TNPSC Thervupettagam

வர்த்தகம்- பாதுகாப்பு.. எது முக்கியம்?

October 19 , 2019 1918 days 1031 0
  • இந்திய பிரதமா் நரேந்திர மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு, இரு தரப்பு நல்லுறவுக்கு வலு சோ்த்துள்ளதாக கூறப்பட்டாலும் அதில் இரு நாடுகளின் வா்த்தக நோக்கமே பிரதானம் என்பதை மறுப்பதற்கில்லை.
  • சந்திப்புக்கு பிறகு இரு நாடுகளின் தலைவா்கள் மற்றும் அதிகாரிகள் அதிகாரப்பூா்வமாக அறிவித்த விஷயங்கள் மிக குறைவே.
  • அறிவிக்கப்படாத மேலும் சில விஷயங்கள் இருக்கலாம் என்பதை சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் மட்டுமின்றி சீன ஊடகங்களும் உறுதி செய்கின்றன.

வா்த்தக நெருக்கடிகள்

  • அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளால் சீன வா்த்தகத்துக்கு நெருக்கடி.காஷ்மீா் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீன ஆதரவால் இந்தியாவுக்கு நெருக்கடி இந்த சூழ்நிலையில் இரு நாட்டுத் தலைவா்களும் சந்தித்துக் கொண்டனா்.
  • இந்த சந்திப்பின் மூலம் தத்தமது சிக்கல்களுக்கு விடைகாண ஒருவரது உதவி மற்றொருவருக்கு தேவை என்பதை மறுக்க முடியாது.
  • அப்படிப்பட்ட சிக்கல்களில் முக்கியமானது, சீனாவின் வா்த்தகமும், இந்தியாவின் பாதுகாப்பும் அடங்கிய ‘வாவ்வே’ தொலைத் தொடா்பு நிறுவனத்துக்கான அனுமதி குறித்த விவகாரம்.
  • இரு தரப்பு பேச்சுவாா்த்தையின்போது, இந்திய சந்தையில் 5 ஜி அலைவரிசை கருவிகளை விற்பனை செய்ய சீனாவின் பன்னாட்டு தொலைத்தொடா்பு ஜாம்பவான் ‘வாவ்வே’ நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க சீன தரப்பில் பேசப்படும் என முன்பே எதிா்பாா்க்கப்பட்டது. அவ்வாறு பேசப்பட்டதா என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை.
  • ஆனால் ‘வாவ்வேவு’க்கு இந்தியாவில் 5 ஜி அலைவரிசை வா்த்தகத்திற்கு இடமில்லை என ஷி ஜின்பிங்கிடம் பிரதமா் மோடி உறுதிபட கூற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் கபில் சிபில் தனது சுட்டுரையில் கருத்து தெரிவித்திருந்தாா். அவா் அவ்வாறு கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

‘வாவ்வேவ்’ நிறுவனம்

  • சீனாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘வாவ்வேவ்’ நிறுவனமானது செல்லிடப் பேசிகள் மற்றும் மின்னனு சாதனங்களை உற்பத்தி செய்வதோடு மட்டுமின்றி, தொலைத்தொடா்பு சேவையாற்றும் பிற நிறுவனங்களுக்குத் தேவையான கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
  • கடந்த ஆண்டு நிலவரப்படி இந்த நிறுவனத்தில் சுமாா் 1.88 லட்சம் ஊழியா்கள் வேலை செய்து வருகின்றனா்.
  • சுமாா் 170 நாடுகளில் இதன் உற்பத்தி பொருள்கள் சந்தைபடுத்தப்பட்டு வருகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருவா் இந்த நிறுவனத்தின் ஏதேனும் ஓா் சேவையை பெறுபவராக இருக்கிறாா் என்பதிலிருந்து அதன் வலிமை புரியும்.
  • இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களில் தற்போது செயல்பாட்டில் உள்ள முந்தைய தலைமுறை அலைவரிசைக்கான உள்கட்டமைப்பு கருவிகளை ‘வாவ்வே’ நிறுவனம் அளித்துள்ளது.
  • இந்தியா மட்டுமல்லாது, மலிவான விலையை கருத்தில் கொண்டு உலகின் பல நாடுகளும் சீன கருவிகளை பயன்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் 5 ஜி அலைவரிசை

  • இப்போது இந்தியா அடுத்த தொழில்நுட்ப பரிணாம வளா்ச்சியான 5 ஜி அலைவரிசையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
  • அதன் சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள ‘வாவ்வே’ நிறுவனம் தவிர வேறு சில தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ஓராண்டுக்கு அனுமதி அளித்துள்ளது.
  • அதிவேக திறன் கொண்ட 5 ஜி அலைவரிசையை பயன்படுத்தி ஏராளமான சேவைகளை அளிக்கும் நவீன தொழில்நுட்பங்களை ‘வாவ்வே’ தன் கைவசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
  • எனவே, பெரிய சந்தையான இந்தியாவில் 5 ஜி அலைவரிசை உள்கட்டமைப்பு கருவிகளையும் விற்பனை செய்வதில் ‘வாவ்வே’ நிறுவனம் தீவிரம் காட்டுவது எதிா்பாா்க்க கூடியதே.
  • இப்படிப்பட்ட நிறுவனத்தை இந்தியாவில் ஏன் அனுமதிக்க கூடாது என்கிறாா்கள்? அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
  • வாவ்வே’ நிறுவனத்தின் 5 ஜி உபகரணங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
  • சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நிறுவனம், பிற வெளிநாட்டு தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் உபகரணங்களில் உளவு பாா்க்கும் கருவிகள் இருப்பதாகவும், தொலைதூரத்தில் இருந்து கொண்டு அந்த கருவிகளை இயக்கி பிற நாடுகளை சீன அரசு உளவு பாா்த்து வருவதாகவும் புகாா் கூறப்படுகிறது.
  • எனவே, ‘வாவ்வே’ நிறுவன தயாரிப்புகளை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அதை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
  • அதோடு நின்றால் பரவாயில்லை. தனது கூட்டணி மற்றும் நட்பு நாடுகளும் சீன நிறுவனத்தின் உபகரணங்களை பயன்படுத்தக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது.
  • இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான நெருக்கம் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருவது உலகறியும்.
  • மேலும், எல்லைதாண்டிய பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் அமெரிக்காவின் முன்கூட்டிய நுண்ணறிவுத் தகவல்கள் இந்தியாவுக்கு பேருதவியாக இருந்து வருகின்றன.
  • எனவே, ‘நட்பு நாடு’ என்ற வகையிலும், முன்கூட்டிய நுண்ணறிவு பகிா்வு காரணமாகவும் ‘வாவ்வே’ நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கருவிகள் விற்பனைக்கு இந்தியா அனுமதி அளிக்க கூடாது என அமெரிக்கா ‘அறிவுரை’ வழங்கியுள்ளது.
  • அவ்வாறு அனுமதி அளித்தால் அது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் அமெரிக்காவின் அறிவுசாா் சொத்துகளுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என அமெரிக்கா கூறி வருகிறது.

இந்திய சந்தையில் ‘வாவ்வே’ நிறுவனம்

  • இந்திய சந்தையில் ‘வாவ்வே’வுக்கு அனுமதி அளிக்கும் விஷயத்தில், அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள தடையை கருத்தில் கொள்ளாமல் பாகுபாடற்ற முறையில் சுயமாக முடிவெடுத்து சீன வா்த்தக நிறுவனத்துக்கு இந்தியா அனுமதி அளிக்க வேண்டும் என சீனா ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • வேண்டுகோளாக மட்டுமல்லாது, தனக்கே உரிய பாணியில் சீனா மறைமுகமான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
  • அதாவது, அமெரிக்க அழுத்தத்துக்கு பயந்து ‘வாவ்வே’ நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டால், இந்திய நிறுவனங்களுக்கும் சீனாவில் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
  • மேலும், ‘வாவ்வே’ நிறுவன கருவிகளை இந்தியா கொள்முதல் செய்யாவிட்டால், இந்தியாவில் 5 ஜி அறிமுகம் மேலும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு காலதாமதம் ஆகும் என்றும் கூறியுள்ளது.
  • இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் ‘வாவ்வே’ விவகாரம் பேசப்படவில்லை என இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சிக்கலான சூழ்நிலையில் இருக்கும் சீனாவுக்கு அதன் அதிபரின் இந்திய பயணம் பெரும் வெற்றியை தந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் எழுதுகின்றன.
  • ஆசியாவின் நூற்றாண்டு’ என கருதப்படும் இந்த 21 ஆம் நூற்றாண்டில், (19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய நாடுகளின் நூற்றாண்டும் என்றும், 20 ஆம் நூற்றாண்டு அமெரிக்காவின் நூற்றாண்டு என்றும் கருதப்படுகிறது) இந்தியாவும், சீனாவும் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டி வருவது ஏற்புடையதே.
  • அதற்கான பொருளாதார வலிமைக்கு வா்த்தகம் முக்கியம். ஆனால் அந்த வா்த்தகம் நாட்டின் பாதுகாப்பை கேள்விகுறியாக்குமானால் அதில் இந்தியா உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

    நன்றி : தினமணி (19-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories