- தமிழ்நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை உள்ளூர் அளவில் மாற்றி அமைக்கும் பெரும் முயற்சியை மாநில அரசு தற்போது எடுத்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 கிராம ஊராட்சிகளை நகர்ப்புறமாக மாற்றுவதற்கான திட்டம், விருதுநகரில் 14 ஊராட்சிகள், நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, புதுக்கோட்டை எனத் தொடரும் இந்த பட்டியலில் சுமார் 600க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாக மாற்றுவது அல்லது ஏற்கெனவே இருக்கும் பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சிகளோடு இணைப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ஏற்கெனவே இந்தியாவில் மிகவும் நகரமயமான மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டினை மேலும் நகரமயமாக்குவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதுதான் இங்கு கவனத்துக்குரிய விஷயம். இதனால் பல ஊராட்சிப் பகுதிகள் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன.
அதிகாரத் திணிப்பு:
- சமீபத்தில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் கிராம ஊராட்சிகளுக்குச் சென்று மக்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்களைச் சந்தித்தோம். இதுபோன்று தங்கள் ஊராட்சியை மாநகராட்சியாக மாற்ற இருக்கிறார்கள் என்கின்ற அலுவல்ரீதியான ஒரு தகவல்கூட அரசிடமிருந்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்துக்கு வரவில்லை என்பது தெரிந்தது. பத்திரிகைச் செய்தி, வாட்ஸ்அப் குழுக்களில் அலுவலர்கள் பகிரும் தகவல்களைக் கொண்டே மக்கள் நிலைமையைத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சிக்குரியது. பல பகுதிகளில் மக்களிடம் ஒரே ஒரு உரையாடலைக்கூட அரசு நடத்தவில்லை. மத்திய அரசு பல விஷயங்களில் மாநில அரசுகளை அங்கீகரிக்காமல் அதன் அதிகாரங்களைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில், ஏறத்தாழ அதே அணுகுமுறையைத்தான் ஊராட்சிகள் மீது தமிழ்நாடு அரசு தற்போது காட்டிவருகிறது. வலுக்கட்டாயமான நகரமயமாதல் என்கிற அதிகாரத் திணிப்பு இது!
ரியல் எஸ்டேட் லாபி:
- பரந்தூர், மேல்மா போன்று தங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போராடிவரும் ஊர்கள் கிராம ஊராட்சிகளாக இன்றளவும் இருப்பதால்தான் அங்கே மக்கள் பிரதிநிதிகள் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு, ஊராட்சித் தீர்மானங்கள் நிறைவேற்றி கிராமசபைகளைக் கூட்டி மக்களின் குரலுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நெடுவாசலும், கதிராமங்கலமும் காப்பாற்றப்பட்டதற்கும் அவை ஊராட்சிகளாக இருந்ததற்கும் பெரும் தொடர்பு உண்டு.
- கிராம ஊராட்சிபோல் சுயேச்சைச் சின்னம் இல்லாமல் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும் நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் தங்கள் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு இயங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். நகரமாக மாறிவிட்டால் மக்கள் குரலை எழுப்புவதற்குக் கிராமசபைகளும் இருக்காது. காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டுவரும் இந்தக் காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் குரல் எடுபட வேண்டும் என்றால், அவை ஊராட்சிகளாகவே இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
- அதேநேரம் பெரும் திட்டங்களுக்கும் ரியல் எஸ்டேட்டுகளுக்கும் நிலங்கள் எடுப்பதைச் சுலபமாக்கிக் கொடுக்கும் அரசின் மறைமுக அணுகுமுறையாகத்தான் இந்த வலுக்கட்டாயமான நகரமயமாதலைப் பார்க்க வேண்டியுள்ளது.
நகர உள்ளாட்சிகள் நிலை:
- சமீப காலத்தில் மாநகராட்சியாகவும் நகராட்சியாகவும் மாற்றப்பட்ட பல நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏற்கெனவே செய்ய வேண்டிய அடிப்படை முன்னேற்றப் பணிகள் பல செய்யப்படாமல் இருப்பது கண்கூடு. திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, தூய்மைப் பணிகள், சாலைகள் சீரமைப்பு, கட்டிடங்களைச் சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் எனப் பல பணிகளை நிர்வாகரீதியாகச் செயல்படுத்த வேண்டியுள்ளது. இப்போதுள்ள சில நகராட்சிகளில் தூசியும், பராமரிப்புமற்ற சாலைகளைப் பார்க்கிறபோது இந்த நகராட்சியோடு இன்னும் பல கிராமங்கள் இணைக்கப்பட்டால் என்ன நிலை ஏற்படும் என்ற அச்சமே எழுகிறது. முதலில் இருக்கின்ற நகராட்சிகளில், பேரூராட்சிகளில் நல்ல நிர்வாகத்தைக் கொடுப்பதற்கு அரசு முன்வரட்டும் என்கிற குரல்களே இப்போது வலுத்து ஒலிக்கின்றன.
பறிக்கப்படும் சுயாட்சி!
- கிராம ஊராட்சிகள் நகரமாக மாற்றப்படும்போது அவை பல்வேறு இழப்புகளைச் சந்திக்க நேரிடும். 100 நாள் திட்ட வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழப்பது, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உள்ளிட்ட கிராமப்புறக் கட்டுமானத் திட்டங்களை இழப்பது, ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட சில சலுகைகளை இழக்க நேரிடுவது, கிராமப்புற மக்கள் / கால்நடைகள் / சிறிய நீர்நிலைகள் எனப் பல்வேறு விஷயங்கள் சார்ந்து மத்திய மாநில அரசுகள் செயல்படுத்திவரும் அனைத்து நலத்திட்டங்களையும் இழக்க நேரிடுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
- ஊராட்சிகளில் கால்நடைகளும், விவசாய நிலங்களும் இருக்கும். ஆனால், பெரும்பான்மையான திட்டங்கள் நகர்ப்புறம் சார்ந்தவையாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, ராஜபாளையத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியை ராஜபாளையம் மாநகராட்சியோடு இணைக்க முடிவுசெய்திருக்கிறது அரசு. விவசாயமே முதன்மையாக இருக்கும் இந்த ஊராட்சியின் எளிய மக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதற்கும் தங்கள் கோரிக்கைகளைச் சொல்வதற்கும் இது நாள்வரை தங்களுக்கு அருகில் இருந்த பஞ்சாயத்து அலுவலகத்துக்கே சென்றுவந்தார்கள். தற்போது அவர்கள் அனைத்துக்கும் மாநகராட்சிக்குச் செல்ல நேரிடும்.
- பல நூறு கிராம ஊராட்சிகளை மாநகராட்சிகளாக வகை மாற்றம் செய்வதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கிராமசபை உரிமையை முற்றிலுமாக இழந்துவிடுவார்கள். திமுக தனது 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு ‘மக்கள் கிராமசபை’ எனப் பெயர் வைத்தது. கிராமசபையின் பெயரைப் பயன்படுத்திய திமுக, தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், பல்லாயிரக்கணக்கான மக்களின் கிராமசபை உரிமைகளைப் பறிக்கத் திட்டமிடுவது ஏன்? கிராமசபைகள் இப்போது ஆளும் கட்சி ஆகிவிட்ட திமுகவுக்குத் தேவையில்லாதவையாக ஆகிவிட்டனவா? வலுக்கட்டாயமான நகரமயமாதலின் மூலம் மக்களிடமிருந்து பறிக்கப்படும் பல விஷயங்களில் முக்கியமான ஒன்று, உள்ளூர் நிர்வாகத்தில் அவர்கள் பங்கெடுப்பதற்கான, அவர்களின் சுயாட்சிக்கான அதிகாரம். மக்களுக்கான அதிகாரத்தைப் பறித்துவிட்டுத்தான், டெல்லியிடமிருந்து மாநிலத்துக்கான அதிகாரத்தைப் பெறப்போகிறோமா?
- நகரங்கள் நிச்சயமாகத் தேவைதான். ஆனால், அவை தேவைக்கேற்ற எண்ணிக்கையில் / அளவில் இருக்க வேண்டும். மக்களின் நிலங்களையும் அதிகாரங்களையும் விழுங்குவதாக நகரங்கள் மாறக் கூடாது. தொன்மையான நம் தமிழ் நிலத்துக்கு அது நல்லதல்ல!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 06 – 2024)