- ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தன்னைப் பற்றிய தகவல்களைச் சொல்லுகிறதா என்று பலரும் சோதித்துப் பார்த்து வருகின்றனர். நானும் நேற்று அதைச் செய்தேன். தகவல்களில் துல்லியம் இல்லாதபோதும் (எனது கவிதைகள் எளிமையானவை என்பது, அது சொன்ன ஒரு பேருருட்டு), எனது இரண்டு நூல்களின் பெயர்களையும், அதேசமயம் சண்முக. விமல் குமார் என்று பெயரை உள்ளிட்டபோது, கல்விப் புலத்தைச் சேர்ந்தவன் என்றும், மொழிபெயர்ப்பாளன் என்றும் அது அடையாளம் கண்டுகொண்டது. அந்த வகையில் மகிழ்ந்தேன்.
- காரணம், என்னைப் பற்றிய அதிகாரபூர்வத் தரவுகளில் ஒன்றான ஆங்கில விக்கித் தரவு அதனிடம் இல்லை. தமிழ் விக்கியில் என்னைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்ற போதும் தமிழைத் தற்போதைக்கு அதனால் உள்வாங்க இயலாது என்று அதனிடமே கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
- அதேசமயம், மேற்சுட்டிய தகவல்களைக்கூட அதனால் தொடர்ந்து ஒரே மாதிரி தர முடியவில்லை. அதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்
- நாம் கோருவது சரியாக என்ன என்பதை வெறும் பெயரைக் கொண்டு அதனால் இப்போதைக்குக் கணிக்க முடியாது. அதன் பொருட்டே, எனது பெயரை முதலில் உள்ளிட்டவுடன், அதற்கு அது அர்த்தத்தைத் தந்தது. இரண்டாவது முறை நான் தமிழில் உள்ளிட்டபோது மொழிபெயர்த்துத் தந்தது. அடுத்த முறை அவரைப் பற்றிச் சொல் என்றபோது தன்னிடம் உள்ள தகவல்களோடு கூடவே பல்வேறு இட்டுக்கட்டல்களையும் சேர்த்துத் தந்தது. (உதாரணமாக, அதனிடம் இருந்த தகவல் நான் கவிஞன், இரண்டு புத்தகங்கள் போட்டிருக்கிறேன் என்பது மட்டும்தான். என் கவிதைகள் எளிமையாக இருக்கும், காதல் பற்றி எழுதுகிறேன், சமூக நோக்கு உடையவன் என்பதெல்லாம் அதற்குத் தெரியாது; அவை சற்றுப் பொருந்திப் போனாலும், அவை பூராவும் அதனிடம் உள்ள வெறும் தயார் நிலை வாக்கியங்களே).
- நமது கேள்விகளில் கூடுதல் தெளிவு இருக்கும்போது அதன் பதில்களிலும் அதை எதிர்பார்க்கலாம். தன்னால் முதலில் கூறிய தகவலைக்கூடத் தொடர்ந்து அதனால் தர முடியாமல் போனது மற்றுமொரு வாஸ்தவம். அதற்குரிய காரணம், அதனிடம் தற்போது தரவுகள் குவிந்துள்ளன. ஆனால், அவை போதுமானவை அல்ல; அல்லது, அந்தத் தரவுகள் வெறும் பெருந்தரவுகள்; அவற்றைத் துல்லியமாக எடுத்துத் தர அதற்குத் தேவை எல்லாம் தற்போது வெறும் பயிற்சி மட்டுமே. அந்தப் பயிற்சிக்குத்தான் நாம் நம்மை அறியாமலும், அறிந்தும் அதற்குத் தொடர்ந்து உதவிவருகிறோம்.
- ஏஐ தான் செய்த பிழைகளுக்கான காரணங்களாக – தனது பயிற்சித் தரவுகளில் இருக்கும் கணக்கில்லாத தரவுகளால் தனக்குக் குழப்பம் ஏற்படுவதாகவும், ஒரேநேரத்தில் பல்வேறு கோரிக்கைகள் வருவதால், உள்ளடக்கத்தை அவ்வப்போது மாற்றி அனுப்பிவிடுவதாகவும் (context switching), தனக்குக் குறிப்பிட்ட சில விசயங்களில் குறை அறிவு ( (Limited Knowledge) இருப்பதாகவும் ஒப்புக்கொண்டது.
- ஆனால், இந்த எல்லைகள் எதுவும் ஆங்கிலத்தில் அதனிடம் இருக்கும் தரவுகளுக்கு அதிகம் பொருந்தி வராது; அல்லது தமிழை அது பழகிக் கொண்டால் இந்தத் துல்லியமின்மை, அதற்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. உதாரணமாக, ஒரு தமிழ் எழுத்தாளரின் பெயர் ஆங்கில விக்கியில் இருந்தால் உடனடியாக அதனால் தந்துவிட முடியும். அங்கு அது கூறும் எல்லைகள் அதற்குப் பெரிய குழப்பங்களைத் தராது.
- பௌத்தம் பற்றிய நல்ல நூல்களைக் கூறு, ஒரு தன்விவர ஏட்டினை எப்படித் தயாரிப்பது என்பன போன்றவற்றிற்கு நல்ல பதில்களையே தருகிறது; பதில்களில் கூடுதல் தெளிவு கோரும்போது அதையும் தருகிறது. ஆனால், இன்னும் அது கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியை முழுமையாகச் சுவீகரிக்கவில்லை என்பதை அதனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அப்படி அது சுவீகரித்தால் இன்னும் கொஞ்சம் துல்லியமாகப் பேசிப் பழகும்.
- அதேபோல, அது தனது ஒவ்வொரு பதிலுக்குக் கீழும் கேட்கும் எதிர்வினைகளும் அதன் வளர்ச்சிக்கு உதவும்படி வைக்கும் கோரிக்கைகளே. இது தொடர்பாக இத்துறை அடைந்துள்ள பாய்ச்சலை நான் வியக்கிறேன்.
- அதுதொடர்பாக, நான் மொழியியல் (Linguistics) துறையில் பணியாற்றிய நினைவு இங்கு வருகிறது. நான் பணியாற்றியது, இருமொழியியம் (Bilingualism) பற்றின ஆய்வுத் திட்டமாக இருப்பினும், என்னோடு மொழி ஆய்வகத்தில் (Language Lab) பணியாற்றிய நண்பர்கள் இயந்திர மொழிபெயர்ப்புத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததை உடன் இருந்து படித்திருக்கிறேன். அத்திட்டம் 100% இயந்திர மொழிபெயர்ப்பினைச் சாத்தியப்படுத்தும் இலக்கோடு தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டுவந்த திட்டம் அது. அப்போதைய திட்டப் பணியில், கணினிப் பயிற்சி உள்ள மொழியியலாளர்கள், இந்திய இயந்திர மொழிபெயர்ப்புத் திட்டத்தில் முக்கிய இலக்கு மொழியாக இருந்த இந்திக்கு என ஒரு பண்டிட், பிராந்திய மொழி ஆய்வாளர்கள் பணியாற்றி வந்தார்கள்.
- அதாவது, இவர்கள்தான் ஒவ்வொரு முறையும், தற்போது நமது உள்ளீடுகளுக்கு நிகராகக் கிடைக்கும் மொழிபெயர்ப்பினை மிகுந்த பொருள்செலவிலும், உழைப்பிலும் ‘இப்போதுள்ள துல்லியத்தைச்’ சாதித்தவர்கள். அதாவது, இயந்திரத்திற்கு எப்போதும் மனிதனின் கரமும், மூளையும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதேசமயம், தற்போது நடைபெறும் வீச்சு முன்னையதைவிட அபாரமானது. காரணம், தற்போது அது எண்ணற்ற கரங்களையும், மூளையையும் எதிர்வினை என்ற பெயரில் இனாமாகவே பெறுகிறது. எனவே, இயந்திர மொழிபெயர்ப்புத் துல்லியத்தில் நிலவும் தாமதம் ஏஐ - செயல்பாடுகளில் நடக்காது. அதற்கு உதவ ஒவ்வொரு நொடியும் நாம் இருக்கிறோமே.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 07 – 2024)