TNPSC Thervupettagam

வறட்சி பனாமா கால்வாயைக் கடப்பதில் கப்பல்களுக்கு சிக்கல்

November 13 , 2023 425 days 300 0
  • பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள வறட்சியால் கப்பல்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதத்துக்கு மேலாக சரக்குகளுடன் கப்பல்கள் நடுக்கடலில் வரிசையில் காத்திருக்கின்றன.
  • சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தின் தன்மையை மாற்றியமைத்து எளிமையாக்கிய இரண்டு புரட்சிகரத் திட்டங்கள் சூயஸ் கால்வாய் மற்றும் பனாமா கால்வாய்.
  • மத்திய தரைக் கடலையும், செங்கடலையும் இணைத்து ஆசியா - ஐரோப்பா நாடுகளுக்கு இடையேயான பயணத்தை எளிதாக்கியது எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் திட்டம்.
  • அதேபோல், அட்லாண்டிக் பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைத்து தென் அமெரிக்காவை சுற்றிச் செல்லும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக பனாமா நாட்டில் செயற்கையாக உருவாக்கப்பட்டது பனாமா கால்வாய்.

பனாமா கால்வாய் வரலாறு

  • பனாமா கால்வாய் கட்டுவதற்கு முன்னதாக, அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் தென் அமெரிக்க கண்டத்தை சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு சுற்றிதான் செல்ல வேண்டும்.
  • ஆனால், பனாமா கால்வாய் உருவாக்கப்பட்ட பிறகு 12,668 கி.மீ. வரை பயண தொலைவு குறைக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு நாடுகளின் முயற்சிகளுக்கு பிறகு 1904-ஆம் ஆண்டு பனாமா நாட்டில் கால்வாய் கட்டுவதற்கு அமெரிக்கா முன்வந்தது. சுமார் 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு 40 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது.
  • பனாமா சிட்டி அருகே ‘பிரிட்ஜ் ஆஃப் அமெரிக்கா’(அமெரிக்க பாலம்) என்ற பகுதியில் தொடங்கி கொலம்பியா நாட்டு வழியே சென்று ‘கோலன்’ என்ற பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் முடிவடைகிறது.
  • இந்த கால்வாய் 82 கி.மீ. நீளமும் 31 மீட்டர் அகலமும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த 1,700 துறைமுகங்களுடன் பனாமா கால்வாய்க்குத் தொடர்புண்டு.
  • முன்னதாக, இந்த கால்வாய் கட்டுவதற்காக சுமார் 25 கோடி அமெரிக்க டாலர்களை பிரான்ஸ் நாடு செலவிட்டு, பின்னர் பணியைக் கைவிட்டது.
  • இந்த கால்வாய் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களில் 25,000-க்கும் மேற்பட்டோர் விபத்து, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
  • பல அரசியல் போராட்டங்களுக்குப் பின்னர், பனாமா கால்வாயின் நிர்வாகத்தை 1999-ஆம் ஆண்டு பனாமா நாட்டிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.

பனாமா கால்வாய் இயங்கும் முறை

  • பனாமா குறுக்கே உருவாக்கப்பட்ட இந்த கால்வாயின் பெயர் காடன் ஏரி. இந்த ஏரியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 85 அடி உயரத்தில் உள்ளது.
  • இதனால், பனாமா கால்வாயைக் கடக்க வேண்டுமென்றால் கப்பல்கள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 85 அடி உயரத்துக்கு மேலே உயர்த்தப்பட - கொண்டுவர வேண்டும். இதற்காக ‘வாட்டர் லாக்’(நீர்ப் பூட்டு) என்ற சாதனம் அமைக்கப்பட்டு, கப்பல்களை கடல் மட்டத்திலிருந்து  ‘லிஃப்ட்’ போன்று மேலே உயர்த்தி அனுப்பும்.
  • கப்பல் செல்லும்போது ஏரியிலிருந்து வரும் நீரின் மூலம் இந்த நீர்ப்பூட்டு இயங்கி, கப்பல்களை உயர்த்தி காடன் ஏரியைக் கடந்த பிறகு கடலில் சமநிலையில் இறக்கிவிடும்.
  • இந்த கால்வாயில் 5 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கப்பலின் வகை, சரக்கின் வகை, சரக்கின் எடையைப் பொருத்துக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். பனாமா நாட்டின் செழிப்புக்கு இந்த சுங்கக் கட்டணமே பிரதான வருமானம்.
  • நாளொன்றுக்கு சுமார் 38 கப்பல்களும், ஆண்டுக்கு 14,000 சரக்குக் கப்பல்களும் இந்த பனாமா கால்வாயைக் கடந்து செல்கின்றன.

பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள பிரச்னை

  • சர்வதேச வர்த்தகத்தை மாற்றியமைக்கும் ஆற்றலுடைய பனாமா கால்வாய் பாதையில் தற்போது புதிய பிரச்னை வெடித்துள்ளது.
  • பனாமா நாட்டில் சராசரியைவிட இந்தாண்டு 30 சதவிகிதம் குறைவான மழையே பெய்ததால் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
  • இதனால், பனாமா கால்வாயில் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக கப்பல்களைக் கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவதில் சிரமமுள்ளதால், கப்பல் போக்குவரத்தின் அளவைக் குறைக்கும் நிலைக்கு கால்வாய் நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
  • கடந்த ஜூலை மாதம் வரை நாளொன்றுக்கு 38 கப்பல்கள் வரை பனாமா கால்வாய் வழியில் சென்ற நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை வெறும் 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • மேலும், கப்பல் கடந்து செல்லச் செலவிடும் நீரின் அளவைக் குறைப்பதற்காக கப்பலின் எடையையும் குறைத்து பயணம் செய்ய கால்வாய் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  • பனாமா கால்வாயை ஒரு கப்பல் கடந்து செல்வதற்கு செலவிடும் தண்ணீர், பனாமா நாட்டைச் சேர்ந்த 5 லட்சம் பேர் ஒரு நாளுக்கு செலவிடும் தண்ணீரைவிட அதிகம் எனக் கூறப்படுகிறது.
  • தற்போது பனாமா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியில் மக்கள் நீரின்றித் தவிப்பதால், அந்நாட்டுத் தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
  • இதன் காரணமாக வரும் 2024, பிப்ரவரி முதல் 30 சதவிகித கப்பல் போக்குவரத்தைக் குறைத்து, நாளொன்றுக்கு 18 கப்பல்கள் மட்டுமே பனாமா கால்வாயைக் கடக்க அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
  • ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 200-க்கும் மேற்பட்ட கப்பல், கால்வாயை கடப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருப்பதால் சரக்குப் போக்குவரத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பனாமா கால்வாயைக் கடக்க வரிசையில் காத்திருக்கும் கப்பலின் எண்ணிக்கை 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலகளவிலான நீர்வழி வர்த்தகம் 3 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.
  • இதனால் முன்னணி கப்பல் நிறுவனம் ஒன்று சுமார் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதிகமாகக் கொடுத்து வரிசையைத் தவிர்த்து கடந்து செல்ல பேரம் பேசியுள்ளது. மேலும், பல கப்பல்கள் சுற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ளவும் முடிவெடுத்துள்ளன.
  • சர்வதேச அளவில் 5 சதவிகித வர்த்தகத்தைக் கையாளும் பனாமா கால்வாய் முடங்கியிருப்பதால், உலகளாவிய விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் உணவு, எரிவாயு, சமையல் எண்ணெய் மற்றும் பிற பொருள்களின் விலைகள் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
  • 120 ஆண்டுகள் முந்தைய காலநிலை மற்றும் நீர் அளவைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பனாமா கால்வாய், தற்போதைய காலநிலை மாற்றத்தை சமாளிக்குமா என்பது சந்தேகமே.
  • சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தை வலுப்படுத்த மாற்று வழித்தடங்களை உருவாக்குவது மிக அவசியம்.

நன்றி: தினமணி (13 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories