- இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியிட்ட நிதி மற்றும் கடன் கொள்கை இனிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரெப்போ விகிதத்தை (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகாலக் கடன்களுக்கான வட்டி விகிதம்) 0.35 சதவீதம் குறைத்துள்ளார். அதாவது 5.75 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதத்தை 5.4 சதவீதமாகக் குறைத்திருக்கிறார். வட்டி விகிதம் தற்போதைய சூழலில் குறையும் என்பது பரவலாக எதிர்பார்த்ததுதான். எனவே, வட்டி விகிதக் குறைப்பு வரவேற்கத்தக்கது என்பது ஒருபுறம் இருக்க, இதில் சில புதுமைகளும் நிகழ்ந்துள்ளன.
ரெப்போ விகிதம்
- ஒன்று, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தாலோ அல்லது உயர்த்தினாலோ, நீண்டகால வழக்கம் என்னவெனில், 0.25 சதவீதம் அல்லது 0.50 சதவீதம் என்ற அளவில்தான் குறைப்பார்கள்; அல்லது உயர்த்துவார்கள். ரெப்போ விகிதத்தை 0.35 சதவீதமாகக் குறைத்தது ரிசர்வ் வங்கியின் வரலாற்றில் இதுவே முதல் முறை.
தற்போது சர்வதேச அளவில் பொருளாதாரச் சுணக்கம் நிலவுகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தெரிகிறது.
- இந்த நிலையில் வட்டிக் குறைப்பு அவசியம் என்பது வெளிப்படை. 0.25 சதவீதம் குறைத்தால் அது குறைவாக இருக்கும்; 0.50 சதவீதம் குறைத்தால் அதிகமாக இருக்கும். அது பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். எனவே, இரண்டுக்கும் இடையே 0.35 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, ரெப்போ விகிதம் 5.4 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவு இப்போது தொடர்ந்து 4-ஆவது முறையாகக் குறைத்துள்ளது.
- அதாவது, 2019 பிப்ரவரியில் 6.25 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், ஏப்ரல் மாதம் 6 சதவீதம், ஜுன் மாதம் 5.75 சதவீதம், ஆகஸ்ட் 7-ஆம் தேதி 5.4 சதவீதம் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் லிமூலம் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை மொத்தம் 1.10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
- மூன்றாவதாக, ரெப்போ விகிதம் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது 5.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதும் புதுமைதான்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அந்த வளர்ச்சி விகிதம் சற்றே குறைந்து, 6.9 சதவீதமாக இருக்கும் என்று புதிய நிதிக் கொள்கையில் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.
- இந்த நிலையில் ஒரு சாதகமான அம்சம் என்னவெனில், நுகர்வோர் விலைவாசி அடிப்படையிலான பணவீக்கத்தைப் பொருத்தவரை, நடப்பு நிதியாண்டில், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில், சற்றே அதிகரித்து 3.5 முதல் 3.7 சதவீதமாக உயரக்கூடும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி லிமூன்று மாதங்களில் நுகர்வோர் விலைவாசி அடிப்படையிலான பணவீக்க விகிதம் 3.6 சதவீதமாக இருக்கும். இது பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
- ரிசர்வ் வங்கி எந்த அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது? இதற்கென கடந்த சில ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் ஒரு குழு செயல்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கைக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன; ஒன்று, பணவீக்கத்தையும் விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இரண்டாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடன்கள் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்கு வழிவகுக்க வேண்டும்.
தற்சமயம் பணவீக்க விகிதம், ரிசர்வ் வங்கி ஏற்கெனவே நிர்ணயித்த அளவுக்கு உட்பட்டே உள்ளது என்பது ஆறுதலான விஷயம்.
பொருளாதார வளர்ச்சி
- பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தவரை, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள சுணக்கம் இந்தியாவையும் பாதிக்கத்தான் செய்கிறது. சர்வதேச அளவில் வர்த்தகம் தொடர்பான சிக்கல் அனைத்து நாடுகளையும் பாதித்து வருகிறது. இந்தத் தருணத்தில் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனில், தனியார் முதலீட்டை அதிகரிப்பது அவசியம்.
- அதற்கு ஏதுவாகத்தான் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. வட்டி குறையும்போது, தனியார் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற்று புதிய தொழில் தொடங்குவார்கள்; அல்லது ஏற்கெனவே ஈடுபட்டுள்ள தொழிலை விரிவாக்கம் செய்வார்கள். அதற்குத் தேவையான தொகையை வங்கிகளில் கடனாகப் பெறுவார்கள்.
- இதுதான் கடன் கொள்கையின் அடிநாதம்.
உலக நாடுகள் பலவற்றிலும் அந்தந்த நாட்டு ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. உதாரணமாக, நியூஸிலாந்து வட்டி விகிதத்தை 0.50 சதவீதம், தாய்லாந்து வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் எனக் குறைத்துள்ளன.
இந்தியாவில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட வட்டிக் குறைப்பு நடவடிக்கைகள் இப்போதுதான் மெல்ல, மெல்ல பலன் தரத் தொடங்கியுள்ளன. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) 5.8 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது.
- இது தவிர வட்டி குறையும்போது, தனி நபர்கள் தங்கள் சொந்த வீடு கனவை நனவாக்கிக் கொள்ள, வங்கிக் கடன் வாங்குவார்கள். வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு ரெப்போ (வட்டி விகிதம்) குறைந்திருப்பது ஒரு நல்ல செய்தி. ஏற்கெனவே இதுபோன்று கடன் பெற்றவர்களுடைய மாதத் தவணை (இ.எம்.ஐ.) குறையும்.
- ரெப்போ (வட்டி விகிதம்) குறைந்தவுடன் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனுக்கான வட்டியைக் குறைக்கிறார்களா? கடந்த சில ஆண்டுகளில் வங்கிகள் அப்படிச் செய்யவில்லை என்ற புகார் இருந்து வந்தது. அண்மையில் ரிசர்வ் வங்கி தலையிட்டு, வங்கிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, ரெப்போ விகிதத்துக்கு தக்கவாறு வட்டியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எனவே, இப்போது ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டதன் பலன் உடனே கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- பொதுத் துறையில் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக வட்டிக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுவிட்டது. இனி மற்ற வங்கிகளும் அவ்வாறே செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். அப்படிச் செய்யத் தவறினால் தொடர்புடைய வங்கிகள் மீது உரிய நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்து கடந்த 7-ஆம் தேதி நிதிக் கொள்கை அறிவிப்புக்குப் பின் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொதுத் துறை வங்கித் தலைவர்களிடம் தாமே பேசியிருப்பதாகத் தெரிவித்தார்.
நிதி ஆதாரம்
- அது தவிர ஜூன் மாதம் வரை பொதுவாகவே நிதி ஆதாரம் சற்று குறைவாக இருந்ததாகவும், கடந்த இரண்டு மாதங்களில் நிதி ஆதாரம் (லிக்விடிட்டி) சிறப்பாக இருப்பதால், வட்டிக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தருவதில் சுணக்கமோ தாமதமோ இருக்காது என்று ஆளுநர் உறுதிபடக் கூறியிருக்கிறார்.
ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டதன் நோக்கமே, தொழில் முதலீட்டாளர்கள் தங்கள் தொழில்களில் கூடுதல் முதலீடு செய்ய குறைந்த வட்டி விகிதம் ஊக்குவிக்கும் என்பதுதான்.
- அதேபோல் தனி நபர்களும் குறைந்த வட்டியைப் பயன்படுத்திக் கொண்டு, வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் பெற ஏதுவாக இருக்கும் என்பதுதான். இதை வங்கிகள் கருத்தில் கொண்டு தங்கள் வட்டி விகிதங்களை முறைப்படி குறைக்க வேண்டும். இது வங்கிகளின் தலையாய கடமையாகும். இதன் வாயிலாகத்தான் சுணக்கம் அடைந்துள்ள தொழில்கள் புத்துயிர் பெறும்.
- பணவீக்க விகிதம் அடுத்த ஓராண்டுக்கு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. வங்கி சேவிங்ஸ் கணக்கில் ரூபாய் ஒரு லட்சத்துக்கு அதிகமாக வைத்திருப்பவர்களின் வட்டி வருவாய் குறையும். காரணம், அந்த வகை கணக்குகள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, கடனுக்கான வட்டி குறையும்போது பொதுவாகவே வைப்புத் தொகைக்கான (டெபாசிட்) வட்டி குறையும் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், முதியோர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை வங்கிகளில் டெபாசிட் செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாயை மட்டுமே நம்பியுள்ளனர்.
- மூத்த குடிமக்களுக்கு தற்போது 0.5 சதவீதம் கூடுதல் வட்டி தருவது போதுமானது அல்ல. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் குறைந்தபட்சம் 1 சதவீத வட்டி கூடுதலாக வழங்க வேண்டும். மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் மூத்த குடிமக்களின் கோரிக்கையைப் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும்.
- மொத்தத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்து தன் பங்குக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துவிட்டது. இனி மத்திய அரசு தொழில் வளர்ச்சிக்கு தனியார் முதலீடுகளைப் பெருக்குவதற்கு சிறப்பு ஊக்குவிப்புத் திட்டங்கள், ஏற்றுமதியாளர்களுக்குப் புதிய சலுகைகள் உள்ளிட்ட செயல்பாடுகளை விரைந்து மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி: தினமணி(13-08-2019)