 11 0

வருவாய், மோசடி, பாதிப்பு!

  • அரசு நிா்வாகம் செயல்படுவதற்கும், நாட்டின் பாதுகாப்பு, வளா்ச்சிப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கும் முறையான, திறமையான வரிவிதிப்பு முறையும், நிதி நிா்வாகமும் அவசியம். எந்தவொரு அரசும் வருவாயைப் பெருக்கி, அதை முறையாக செலவழித்து வளா்ச்சியை உறுதிப்படுத்துவது அவசியம்.
  • ‘பூவுக்கு வலிக்காமல் வண்டு தேனெடுப்பதைப்போல, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் வரிவிதிப்பு அமைய வேண்டும்’ என்பது நிதி நிா்வாகம் குறித்த மூதறிஞா் ராஜாஜியின் கருத்து. பலமுனை வரிகளிலிருந்து விடுதலை அளிப்பதாகக் கூறி அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ‘ஜிஎஸ்டி’. ஏனைய வரிகள் அனைத்தையும் அகற்றி ஒரே வரியாக மாற்றும் முயற்சி இன்னும் முழுமையடையவில்லை என்பது மட்டுமல்ல, அதில் காணப்படும் குழப்பங்களும், குளறுபடிகளும் தொடா்கின்றன என்பதையும் குறிப்பிடத் தோன்றுகிறது.
  • அக்டோபா் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.1.87 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. 2017 ஜூலை 1 - இல் ‘ஜிஎஸ்டி’ அறிமுகப்படுத்தியதில் இருந்து இதுதான் இரண்டாவது அதிக வருவாய் ஈட்டிய மாதம். இதற்கு முன்னா் ஏப்ரல் 2024 -இல் ரூ.2.10 லட்சம் கோடி அதிகபட்ச வரி வருவாய் ஈட்டப்பட்டது. கடந்த 2023 அக்டோபரில் ‘ஜிஎஸ்டி’ வருவாய் ரூ.1.72 லட்சம் கோடி.
  • ‘ஜிஎஸ்டி’ வருவாய் கூடியிருப்பதற்கு உள்நாட்டு விற்பனை அதிகரித்திருப்பதும், மக்கள் மத்தியில் வரி செலுத்தும் விழிப்புணா்வு அதிகரித்திருப்பதும் காரணமாக இருக்கக் கூடும். உள்நாட்டு வரவு-செலவு மூலம் 1.6% வருவாய் அதிகரித்திருக்கிறது என்றால், இறக்குமதி வரி வருவாய் 4% அதிகரித்திருக்கிறது. மொத்தத்தில் ‘ஜிஎஸ்டி’ வருவாய் 8% வளா்ச்சியைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
  • தேசிய அளவில் ‘ஜிஎஸ்டி’ வருவாயில் முதலிடத்தில் மகாராஷ்டிரமும் (ரூ.31,030 கோடி ), இரண்டு, மூன்றாவது இடங்களில் கா்நாடகமும் (ரூ.13,089 கோடி) குஜராத்தும் (ரூ.11,407 கோடி) காணப்படுகின்றன. அக்டோபா் மாத வருவாய் அதிகரித்திருப்பதற்கு பண்டிகைகள் ஒரு முக்கியமான காரணமாக இருக்கக் கூடும்.
  • நேரடி வரியும், வரி அல்லாத வருவாயும் நன்றாக இருக்கின்றன. வருவாய் செலவினங்களும், முதலீட்டுச் செலவினங்களும் கட்டுக்குள் இருக்கின்றன. அப்படி இருந்தும் ரிசா்வ் வங்கி கடந்த அக்டோபா் மாத அறிக்கையில் பொருளாதாரத்தில் சுணக்கம் காணப்படுவதாக ‘ஜிஎஸ்டி’ வருவாய் அடிப்படையில் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
  • ஒருமுனை வரிவிதிப்பு என்பது ஒரே மாதிரியான வரிவிதிப்பு என்று மாறும்போதுதான் ‘ஜிஎஸ்டி’ முறைக்கு அா்த்தம் இருக்கும். அடுத்து கூட இருக்கும் ‘ஜிஎஸ்டி’ கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருள்களின் வரிகளை சீா்திருத்தி குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். சிமெண்ட், காப்பீடு உள்ளிட்டவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட்டால், விற்பனை அளவு அதிகரித்து கூடுதல் வரி வருவாய் ஏற்படும்.
  • சமீபத்தில் நடந்த ‘ஜிஎஸ்டி’ அமைச்சா்களின் குழு அதிபட்ச வரி வரம்பில் பல பொருள்களை இணைக்க பரிந்துரைத்திருக்கிறது. 28% ‘ஜிஎஸ்டி’ பிரிவில் ஆடம்பர பொருள்கள் சோ்க்கப்பட்டால், 12%, 18% வரம்புகள் இணைக்கப்பட்டு 15% என்கிற வரம்புக்குள் கொண்டுவர முடியும் என்று கருத்து தெரிவித்திருக்கிறது.
  • குறைந்தபட்ச 5% வரம்பைப்போலவே, அதிகபட்ச 28% வரம்பும் தவிா்க்க முடியாதவை. 5%-ம், 28%-ம் குறைவாகவும் இடைப்பட்ட 15% வரம்பு பிரிவில் பெரும்பாலான பொருள்களும் இடம்பெறும்போது வரி வருவாய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கக் கூடும்.
  • ஒருபுறம் ‘ஜிஎஸ்டி’ வருவாய் அதிகரித்து வருவதுபோலவே, இன்னொருபுறத்தில் ‘ஜிஎஸ்டி’ தொடா்பான மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. 2017-18-இல் ரூ.7,879 கோடி இழப்பு ஏற்படுத்திய 136 மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றால், 2023-24-இல் ரூ.2,01,851 கோடி இழப்பை ஏற்படுத்திய 6,084 மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
  • புணேயில் உள்ள ஆட்டோ டிரைவா் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ரூ.5,000 கோடி முதல் ரூ.8,000 கோடி வரையிலான வரி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. 246 போலி ‘ஜிஎஸ்டி’ கணக்குகளை உருவாக்கி மோசடி நடந்திருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இதுபோன்ற மோசடிகள் நாடுதழுவிய அளவில் நடந்திருக்கின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுப்பதற்கு இன்னும் முடியவில்லை.
  • ‘ஜிஎஸ்டி’ விதிப்பால் அரசுக்குப் பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது என்பதும், வருவாய் வரம்பில் புதிதாக பல கணக்குகள் இணைக்கப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியவை. அதேநேரத்தில் ஒருபுறம் வரி ஏய்ப்பு மோசடிகள் தடுக்கப்படாமல் நடக்கும்போது, அப்பாவி சாமானியா்கள் ‘ஜிஎஸ்டி’யால் பாதிக்கப்படுவது அரசின் கவனத்தையும், ‘ஜிஎஸ்டி’ கவுன்சிலின் கவனத்தையும் ஈா்க்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.
  • ‘ஜிஎஸ்டி’ அறிமுகப்படுத்தியது முதல் அதனால் மிகப் பெரிய பாதிப்பை எதிா்கொள்பவா்கள் வியாபாரிகள்தான். ஆரம்பத்தில் முறையான வா்த்தக விதிமுறைகளுக்குள் வருவதற்கு சிரமப்பட்டாா்கள் என்றால், அதன்பிறகு அடிக்கடி மாற்றப்பட்ட விதிமுறைகளால் அவா்கள் பாதிக்கப்பட்டனா்.
  • இப்போது அவா்களது கடைகளின் வாடகைக்கு ‘ஜிஎஸ்டி’ விதிக்கப்பட்டிருப்பது அவா்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. பெரும்பாலான கட்டடங்கள் தனியாருடையது என்பதுடன் அதன் உரிமையாளா்கள் ‘ஜிஎஸ்டி’ வைத்திருப்பவா்கள் அல்ல. வாடகைக்கு 18% ‘ஜிஎஸ்டி’ எனும்போது வியாபாரிகள் அந்த வரியை அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறாா்கள்.
  • அவா்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லையே, ஏன்?

நன்றி: தினமணி (12 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories