TNPSC Thervupettagam

வறுமையும் பல்பரிமாண வறுமைக் குறியீடும்

July 26 , 2023 481 days 448 0
  • ‘தேசியப் பல்பரிமாண வறுமைக் குறியீடு முன்னேற்ற மதிப்பீடு (National Multidimensional Poverty Index- A Progress Review 2023) என்னும் அறிக்கையை அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் பல்பரிமாண வறுமை நிலையிலிருந்து 13.5 கோடிப் பேர் வெளியேறியுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • இதன் பின்னணியைத் தெரிந்துகொள்வோம்: பல்பரிமாண வறுமைக் குறியீடு: நீண்ட காலமாக ஒரு நபர் அல்லது குடும்பம் ஈட்டும் வருமானம் என்னும் ஒற்றை அளவுகோலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வறுமைக் கணக்கீடு செய்யப்பட்டுவந்தது.
  • ஆனால், ஈட்டப்படும் பணம், அதை வைத்து மேற்கொள்ளப்படும் நுகர்வு ஆகியவற்றை மட்டும் வைத்து வறுமையைக் கணக்கிடுவது, பணம் சாராத அம்சங்கள் இல்லாமையால் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் தாக்கங்களை அறியப் பயன்படாது என்னும் விமர்சனம் இருந்து வந்தது. 2010இல் ஆக்ஸ்போர்டு வறுமை - மனித மேம்பாட்டுத் திட்டமும் ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் மனித மேம்பாட்டு அலுவலகமும் பல்பரிமாண வறுமைக் குறியீடு என்னும் கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தின.

பல்பரிமாண வறுமை:

  • உடல்நலம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று பரிமாணங்களுக்கு உள்பட்ட அளவுகோல்களை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் பல்பரிமாண வறுமை கணக்கிடப் படுகிறது. இந்த அளவுகோல்களில் மூன்றில் ஒரு பங்கு கிடைக்காதவர்கள் பல்பரிமாண வறுமை நிலையில் உள்ளவர்களாக அடையாளப்படுத்தப்படுவர். சரிபாதி அளவுகோல்கள் கிடைக்காமல் இருப்போர் தீவிரப் பல்பரிமாண வறுமை நிலையில் இருப்போர் ஆவர்.

இந்திய நிலை:

  • இந்தியாவில் பல்பரிமாண வறுமையைக் கணக்கிடுவதற்கு, மேற்கூறிய சர்வதேச நிறுவனங்களின் ஆய்வுமுறையையே நிதி ஆயோக் அமைப்பு பயன்படுத்துகிறது. உடல்நலம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று பரிமாணங்களின் கீழ் ஊட்டச்சத்து, குழந்தைகள்- பதின்பருவத்தினர் இறப்பு விகிதம், பேறுகாலப் பாதுகாப்பு, குழந்தைகளின் பள்ளிப் படிப்புக் காலம், பள்ளி வருகைப் பதிவு, சமையலுக்கான எரிபொருள் வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட துப்புரவு வசதிகள், குடிநீர், மின்சாரம், வீட்டுவசதி, சொத்துகள், வங்கிக் கணக்கு ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
  • இந்தப் பல்பரிமாண வறுமைக் குறியீடானது, தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். 2015-16 குடும்பநலக் கணக்கெடுப்பின் அடிப்படையில், 2021இல் வெளியிடப்பட்ட தேசியப் பல்பரிமாண வறுமைக் குறியீடு அறிக்கையின்படி, 24.85% இந்தியர்கள் பல்பரிமாண வறுமை நிலையில் வாழ்ந்துவந்தனர். 2019-21 குடும்ப நலக் கணக்கெடுப்பின் அடிப்படையில் (கரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தக் கணக்கெடுப்பு தாமதமானது) இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி அந்த விகிதம், 14.96% ஆகக் குறைந்துள்ளது.
  • இரண்டுக்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுக் காலத்தில், 13.5 கோடி இந்தியர்கள் பல்பரிமாண வறுமை நிலையிலிருந்து வெளியேறியுள் ளனர். கிராமப்புறங்களில் 32.59%இலிருந்து 19.28% ஆகவும் நகர்ப்புறங்களில் 8.65%இலிருந்து 5.27% ஆகவும் பல்பரிமாண வறுமை நிலை குறைந்துள்ளது. இந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 3.43 கோடிப் பேர் பல்பரிமாண வறுமையின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர்.
  • பிஹார் (2.5 கோடிப் பேர்) இரண்டாம் இடத்திலும் மத்தியப் பிரதேசம் (1.36 கோடிப் பேர்) மூன்றாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு, கேரளம், டெல்லி, கோவா ஆகிய மாநிலங்களிலும் சில யூனியன் பிரதேசங்களிலும் பல்பரிமாண வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவு.
  • ‘கல்வி, ஊட்டச்சத்து, நீர், துப்புரவு, சமையல் எரிபொருள், மின்சாரம், வீட்டுவசதி ஆகிய முக்கிய விஷயங்களில் அரசு முதலீடுகளைக் குவித்தது இந்த முன்னேற்றங்களுக்கு முக்கியப் பங்களித்துள்ளது. தூய்மை இந்தியா, முழுமையான ஊட்டச்சத்துக்கான முன்னடைவுத் திட்டம், உயிர்நீர்த் திட்டம், வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான செளபாக்யா திட்டம், சமையல் எரிவாயுவுக்கான உஜ்வலா திட்டம், பிரதமர் மக்கள் நிதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்த முன்னேற்றத்தைச் சாத்தியப்படுத்தியுள்ளன’ என்று நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது.
  • நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தரவுகள் சர்வதேச அமைப்புகள் வெளியிட்டுள்ள தரவுகளுடன் ஒத்துப் போகின்றன. இந்த மாதம் ஐ.நா. வளர்ச்சித் திட்டம் வெளியிட்ட உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டின்படி 2021வரையிலான 15 ஆண்டுகளில் 41.5 கோடிப் பேர் பல்பரிமாண வறுமையிலிருந்து நீங்கியுள்ளனர். 2005-06 இல் 55.1% ஆக இருந்த வறுமையின் விகிதம், 2019-21இல் 16.4% ஆகக் குறைந்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு முதல் பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ளது.

உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறதா?

  • இப்போது தேசியப் புள்ளியியல் அலுவலகத்துடன் (National Statistical Office) இணைக்கப்பட்டு விட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் (National Sample Survey Organisation) நுகர்வுச் செலவினத்தின் அடிப்படையில் இந்தியாவில் வறுமையில் இருப்போரைக் கணக்கிட்டுவந்தது.
  • கடைசியாக இந்த அமைப்பு 2011இல் வெளியிட்ட தரவுகளின்படி இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோரின் விகிதம் 22.5%. 2017-18இல் இந்நிறுவனத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் தரவுகளை அவற்றின் தரம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக மத்திய அரசு வெளியிட மறுத்துவிட்டது.
  • உலக அளவில் வறுமை தொடர்பான தரவுகளை உலக வங்கி கடந்த செப்டம்பரில் வெளியிட்டது. 2019இல் இந்தியாவில் வறுமையில் இருப்போரின் விகிதம் 10.2% ஆகக் குறைந்திருந்தாலும் இது முன்பு கணிக்கப்பட்டிருந்த அளவுக்குக் குறையவில்லை என்று கூறப்படுகிறது.
  • மேலும், கரோனா பெருந்தொற்றின்போது வருமான இழப்பையும் வருமானக் குறைப்பையும் எதிர் கொண்டோர் பழைய நிலைக்கு மீண்டுவிட்டார்களா என்பது குறித்த தரவுகள் இல்லாமல் பல்பரிமாண வறுமை குறித்த அளவுகோல்களை மட்டும் வைத்து இந்தியாவில் வறுமை குறைந்து விட்டது என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (26  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories