TNPSC Thervupettagam

வளமுடன் வாழ வழி உண்டு

December 13 , 2019 1861 days 1598 0
  • மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, இருப்பிடம், உடை, அடிப்படைக் கல்வி அறிவு முதலானவை மட்டுமே. இவற்றை தனது வசதிக்கு ஏற்ப ஏற்படுத்திக் கொண்டாலே எல்லா மனிதர்களும்  நிம்மதியாக வாழலாம். தன் வரவுக்குள் வாழ்வதற்கு தேவையான முயற்சியையும் பயிற்சியையும் தனி மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டும். வரவுக்குள் வாழ்வது வரமாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

  • நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாகக் கூறுகிறார் பிரபல பொருளாதார நிபுணரும் முன்னாள் பிரதருமான மன்மோகன் சிங். இதன் பாதிப்பு தனிமனித வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
    வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமூகத்தில் குற்றச் செயல்கள் தினமும் அதிகரித்து வருகின்றன. பொறியாளர்களும், பட்டதாரிகளும் தங்களது கல்வித் தகுதிக் குறைவான பணியிடங்களுக்குக்கூட  போட்டி போடுவது கல்வியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • காரணம், அன்றாட வாழ்க்கைக்குப் பணம் வேண்டும்.  நாம் அனைவரும் நமது நிதி நிர்வாகத்தை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம். தனி மனித வாழ்க்கை மிகவும் எளிமையானது. அதை சிக்கலாக்கிக் கொள்வது நாம்தான். பேராசைதான் அதற்குக் காரணம்.

அன்றாடத் தேவைகள்

  • சுலபத் தவணைகளில் தேவையில்லாத பொருள்களை வாங்குவது, அபரிமிதமான அளவில் கடன் வாங்குவது, ஊர் மெச்ச வாழ முயற்சி செய்வது முதலானவை அறிவார்ந்த செயல்கள் கிடையாது.  பகட்டு வாழ்வு நமது மன நிம்மதியைக் கெடுக்கிறது. அடிப்படையில் அன்றாடத் தேவையான தூக்கத்தைக் கெடுக்கிறது. சமூக உறவுகளில் விரிசலை ஏற்படுத்துகிறது.
  • சிக்கன வாழ்வின் பயன்கள் எண்ணிலடங்காது. எடுத்துக்கொண்ட பணியில் முழு ஈடுபாட்டைக் காட்ட முடியும். மேலும், கூடுதலான ஒரு வருமானத்துக்கான வழியை ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து மனத் திடத்தைப் பெற முடியும். மனத்தின் ஒருமுகத்தன்மையில் உயர்வு ஏற்படும். குடும்பத்திலும் சமூகத்திலும் மரியாதை கூடும். சிக்கனம் செலவைக் குறைக்கும். செலவு குறைவதால் சேமிப்பு அதிகரிக்கும்.
    முன்மாதிரி மனிதனாக நம்மை சேமிப்பு அடையாளம் காட்டும். குழந்தைகளின் எதிர்கால வாழ்வை நிதிச் சுமையின்றி திட்டமிட வைக்கும். 

சிக்கன வாழ்க்கை

  • சிக்கன வாழ்க்கை மன உளைச்சல்களைக்  குறைக்கும். உற்சாகம் காரணமாக ஆக்கப்பூர்வமான செயல்களில் மனம் ஈடுபடும். புதிய வருமானத்துக்கான வழிகள் பிறக்கும். நல்ல உறக்கத்தைப் பெறுவதால் செய்யும் பணியில் திறமை கூடும். பணியிடமேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். பொது வாழ்வில் நேர்மை பெருகும். தனி நபரின் பொருளாதாரப் பின்னணியை வளமானதாக சிக்கனம் மாற்றுவதால், சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருமானத்தைப் பெருக்கும் புதிய வழிகள் புலப்படலாம். 
    சிக்கனத்தால் பொருளாதார வல்லமை பெற முடியும்; பொருளாதார வல்லமை ஒரு வரம் என்பதை நாம் நன்கு அறிவோம். கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை உணர்ந்து நமது அன்றாடச் செலவுகளை செய்ய வேண்டும். நடந்து செல்லக்கூடிய தொலைவுள்ள இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்வதன் மூலம் பெட்ரோல் செலவைச் சேமிக்கலாம். உணவு விடுதி போன்ற வெளி இடங்களில் தேவையில்லாமல் உண்பதைத் தவிர்க்கலாம்.
  • திருமணம் போன்ற வீட்டின் சிறப்பு நிகழ்வுகளை செய்யும்போது சமயச் சடங்குகளை கோயில்களில் முடித்து விட்டு ஒரு வேளை விருந்து மட்டும் சுற்றங்களுக்கு வழங்கலாம். வீட்டில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் உணவு உண்டு மின் செலவைச் சிக்கனப்படுத்தலாம். அடிக்கடி குடும்பத்துடன் திரைப்படங்களுக்கு செல்வதைத் தவிர்த்து தொலைக்காட்சியில் திரைப்படங்களைக் குடும்பத்துடன் பார்க்கலாம்.
  • நகர்ப்புற வாழ்விடங்களை மறந்து கிராமப்புறங்களில் குறைந்த வாடகைக்கு குடியேறலாம். நல்ல காற்றையும் சுவாசிக்கலாம். பேருந்து பயணங்களைத் தவிர்த்து ரயிலில் மாதாந்திர பயணச் சீட்டைப் பயன்படுத்தி பயணச் செலவைக் குறைக்கலாம். உணவுப் பொருள்களை குடும்ப அட்டையைப் பயன்படுத்தி வாங்கி கணிசமாகச் சேமிக்கலாம்.
  • எளிய பருத்தி உடைகளை அணியலாம். பணம் மிச்சம். தினமும் நடைப் பயிற்சி சென்று வரும் வழியில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம். உடலுக்கும் மனதுக்கும் நல்லது. 

சமூக ஊடகங்கள்

  • சமூக ஊடகங்களை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் நம்மிடையே உறவுகள் மேம்படும். நாம் அனைவரும் சேர்ந்து முன்னேறுவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகள் புலப்படும். சாத்தியமாகும் அனைத்து நிலைகளிலும் அரசின் நலத்திட்ட உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    அரசுப் பள்ளியில் குழந்தைகளைப் படிக்க வைத்து கணிசமான பணத்தைச் சேமிக்கலாம். உடல் நோய்வாய்ப்பட்டால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, இதர வாய்ப்புகளை முனைப்புடன் பெற்று வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.
  • மொத்தத்தில் எளிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து நடைமுறைப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். குளிர்சாதன அறையில் உறங்க முடியாமல் தவிக்கும் ஒருவருடைய வீட்டுவாசலில், கொசுக்கடியில் குளிரில் உட்கார்ந்து கொண்டே தூங்குகிறார் காவல்காரர். இதுதான் காலத்தின் கோலம்.
  • எது தேவை? நிம்மதியைக் கெடுக்கும் கடன் சேர்ந்த உல்லாச வாழ்க்கையா? நிம்மதியாக வாழவைக்கும் சிக்கனமான வாழ்க்கையா? கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன். அந்த நிலை நமக்கு வேண்டாமே. எனவே,  அனைவருக்கும் தற்போதைய தேவை வாழ்வில் சிக்கனம்தான்.

நன்றி: தினமணி (13-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories