TNPSC Thervupettagam

வளர்ச்சித் திட்டங்கள் பழங்குடியினருக்கும் பயனளிக்க வேண்டும்!

August 23 , 2024 5 hrs 0 min 29 0

வளர்ச்சித் திட்டங்கள் பழங்குடியினருக்கும் பயனளிக்க வேண்டும்!

  • தமிழ்நாட்டில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் கல்வியும் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதிகளில் அரசுத் திட்டங்கள் ஏற்படுத்தியுள்ள விளைவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாநிலத் திட்டக் குழு இதைத் தெரிவித்துள்ளது.
  • கிழக்கு மலைத் தொடரில் அமைந்துள்ள சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்த ஆய்வு கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கும் பகுதிகளில்கூடப் போக்குவரத்து வசதி இல்லை.
  • சில பகுதிகளில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துகள் இந்தப் பகுதிகளில் இல்லை. நிறைய இடங்களுக்குச் சாலைகள்கூட அமைக்கப்படவில்லை. நடந்து மட்டுமே செல்லக்கூடிய வகையில் பெரும்பாலான பகுதிகள் பின்தங்கியிருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகள் தொலைவில் அமைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி, பெண் குழந்தைகளைப் படிப்பதற்கு வெளியூருக்கு அனுப்பத் தயங்கும் பெற்றோர், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு அவர்களுக்கு மணம் முடித்து வைத்துவிடுகிறார்கள்.
  • பல குழந்தைகள் பெற்றோருடன் வேலைக்குச் செல்கிறார்கள். மலைப்பகுதிகளில் ஐ.டி.ஐ. தவிர, கலைக் கல்லூரிகளோ பாலிடெக்னிக் கல்லூரிகளோ இல்லை. இதனால், பழங்குடியினர் குழந்தைகளின் உயர் கல்வியும் தடைபடுகிறது.
  • சமவெளிப் பகுதிகளில் பள்ளிகள் அமைப்பதைப் போன்ற அணுகுமுறை மலைப்பகுதிகளுக்குப் பொருந்தாது. சமவெளிப் பகுதிகளில் இருப்பவர்கள் ஐந்து கி.மீ. தொலைவைக் கடந்து பள்ளிக்குச் செல்வதும் மலைப்பகுதியில் அதே தொலைவைக் கடப்பதும் சமமானதல்ல என்கிற புரிதலோடு, மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் இங்கே பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.
  • பள்ளிகள் - கல்லூரிகளை அதிகரிப்பது, பேருந்துகளை அதிக எண்ணிக்கையில் இயக்குவது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களின் கல்வியோடு நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, இவற்றைச் சமூக வளர்ச்சிக்கான அடிப்படையாகக் கருதி அரசு செயல்பட வேண்டும். ஜப்பானில் ஒரே ஒரு மாணவிக்காக ரயில் சேவை இயக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
  • அரசுப் பள்ளிகளிலும், அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளிலும் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும். பணி வாய்ப்புக்கான உத்தரவாதம் கிடைக்கும்பட்சத்தில், பழங்குடியினர் அதிக அளவில் கல்வி கற்பதையும் இது ஊக்குவிக்கும்.
  • மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பழைய அரசுத் திட்டங்களைப் பற்றி மட்டுமே மலைப்பகுதி மக்கள் அறிந்திருக்கிறார்கள். அரசின் புதிய திட்டங்கள் குறித்து அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் திட்டங்களின் பலனைப் பெறுவதற்கான வழிகள் இல்லை.
  • இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 60% மட்டுமே சாதிச் சான்றிதழ் வைத்திருக்கிறார்கள். பழங்குடியினருக்கான அடையாள அட்டையை 15% மக்கள் பெற்றிருக்கிறார்கள். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெறுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் இதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் கருத்தில்கொண்டு, அந்தந்தப் பகுதிகளில் முகாம் அமைத்து இதற்கான பணிகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.
  • 2011 கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் ஒருங்கிணைந்த பட்டியல் பழங்குடியினர் எண்ணிக்கை 7.94 லட்சம். தமிழக மக்கள்தொகையில் 1.01% அளவுக்கு அங்கம் வகிக்கும் இவர்களையும் உள்ளடக்கியதாக வளர்ச்சித் திட்டங்கள் அமைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories