TNPSC Thervupettagam

வர்த்தக ஒப்பந்தம்: ஒருசார்பாக எப்போதும் இருக்க முடியாது

September 30 , 2019 1938 days 964 0
  • ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிகுந்த நட்புணர்வுடன் கலந்துகொண்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சு சுமுகமான உடன்பாட்டுக்கு வழிவகுக்கவில்லை.
  • இதற்குக் காரணம், மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா இந்தியச் சந்தையைத் தனக்கு முழுதாகத் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியதும், தனக்குத் தேவைப்படும் பொருட்களின் விலையைக் குறைத்துத் தருமாறு கூறியதும்தான்.
தகவல் தொழில்நுட்பத் துறை
  • தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பொருட்கள் மீது 20% வரியை இந்தியா விதித்ததை விலக்குமாறும், அமெரிக்காவில் தயாராகும் செல்போன்கள், ஈதர்நெட் சுவிட்சுகள் மீதான தீர்வைகளை விலக்கவோ குறைக்கவோ வேண்டும் என்றும் கோருகிறது அமெரிக்கா.
  • மருத்துவத் துறை, பால் பண்ணை மற்றும் வேளாண் பொருட்களுக்கும் இந்தியச் சந்தையைத் திறந்துவிட வேண்டும் என்று அமெரிக்கத் தரப்பு வலியுறுத்தியது.
  • ‘பொது விருப்பப் பட்டியல்படி’ ஜிபிஎஸ் இந்தியப் பண்டங்களுக்கு முன்னர் அளித்த வர்த்தக முன்னுரிமைச் சலுகைகளை மீண்டும் திருப்பியளிக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
  • மேலும் அறிவுசார் சொத்துரிமை, மின்-வணிகம், ‘எச்1பி’ விசா போன்றவையும் பேசி உடன்பாடு காணப்பட வேண்டியிருக்கிறது.
  • இரு தரப்பும் நடத்திய பேச்சுகளில் கருத்து வேற்றுமைகள் குறைக்கப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
  • இந்தியா இறங்கிவந்து விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தாலும், முழுத் திருப்தி கிடைக்கும் வகையில் ஒப்புக்கொண்டால்தான் உடன்பாடு என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.
  • சீனாவுடன் அமெரிக்கா நடத்திவரும் வர்த்தகப் பேச்சுகளிலும் இப்படித்தான் முடிவு இல்லாத முட்டுக்கட்டை நிலை நீடிக்கிறது.
  • சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் மிக அதிகமான வரி விதிப்புகளுக்குப் பதில் சொல்லும் விதமாக அமெரிக்காவுக்கு மிகவும் தேவைப்படும் பொருட்கள் மீது வரியை உயர்த்தி அதைத் திண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
  • எனவேதான், இந்தியாவுடனான உடன்பாட்டையாவது விரைந்து முடிக்க அமெரிக்கா கடந்த வாரங்களில் தீவிரமாகப் பேசியது. ஆனால், தன்னுடைய நிலையிலிருந்து சற்றும் இறங்கிவர அது சம்மதிக்கவில்லை என்பதால் உடன்பாடு ஏற்படவில்லை.
  • இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது. உற்பத்தி, வேலைவாய்ப்பு, நுகர்வு என்று அனைத்துமே சரிந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கப் பண்டங்களுக்குச் சலுகைகள் காட்டப்பட்டால் அது இந்தியப் பொருளாதாரத்தை மேலும் பாதித்துவிடும். அரசியல்ரீதியாகவும் அது இந்திய அரசுக்குச் சாதகமாக இருக்காது.
  • இரு தரப்பு வர்த்தக உடன்பாடுகள் எப்போதுமே சிக்கலானவை. தனது வலிமை காரணமாக ஒரு நாடு இன்னொன்றை அச்சுறுத்திப் பணியவைக்க முயன்றால், அது இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தமாக இருக்காது.
  • இரு நாடுகளுமே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட்டால்தான் ஒப்பந்தம் ஏற்படும். இப்போதைக்கு மிகச் சிறிய அளவில்கூட ஒப்பந்தம் ஏற்படுவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (30-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories