- வளர்ந்து வரும் நாடுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகை, வளர்ந்து வரும் தொழிற்சாலைகள், வாகனப்பெருக்கம், நகரமயமாக்கல், நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்களை அதிகளவு பயன்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக வளி மண்டலத்தில் கரியமில வாயு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்து வருகிறது.
- இதன் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்படுவதாக ஐரோப்பிய யூனியன் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, கார்பன் எல்லை வரி எனப்படும் இறக்குமதி வரி வரும் 2026-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
- சுற்றுச்சூழலை பெருமளவில் பாதிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள நாடுகளிலிருந்து வெளியாகும் கார்பன்தான் பருவநிலை மாற்றத்திற்கு காரணமெனவும், வளர்ந்து வரும் நாடுகளில், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் ஏதும் நடைமுறையில் இல்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
- சமீபத்தில் துபையில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் (சி.ஓ.பி28) நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், "பிற நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும்போது கார்பன் கசிவைத் தடுப்பதே கார்பன் எல்லை வரியின் நோக்கம். 2030-ஆம் ஆண்டிற்குள் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் கார்பன் உமிழ்வை 50 சதவீதம் குறைப்பதே நம் இலக்கு' என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் ஓப்கே ஹேக்ஸ்ட்ரா தெரிவித்தார். இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
- அதே நேரம், ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான மாநாட்டின்போது வெளியிடப்பட்ட ஆய்வில், கார்பனுக்கு, டன்னுக்கு 44 அமெரிக்க டாலர் வரி விதிக்கப்பட்டால், விநியோகச் சங்கிலிருந்து கார்பன் மாசுபாடு பாதியாகக் குறையும். ஆனால், வளர்ந்த நாடுகள் இவ்வரி மூலம் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் லாபம் ஈட்டும் என்றும், வளரும் நாடுகள் 5.9 பில்லியன் டாலர் வரை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கார்பன் வரி விதிப்பின் மூலம் ஆப்பிரிக்கா ஒவ்வோர் ஆண்டும் 25 பில்லியன் டாலரை இழக்க வேண்டி வரும் என ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் தலைவர் எச்சரித்துள்ளார்.
- ஐரோப்பிய ஒன்றியத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் அவற்றின் உற்பத்தியை மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்வதால், அத்தொழிற்சாலைகள் மீதுதான் வரி விதிக்க வேண்டுமென வளர்ந்து வரும் நாடுகள் கருத்துத் தெரிவிக்கின்றன. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கார்பன் எல்லை வரியை விதிக்கிறது.
- ஐரோப்பிய ஒன்றியம், மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மீது கார்பன் வரி விதிப்பது, ஐரோப்பாவில் உற்பத்தியாகும் பொருள்களை மலிவான விலைக்கு வளரும் நாடுகள் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது. ஏனெனில், இந்த வரி விதிப்பு வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கும்.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் கார்பன் உமிழ்வு அளவு பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கான ஒரு சரியான அளவுகோலாக இருக்கும் என இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அதாவது, எந்த நாடு பருவநிலை மாற்றத்துக்குக் காரணமாக, அதிக அளவில் கார்பனை உமிழ்கிறதோ, அதன் தீவிரத் தன்மைக்கு ஏற்ற வகையில் அந்த நாட்டுக்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்கிறது இந்தியா.
- அதிக அளவில் கார்பன் உமிழும் தொழிற்சாலைகள் மீது அதிக அளவில் கார்பன் வரி விதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது. இதனால், இந்தியாவில் இயங்கி வரும் உரம், சிமென்ட், எஃகு, அலுமினியம், மின்சாரம், ஹைட்ரஜன் ஆகிய தொழிற்சாலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
- 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த கார்பன் வரி விதிப்பு கப்பல், போக்குவரத்து போன்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதனால், பெரிய தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிப்படைவதோடு, சந்தையில் பொருள்களின் விலையும் உயரும்.
- கடந்த அக்டோபர் முதல் கார்பனை உமிழும், எஃகு, சிமென்ட், உரம், அலுமினியம், ஹைட்ரோகார்பன் பொருள்கள் உள்பட ஏழு முக்கியத் துறைகளைச் சேர்ந்த உள்நாட்டு நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கார்பன் வெளியேற்றம் தொடர்பான தரவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், இறக்குமதிப் பொருள்களுக்கு கார்பன் எல்லை வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம், வளர்ந்து வரும் நாடுகளை பாதிக்கும் என்பதால் இந்தியா இதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
- பருவநிலை மாற்றம் தொடர்பாக நாடுகள் குழு அமைத்து வரும் இவ்வேளையில், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கிடையேயான பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னையால் ஏற்பட்டுள்ள பிளவு, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள இந்த கார்பன் வரியால் மேலும் விரிவாகும்.
- ஆப்பிரிக்க கண்டத்திலும், ஆசிய கண்டத்திலும், தென்னமெரிக்காவிலும் இயங்கி வரும் நாடுகள் புதைபடிவ எரிபொருள்களையே தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளன. இவ்வளங்களை புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றும் முயற்சி இந்நாடுகளில் ஆரம்ப நிலையிலேயே உள்ளன.
- ஏனெனில், உலக வங்கியிடமிருந்து போதுமான அளவில் நிதி பெறாத நிலையில், இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இந்நாடுகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது எளிதான செயலல்ல.
- ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லை வரி விதிப்பு முடிவு, தொழிற்சாலைகளை உலகமயமாக்கலுக்கு பாதையிட்டுக் கொடுக்கும். மேலும், இந்த வரி, வளரும் நாடுகளில் காணப்படும் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடும். இது பல நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தைகளுக்கும் தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி (04 – 01 – 2024)