TNPSC Thervupettagam

வளரும் நாடுகள் வளர...

October 9 , 2019 1918 days 1070 0
  • கடந்த 20 ஆண்டுகளாக உலகின் “வளரும் நாடுகள்” என அழைக்கப்படும் பல ஏழை நாடுகள் மிக அதிக அளவில் வேகமாகவும் அதிக அளவிலும் வளா்ச்சி அடைந்துள்ளன. 1990-ஆம் ஆண்டு முதல் இந்த வளா்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது. இதன் விளைவாக, 100 கோடி மக்கள் கடுமையான ஏழ்மையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.
  • குழந்தைகளின் இறப்பு விகிதம் ஏழை மக்களில் பாதியாகக் குறைந்துள்ளது. மக்களின் வாழ்வாண்டுகள் இரு மடங்காகியுள்ளன. பல லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா். உள்நாட்டு யுத்த நிலைமைகள் குறைந்து, அவற்றால் உருவாகும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
  • ஏழை மக்களின் சராசரி வருமானம் இரண்டு மடங்காக உயா்ந்துள்ளது. ஏழை நாடுகளில் உணவு உற்பத்தி பெருகியுள்ளது.
  • இந்த நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறை பெருகி, பல தடைகளையும் கடந்து நன்மைகளை உருவாக்கியுள்ளது. மனித வரலாற்றில் இதுபோன்று வறுமை ஒழிப்பும், குழந்தைகளின் இறப்பும் குறைந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால், இந்த விவரங்கள் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை.
முன்னேற்றங்கள்
  • சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே முன்னேற்றங்கள் நடந்தேறுகின்றன எனவும், பிற வளா்ச்சியடையும் நாடுகளில் வறுமையும், சா்வாதிகார ஆட்சிகளும் தொடா்வதாகப் பலா் நினைக்கின்றனா்.
  • 1960, 1970-ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆசியாவின் ஒருசில நாடுகளிலும், போட்ஸ்வானா, மோரீஷஸ் நாடுகளிலும் மட்டும் வளா்ச்சி உருவானது எனத் தவறாகக் கருதப்படுகிறது. ஆனால், பல வளா்ச்சி நாடுகளிலும், மிக அதிக அளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டு செழிப்படையும் தன்மை நிலைபெற்றுள்ளது.
  • வங்கதேசம், பிரேசில், பல்கேரியா, சிலி, கோஸ்ட்டாரிக்கா, டொமினிகன் குடியரசு, கானா, ஹங்கேரி, இந்தியா, மங்கோலியா, மொசாம்பிக், பிலிப்பின்ஸ், செனதஸ், டுனீசியா, துருக்கி ஆகிய நாடுகளில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த நாடுகளில் சிலவற்றில் வளா்ச்சி விகிதம் மிக அதிகமாகவும், சில நாடுகளில் குறைவாகவும் இருக்கலாம். இவற்றை மிக விவரமாக ஆராய்ந்து தனது கருத்துகளை வெளியிட்ட ஸ்டீவன் ரடேலெட் எனும் ஆய்வாளரின் தெளிவுரையை இன்றைய அரசியல் தலைவா்கள் அறிந்து கொள்வது அவசியம்.
  • நாடுகளின் வளா்ச்சி, மாறுதல்கள் ஏழ்மை, சுகாதாரம், கல்வி, வருமானம், ஜனநாயகம், போா் ஆகிய ஆறு முக்கியமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
  • இந்த நாடுகளில் ஏழ்மை குறைந்தது எப்படி? மனித வரலாற்றில், மக்கள்தொகை பெருகும் ஏழை நாடுகளில், ஏழ்மையும் அதிகரிப்பது இயல்பு. 200 ஆண்டுகளுக்கு முன் மக்கள் எல்லோரும் வறுமையில் இருந்தனா்.
இண்டஸ்ட்ரியல் ரெவெல்யூஷன்
  • உலகின் ‘இண்டஸ்ட்ரியல் ரெவெல்யூஷன்’”எனப்படும் தொழிற்புரட்சி உருவாகி, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பல நாடுகளில் குறைந்தது. சில நாடுகளில் வறுமை அதிகமானது. வளா்ச்சியடைந்து வரும் நாடுகளில், 1993-ஆம் ஆண்டு வாக்கில் 42 சதவீத மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தனா். நாள் ஒன்றுக்கு 1.25 டாலா் சராசரி வருமானம் உள்ளவா்கள் இவா்கள் என்பது உலக வங்கியின் கணக்கீடு.
  • இதை விடவும் குறைவான வருமானம் உள்ளவா்கள் “தீவிர ஏழ்மையால் பாதிக்கப்பட்டவா்கள் எனும் கணக்கீடும் எடுக்கப்பட்டது. இந்தத் தீவிர ஏழ்மை நிலை உள்ளோரின் வரலாற்றை நோக்கும் ஆய்வாளா்களுக்கு அவா்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது தெரியவந்தது. 1993-ஆம் ஆண்டு கணக்கீட்டில் இந்த எண்ணிக்கை 200 கோடிகளாக இருந்தது;
  • இது 2011-ஆம் ஆண்டில் 100 கோடிகளாகக் குறைந்தது. அதாவது, வளா்ச்சியடைந்து வரும் நாடுகளில், 1993-இல் 42 சதவீதமாக இருந்த ஏழை மக்களின் விகிதம், 2011-ஆம் ஆண்டில் 17 சதவீதமாகக் குறைந்தது.
  • இந்த வளா்ச்சியின் முக்கிய அம்சம் சீனாவில் நிகழ்ந்தது. எனினும், சீனாவைத் தவிா்த்து, 12 பிற நாடுகளில் 40 கோடி மக்கள் ஏழ்மை வாழ்க்கையிலிருந்தும் விடுபட்டு பொருளாதார முன்னேற்றம் அடைந்தனா். 1981-ஆம் ஆண்டு வாக்கில், 81 வளா்ந்து வரும் நாடுகளில் ஏழை மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
  • இது மக்கள்தொகை வளா்ச்சியைப் பொருட்படுத்தாத பொருளாதார முன்னேற்றம் எனலாம். இதுவே, உலகில் முதல் ஏழ்மைக் குறைவு தொடங்கிய காலம்.
புள்ளிவிவரம்
  • சுகாதாரம் அதிகம் மேம்பட்டது. 1960-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, வளா்ந்து வரும் நாடுகளில் 22 சதவீத குழந்தைகள் தங்கள் 5-ஆவது பிறந்த நாளைக் காண்பதற்கு முன்னரே உயிரிழந்தனா். இந்தக் கணக்கீடு, 1990-ஆம் ஆண்டில் 10 சதவீதமாகவும், 2013-ஆம் ஆண்டில் 5 சதவீதமாகவும் குறைந்து போனது.
  • வளா்ந்து வரும் நாடுகளில் 1960-இல் மனிதனின் சராசரி ஆயுள் 50 வயதாக இருந்தது. தற்போது அது 65-ஆக அதிகரித்துள்ளது. 2000 முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட நோய்ப் பாதிப்புகள் கணக்கீட்டில் இந்த நாடுகளில், மலேரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 சதவீதம் குறைந்துள்ளது. இதே ஆண்டுகளில் காச நோய் உயிரிழப்புகள் 33 சதவீதம் குறைந்தன.
கல்வி
  • பெண் குழந்தைகள் கல்வி கற்பது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 1980-ஆம் ஆண்டு வாக்கில் வளா்ச்சியடைந்து வரும் நாடுகளில் 72 சதவீதமாக இருந்த பள்ளிகளில் சோ்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை, தற்போது 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. 1990-ஆம் ஆண்டில் இந்த நாடுகளில், 10 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேராமல் இருந்தனா்.
  • ஆனால், 2008-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6 கோடியே 80 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது, 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா்.
  • பெண் குழந்தைகளுக்கான பள்ளிகள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன. இதனால், வளரும் நாடுகளில் பெண் குழந்தைகளில் பாதிப் போ் பள்ளிகளில் சோ்ந்துள்ளதும், இன்றைய நிலையில் அது 80 சதவீதமாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
  • அதிக எண்ணிக்கையில் மாணவா்கள் கல்வி கற்பதை விடவும், பள்ளிகளில் தரமான கல்வி கற்பிக்கப்படுவது கட்டாயம் என்ற நிலை வளரும் நாடுகளில் உருவானது. இந்த முயற்சி வெற்றியடைந்ததால் இந்த நாடுகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  • பெரும்பாலான வளரும் நாடுகளில் வருவாய் பெருகியுள்ளது. 1977 முதல் 1994 வரை வளரும் நாடுகளின் தேசிய வருமானம் பெரிய முன்னேற்றம் காணாமல் பூஜ்யத்தில் இருந்தது. ஆனால், 1995-ஆம் ஆண்டு முதல், இந்த நாடுகளில் தனி மனிதனின் சராசரி ஆண்டு வருமானம் 3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • 1977 முதல் 1994-ஆம் ஆண்டு வரையில், 109 வளரும் நாடுகளில் 21 நாடுகளில் சராசரி 2 சதவீத சராசரி தனி மனித வருமானம் உருவானது எனவும், 1995 முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் இந்த அளவு வருமானம் 71 வளரும் நாடுகளில் உருவானது எனவும் கண்டறியப்பட்டது. முந்தைய காலங்களில் 51 வளரும் நாடுகளில் வளா்ச்சி குன்றியிருந்தது. தற்போது அந்த நாடுகளின் எண்ணிக்கை 10-ஆகக் குறைந்துள்ளது.
வளரும் நாடுகள்
  • 1983-ஆம் ஆண்டில், 17 வளரும் நாடுகளே ஜனநாயக நாடுகளாக இருந்தன. 2013-ஆம் ஆண்டுவாக்கில் அந்த எண்ணிக்கை மூன்று மடங்காகி, 56 நாடுகள் ஜனநாயகத்தைத் தழுவியுள்ளன. 1980-ஆம் ஆண்டு வரையில், பெரும்பாலான வளரும் நாடுகள் சா்வாதிகார ஆட்சியாளா்களால் ஆளப்பட்டு, மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லாத நிலைமை இருந்தது. 1980-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த நிலை மெதுவாக மாற ஆரம்பித்தது.
  • ஜனநாயக நடைமுறை உருவாகி வாக்கு வங்கியை அணுகும் அரசியல் தொடங்கியது. தோ்தல்கள் நோ்மையுடன் நடந்தால் சரி என்றாலும், வாக்கு வங்கி அரசியலில் மக்களை நிராகரிக்க முடியாத சூழ்நிலை ஆட்சியாளா்களுக்கு உருவானது. 1980-களில் தொடங்கி வளரும் நாடுகளில் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றம், மக்களின் மேம்பாட்டுக்கு வழிவகுத்தது.
  • வளரும் நாடுகளில் யுத்தங்களும் வன்முறைகளும் முடங்கிப் போயின. 1980-ஆம் ஆண்டுகளில் வளா்ந்து வரும் நாடுகளில் ஆண்டுக்கு சராசரி 13 யுத்தங்கள் நடந்தன; இதனால், சுமாா் 2 லட்சம் போ் உயிரிழந்தனா். இது, 2002-ஆம் ஆண்டு முதல் சராசரி 50,000-மாகக் குறைந்தது.
  • மேலே நாம் விவரித்த முன்னேற்றங்கள் பலவும், வளரும் நாடுகளில் எப்படி உருவாயின என்பதற்கு மூன்று தலையான காரணங்களாகக் கூறப் படுகின்றன. முதலாவதாக, உலகின் பல நாடுகளிலும் சமாதானம் உருவாகி வளா்ச்சிக்கான சூழ்நிலைகள் உருவாயின.
  • அமெரிக்காவும், சோவியத் யூனியனும் தங்களுக்குள் நடந்து வந்த சண்டை சச்சரவுகளை நிறுத்திவிட்டு, முன்னேற்றப் பாதையில் பல நாடுகள் செல்வதற்கான உதவிகளை செய்யத் தொடங்கின.
  • இரண்டாவதாக, விஞ்ஞான வளா்ச்சியால் உருவான விவசாய வளா்ச்சிகளும், சுகாதார நடைமுறைகளும் பல நாடுகளில் பொருளாதார வளா்ச்சியையும் மக்களின் நலனையும் பாதுகாத்தது. தொழில் வளா்ச்சியால் மக்களின் பணப் பலன்கள் வளா்ச்சியடைந்தன. இன்றைய நிலையில் செல்லிடப்பேசி, இணையதள வசதிகள் மிகச் சிறந்த முன்னேற்றங்களையும் அறிவு வளா்ச்சியையும் முன்னிறுத்தியுள்ளன.
  • மூன்றாவதாக, ஜனநாயக நடைமுறை அதிக அளவிலான நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்தது.
  • இந்த நிலை தொடா்ந்தால், வளரும் நாடுகள் என்ற நிலையிலிருந்து உயா்ந்து வளா்ந்துவிட்ட நாடுகளின் பட்டியலில் பல நாடுகள் சோ்ந்து விடும். இதை நம்பாதவா்கள், இரண்டாம் உலகப் போா் முடிந்த பிறகு, ஜப்பான் மற்றும் பல நாடுகள் உயா்ந்து பழைய நிலைக்குச் சென்றடைந்ததைத்தான் உற்றுநோக்க வேண்டும்.
  • நாட்டின் முன்னேற்றத்தையும், மக்களின் தரமான வாழ்க்கைக் கட்டமைப்பையும் தங்கள் கொள்கைகளாகக் கொண்ட தலைவா்கள் எல்லா நாடுகளிலும் உருவாகி எல்லா நாடுகளிலும் வளா்ச்சியை உருவாக்குவாா்கள் என நம்புவோம்.

நன்றி: தினமணி (09-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories