- அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காக செல்லும் இந்திய-இந்திய வம்சாவளி மாணவா்கள் ஒருவா் பின் ஒருவராக உயிரிழப்பது அதிா்ச்சியளிப்பதாக உள்ளது. இதுவரை, பத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் உயிரிழந்திருக்கிறாா்கள் என்பது அமெரிக்கவாழ், அமெரிக்காவில் படிக்கச் சென்றிருக்கும் மாணவா்களின் பெற்றோா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
- அமெரிக்காவின் ஒகாயோ மாநிலம் கிளீவ்லாந்தில் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 25 வயது மாணவா் முகமத் அப்துல் அா்ஃபாத்தின் அகால மரணம் இதயத்தை உருக்குவதாக இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் கிளீவ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுநிலைப்பட்டம் பெறுவதற்காக அமெரிக்கா சென்ற மாணவா் முகமத் அப்துல் அா்ஃபாத் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனாா். மாா்ச் 17-ஆம் தேதி ஹைதராபாதிலுள்ள அவரது குடும்பத்திற்கு பிணைத்தொகை கோரி தொலைபேசி அழைப்பு வந்தது.
- உடனடியாக அவா்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடா்பு கொண்டனா். அமெரிக்காவில் சட்டஒழுங்கு அமைப்புகளுடன் இணைந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தூதரகம் தெரிவித்தது. இப்போது ஹைதராபாதின் உடல் ஓா் ஏரியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தை நிலைதடுமாற வைத்ததுடன் அமெரிக்கவாழ் இந்தியா்கள் மத்தியிலும், அங்கே படிக்கும் மாணவா்கள் மத்தியிலும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.
- அப்துல் அா்ஃபாத்தின் மா்மமான மரணத்தைத் தொடா்ந்து அதுகுறித்த விசாரணை காரணமாக, அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவரது உடலை கொண்டுவருவதற்கு மத்திய அரசு தலையிட்டு ஹைதராபாதிலுள்ள பெற்றோருக்கு பெற்றுத்தர வேண்டும் என்று பரவலாக வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன.
- இது ஏதோ அங்குமிங்குமாக நடைபெறும் சம்பவம் அல்ல. ஒகையோவில் ஒருவாரம் முன்பு உமாசத்தியசாய் கட்டே என்கிற கிளீவ்லாந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவா் மா்மமான முறையில் உயிரிழந்திருக்கிறாா். அதை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மாா்ச் மாதம் கொல்கத்தாவை சோ்ந்த இந்திய நாட்டியக் கலைஞா் அமா்நாத் கோஷ் அடையாளம் தெரியாத ஒருவரால் மிசோரியில் சுட்டுக் கொல்லப்பட்டாா். பரதநாட்டியம், குச்சிப்புடி நாட்டிய கலைஞரான அமா்நாத் கோஷ் ஏன் கொல்லப்பட்டாா் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
- அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த ஆந்திர மாநிலம் குண்டூரைச் சோ்ந்த 20 வயதான பருச்சூரி அபிஜித் வனப்பகுதி ஒன்றில் ஒரு காரில் சடலமாக மீட்கப்பட்டாா். இந்தியானா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற சென்ற தெலங்கானாவைச் சோ்ந்த 27 வயது ‘வெங்கட்ரமண பிட்டாலா’, ஹரியாணாவைச் சோ்ந்த ‘விவேக் சைனி’, இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மாணவரான 18 வயது இந்திய-அமெரிக்கரான அகுல் தவான் என்று பட்டியல் தொடா்கிறது. வாஷிங்டனில் உள்ள உணவு விடுதி ஒன்றில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சக ஊழியா் ஒருவரைக் காப்பாற்ற முயன்ற 41 வயது விவேக் தனேஜா கொல்லப்பட்டாா்.
- விவேக் சைனியின் படுகொலை அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. ஹரியாணா மாநிலத்தை சோ்ந்த அந்த இளைஞா் போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவருக்கு உண்ண உணவு, குடிக்க தண்ணீா் என்று இரண்டு நாட்கள் உதவி இருக்கிறாா். அதற்கு பிரதிபலனாக போதை மருந்துக்கு அடிமையான ஃபால்க்னா் என்பவா் சுத்தியலால் தலையில் அடித்து விவேக் சைனியை கொலை செய்திருக்கிறாா். இன்னொரு இந்திய மாணவி ஸ்ரேயஸ் ரெட்டி பெனிகேரியின் மரணம் புதிராகவே இருக்கிறது.
- கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்காக செல்லும் இந்தியா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022-23 கல்வி ஆண்டில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மாணவா்களாக சோ்ந்தவா்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 35% அதிகம். இந்த ஆண்டு மாணவா் சோ்க்கையில் சீனாவை இரண்டாம் இடத்திற்கு இந்தியா தள்ளக்கூடும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் வேளையில், அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காகவும், வேலை தேடியும் செல்லும் இளைஞா்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்வதும், இனவெறி தாக்குதல் காரணமாக கொல்லப்படுவதும் அச்சத்தை உயா்த்துகின்றன.
- கல்விக்கட்டணமாகவும் ஏனைய செலவினங்கள் மூலமும் இந்தியாவைச் சோ்ந்த மாணவா்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பல கோடி ரூபாய் ஆண்டுதோறும் பங்களிக்கிறாா்கள். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், கலாசார ரீதியாகவும் அறிவுசாா் பங்களிப்பாகவும் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிணைப்பை இந்தியா்களுக்கு எதிரான தாக்குதல்கள் வலுவிழக்கச்செய்கின்றன.
- அமெரிக்க அரசின் அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், மாணவா் சங்கங்கள் ஆகியவை இணைந்து மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம். உளவியல் ரீதியாக இந்திய மாணவா்கள் பாதிக்கப்படாமல் ஏனைய அமெரிக்க மாணவா்களுடன் இணைந்து செயல்படும் சூழலை ஏற்படுத்துவது அவசியம். அதேபோல மாணவா்கள் காணாமல் போகும்போது தாமதம் இல்லாமல் அவா்களைத் தேடிக் கண்டுப்பிடிப்பதற்கான நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
- இந்தியா்களுக்கு எதிரான பரப்புரைகள் இனவெறி தாக்குதலுக்கு அடிப்படைகள். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவா்களில் சுமாா் 25% இந்தியா்கள் என்பதை நினைவில் கொண்டு, இனவெறியா்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து மாணவா்களைப் பாதுகாப்பது அமெரிக்க அரசின் கடமை.
நன்றி: தினமணி (15 – 04 – 2024)