வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புரிதல்
- சமூக நிறுவனங்கள் எவ்வாறு பொருளாதார வளர்ச்சியையும், நாடுகளின் செழுமையையும் தீர்மானிக்கின்றன என்பது பற்றிய ஆய்வுகளுக்காக டாரன் அசெமோக்லு (Daron Acemoglu), சைமன் ஜான்சன் (Simon Johnson), ஜேம்ஸ் ஏ.ராபின்சன் (James A Robinson) ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அசெமோக்லுவும், சைமனும் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) பேராசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். ராபின்சன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.
ஏற்றத்தாழ்வின் அடிப்படைக் காரணங்கள்:
- உலகின் முதல் 20 சதவீதப் பணக்கார நாடுகள், தற்போது ஏழை நாடுகளைவிடச் சுமார் 30 மடங்கு பணக்கார நாடுகளாக உள்ளன. பணக்கார நாடுகளுக்கும் ஏழ்மையான நாடுகளுக்கும் இடையே வருமான இடைவெளி நீடித்துவருகிறது; ஏழ்மையான சில நாடுகள் பணக்கார நாடுகளாக மாறினாலும்கூட, முன்னேறிய நாடுகளின் நிலையை இன்னும் அவை எட்டவில்லை. பொருளாதார வளர்ச்சியில் உள்ள வேறுபாடுகளையும், வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகளையும் நிர்ணயிப்பது என்ன என்பது பேரியல் பொருளாதாரத்தின் (Macro Economics) மையக் கேள்விகளில் ஒன்று.
- ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார வளர்ச்சியானது இலக்கியம், தொழில்நுட்பம், மனித மூலதனம் அல்லது திறன் மேம்பாடு போன்ற மாறிகளைப் (Variable) பரிந்துரைக்கிறது. இந்த மாறிகள் அனைத்தும் நெருங்கிய காரணங்களாக இருந்தாலும், அடிப்படைக் காரணங்களைத் தேடுவது பேரியல் பொருளாதாரத்தில் மிகத் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஒன்றாகும்.
- இங்குதான் அசெமோக்லு ஜான்சன், ராபின்சனின் பகுப்பாய்வு தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அவர்கள் மேலாதிக்கம் சார்ந்த விளக்கங்களுக்கு அப்பால் சென்று, வளர்ச்சியில் தற்போதைய ஏற்றத்தாழ்வுகளுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்தனர். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து காலனியவாதிகள் அறிமுகப்படுத்திய அல்லது தக்கவைத்துக்கொள்ளத் தேர்ந்தெடுத்த அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளே (நிறுவனங்களே) தற்போதைய வளம் சார்ந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்பதை நிரூபித்ததே இவர்களின் நுண்ணறிவும் பங்களிப்பும் ஆகும்.
சுரண்டப்பட்ட பூர்விகர்கள்:
- முதலில் ‘நிறுவனங்கள்’ என்ற சொல்லை வரையறுப்போம். பொருளாதாரத்தில் ‘நிறுவனங்கள்’ என்பது அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கையைக் கட்டமைக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என வரையறுக்கப்படுகிறது. அவை முறையான விதிகள் (அரசமைப்புகள், சட்டங்கள், சொத்துரிமைகள்), முறைசாராக் கட்டுப்பாடுகள் (சமூக விதிமுறைகள், தடைகள், பழக்கவழக்கங்கள், மரபுகள், நடத்தை விதிமுறைகள்). ஐரோப்பியர்கள் உலகின் பெரும் பகுதிகளைக் காலனிமயப்படுத்தியபோது, அன்றைய சமூக, அரசியல் நிறுவனங்களைப் பிராந்தியத்துக்கு ஏற்ப வித்தியாசமாக மாற்றினர்.
- சில காலனிகளில் பூர்விக மக்களைச் சுரண்டுவதும், காலனியவாதிகளுக்குப் பயனளிக்கும் வகையில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதும் நோக்கங்களாக இருந்தன. மற்ற சந்தர்ப்பங்களில், காலனியவாதிகள் ஐரோப்பியக் குடியேறிகளின் நீண்ட கால நலனுக்காக அனைத்தையும் உள்ளடக்கிய அரசியல், பொருளாதார அமைப்புகளை உருவாக்கினர்.
- காலனிகளில் நிறுவப்பட்ட நிறுவனங்களின் வகையைப் பாதிக்கும் ஒரு முக்கியமான காரணி, காலனிமயப்படுத்தப்பட வேண்டிய பகுதியின் மக்கள்தொகை அடர்த்தி. பூர்விக மக்கள் அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் இடத்தில், எதிர்ப்பை எதிர்பார்க்கலாம். ஆனால் தோற்கடிக்கப்பட்டவுடன், காலனியவாதிகள் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காகப் பூர்விக மக்களைக் கட்டாயப்படுத்தலாம். மறுபுறம், பூர்விக மக்கள்தொகை குறைவாக உள்ள இடங்கள் குடியேற்றக்காரர்களுக்குக் குறைந்த எதிர்ப்பையும், குறைந்த உழைப்பையும் வழங்கியதால், அதிகமான ஐரோப்பியக் குடியேற்றக்காரர்கள் குறைந்த மக்கள்தொகை கொண்ட இடங்களுக்கே சென்றனர்.
- காலனிகளில் உருவாக்கப்பட்ட அரசியல், பொருளாதார நிறுவனங்களின் வகையைப் பாதித்த முக்கியமான காரணிகளில் இதுவும் ஒன்றாகும். அதிகப் பூர்விக மக்கள்தொகை கொண்ட இடங்களில், காலனியவாதிகள் வளம்குவிப்புக்குப் பாதை வகுக்கும் அரசியல், சமூக நிறுவனங்களை நிறுவினர். மேலும், வளம்குவிப்புக்குப் பாதை வகுக்கும் அவர்களுடைய செயல்பாடுகளுக்குப் பயனளிக்க, அப்போது இருந்த சமூகப் படிநிலைகளையும் பயன்படுத்தினர்.
- இதற்கு நேர்மாறாக, பூர்விக மக்கள்தொகை குறைவாக உள்ள காலனிகளில் (காலனியவாதிகள் குடியேறிய காலனிகள் -settler colonies) தங்கள் சொந்தப் பொருளாதாரச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும், குடியேற்றத்தை மேம்படுத்த உதவும் உள்ளடங்கிய பொருளாதார நிறுவனங்களை நிறுவினர். பிரிட்டிஷ் காலனிகளாக இருந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நிறுவப்பட்ட நிறுவனங்களின் வகைக்கும், இந்தியாவில் நிறுவப்பட்ட நிறுவனங்களின் வகைக்கும் உள்ள வித்தியாசம் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம்.
வளத்தின் வேறுபாடுகள்:
- எளிமையாகச் சொன்னால், காலனிய நிறுவனங்களில் உள்ள இந்த ஆரம்பகால வேறுபாடுகளே இன்று நாம் காணும் வளத்தின் பரந்த வேறுபாடுகளுக்கு முக்கியமான காரணம் என்பதுதான் அசெமோக்லு-ஜான்சன்-ராபின்சனின் அடிப்படைப் பங்களிப்பு.
- உதாரணமாக, ஸ்பெயினின் காலனிய ஆட்சிக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையில் பிரிக்கப்பட்ட நோகேல்ஸ் நகரத்தின் வாழ்க்கை நிலைமைகளில் தற்போதைய வேறுபாடுகளை ஆசிரியர்கள் ஆய்வுசெய்தனர். அமெரிக்காவில் நிறுவப்பட்ட முற்போக்கான சமூக, அரசியல், பொருளாதார நிறுவனங்களே (உதாரணமாக, சொத்துரிமை, பொது வாக்குரிமை, தொழிலாளர் உரிமைகள்) மெக்ஸிகன் நோகேல்ஸைவிட அமெரிக்க நோகேல்ஸின் வளர்ச்சிக்குக் காரணம் என்பதை அவர்களின் ஆராய்ச்சி நிரூபித்தது.
- இதேபோன்ற முறையை பிரிட்டிஷ், பிரெஞ்சு, போர்த்துகீசியக் குடியேற்றக்காரர்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தியதாக ஆசிரியர்களின் ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. சுருக்கமாக, காலனியவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட வளம்குவிப்புக்குப் பாதை வகுக்கும் நிறுவனங்களின் காரணமாகக் கடந்த காலத்தில் மிகவும் வளமான, அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட காலனிகள் தற்போதைய ஏழை நாடுகளாகும். அதேபோன்று, குடியேற்றவாசிகள் வாழ்ந்த குறைந்த மக்கள்தொகை கொண்ட காலனிகளில் அவர்கள் அறிமுகப்படுத்திய முற்போக்கான நிறுவனங்களின் காரணமாகத் தற்போது அவை பணக்கார நாடுகளாக உள்ளன.
- மற்றொரு முக்கியமான காரணி - குடியேறிய சமூகங்களில் ஏற்பட்ட நோய்களின் பரவல் நிறுவன வேறுபாடுகளுக்குப் பங்களித்துள்ளது என்பதைத் தங்கள் ஆராய்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளனர். கொடிய நோய்களின் பரவலானது அமெரிக்காவின் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு இடையே பெரிதும் வேறுபடுகிறது. இறப்புப் புள்ளிவிவரங்கள், பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் ஆப்ரிக்கப் பகுதிகள், ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதிகளைக் காட்டிலும் தொற்று நோய்களால் அதிக இறப்புகளைக் கொண்டிருப்பதாகக் காட்டுகின்றன.
- இதேபோல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் குடியேறிய பிரிட்டிஷ் குடியேற்றங்களின் இறப்புப் புள்ளிவிவரங்கள், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின்போது இந்தியாவில், பிற இடங்களில் நிறுவப்பட்ட நிறுவனங்களின் வகைகளில் உள்ள வேறுபாடுகளை விளக்குகின்றன. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், நிறுவனங்களின் பரிணாம வளர்ச்சியை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தனர்.
விடை தேடும் கேள்விகள்:
- குடியேற்றக்காரர்களால் உருவாக்கப்பட்ட வளம்குவிப்புக்குப் பாதை வகுக்கும் சமூக, அரசியல் நிறுவனங்கள் ஏன் இன்னும் வளர்கின்றன? சீர்திருத்தங்களுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் வளம்குவிப்புக்குப் பாதை வகுக்கும் நிறுவனங்கள் எவ்வாறு நீண்ட காலமாக நீடிக்கின்றன? அதே நேரத்தில், சமூக, அரசியல், பொருளாதார நிறுவனங்கள் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.
- உதாரணமாக பெரும்பான்மையினரின் அரசியல் உரிமைகள் அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதன் மூலம் விரிவாக்கப்பட்டன. இத்தகைய மாற்றங்கள் எப்போது, எப்படி நிகழ்கின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு அனுபவரீதியாகப் பதில் சொல்வது கடினம். மாறாக, இத்தகைய கேள்விகளுக்கு எதிர்நிலையை உருவாக்கும் திறன் கொண்ட கோட்பாட்டு மாதிரிகள் தேவை.
- விளையாட்டுக் கோட்பாட்டின் (Game Theory) பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்தி, அத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்க மாதிரிகளை ஆசிரியர்கள் உருவாக்கினர். இது அவர்களின் மிகவும் புதுமையான பங்களிப்பு. சக்திவாய்ந்த உயரடுக்கு வர்க்கம் தங்களுக்கு அதிகார உரிமையை வழங்கும் அரசியல், சமூகக் கட்டமைப்புகளை மாற்றும் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பதை இந்தப் பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் நிரூபித்துள்ளனர். வளம்குவிப்புக்குப் பாதை வகுக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து நீடிப்பதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
- இந்தப் பகுப்பாய்வில் புதிதாக என்ன இருக்கிறது என்று கேட்கலாம். ஏனெனில், பொருளாதார வளர்ச்சி சார்ந்த மார்க்சியப் பகுப்பாய்வின் மையமாக, சமத்துவமற்ற அதிகார உறவுகளே மையப் பங்கு வகிக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்களின் பகுப்பாய்வு தனித்து நின்றதற்குக் காரணம், நிறுவனங்களின் பங்கு, அதிகாரத்தினுடைய பங்கின் மையத்தன்மையை ஆதிக்க மரபுவழி பொருளாதாரக் கோட்பாட்டின் எல்லைக்குள் இருந்து அவர்கள் வெளிப்படுத்தியதே.
- எவ்வாறு இருந்தாலும் நோபல் பரிசின் அரசியலைத் தாண்டி, இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அவர்களின் பகுப்பாய்வுக் கட்டமைப்பைப் பயன்படுத்துவது மிகவும் ஆக்கபூர்வமானதாக இருக்கும். இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய கடினமான உண்மைகளில் ஒன்று இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான சமத்துவமற்ற வளர்ச்சியாகும். வளர்ச்சிக் கொள்கை சிந்தனையில் ஆதிக்கம் செலுத்திவரும் பொருளாதார மரபுவழி, பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்நுட்பம் (Technology), மனித மூலதனத்தின் (Human capital) பங்கைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது.
- ஆனால், இந்த ஆண்டின் நோபல் பரிசு, இந்த நெருங்கிய காரணிகளைத் தாண்டி, இந்தியாவின் சமத்துவமற்ற வளர்ச்சியின் பகுப்பாய்வில் சாதி, அரசியல் அதிகாரம், பாலின விதிமுறைகள் போன்ற சமூக நிறுவனங்களின் பங்கை விமர்சனரீதியாகப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை ஊக்குவிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 10 – 2024)