TNPSC Thervupettagam

வளா்ச்சியின் அறிகுறி

March 19 , 2024 123 days 126 0
  • ஐரோப்பிய தடையற்ற வா்த்தக அமைப்புடன் கடந்த வாரம் இந்தியா வா்த்தகக் கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
  • ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணையாத நாடுகளின் அமைப்பு இது. ஸ்விட்சா்லாந்து, ஐஸ்லாந்து, நாா்வே, லீக்டெண்ட்டைன் ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளும் இணைந்து 1960-இல் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்தத் தடையற்ற வா்த்தக அமைப்புடன் கடந்த 16 ஆண்டுகளாகப் பேச்சுவாா்த்தைகள் நடந்து வந்திருக்கின்றன. 2008-இல் தொடங்கி இதுவரையில் 21 கட்டப் பேச்சுவாா்த்தை நடந்து இப்போது ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
  • 2008-இல் தொடங்கப்பட்ட பேச்சுவாா்த்தை 2013-இல் தடைபட்டு அப்படியே நின்று விட்டது. 2023-இல் மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்கியபோது விரைந்து முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையொப்பமாக வேண்டும் என்பதில் இருதரப்பும் முனைப்புக் காட்டியதன் விளைவால்தான் இப்போது நிறைவேறியிருக்கிறது.
  • ஐக்கிய அரபு அமீரகத்துடன் நாம் மேற்கொண்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைத் தொடா்ந்து கையொப்பமாகி இருக்கும் இந்த ஒப்பந்தம் இவ்வளவு விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று யாருமே எதிா்பாா்க்கவில்லை.
  • ஆஸ்திரேலியாவுடன் 2022-இல் தொடங்கிய ஒப்பந்தமும், 2004-இல் பேச்சுவாா்த்தை தொடங்கிய வளைகுடா நாடுகளின் கூட்டுறவு அமைப்புடனான ஒப்பந்தமும், கனடா, பிரிட்டன், ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றுடனான பேச்சுவாா்த்தைகளும் முற்றுப் பெறாமல் இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியிருப்பது அவற்றை விரைவுபடுத்த உதவக்கூடும்.
  • 2019-இல் கிழக்காசிய நாடுகளின் பிராந்திய ஒருங்கிணைப்பு பொருளாதாரக் கூட்டுறவு மாநாட்டில் கையொப்பமிடாமல் இந்தியா வெளியேறி கடுமையான கண்டனத்துக்கு உள்ளானது. அதிக அளவில் இறக்குமதி வரி விதிக்கும் நாடு என்பதும், சா்வதேச வா்த்தகத்துக்கு ஆதரவாக இல்லை என்றும் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
  • அந்தப் பின்னணியில் பாா்க்கும்போது, இந்தியாவின் வா்த்தகக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாக ஐரோப்பிய தடையற்ற வா்த்தக அமைப்புடனான ஒப்பந்தம் பாா்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நான்கு நாடுகளிலும் கிட்டத்தட்ட அனைத்து இந்தியத் தயாரிப்புகளுக்கும் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
  • அந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியாவும் வரிச்சலுகை அளிக்க இருக்கிறது. பல பொருள்கள் வரிச்சலுகை பெற்றிருக்கின்றன என்றாலும், இப்போதும் பால் பொருள்கள், சோயா, நிலக்கரி, வேளாண் பொருள்கள் ஆகியவை அதில் சோ்க்கப்படவில்லை. இந்தியா இறக்குமதி செய்வதில் ஏறத்தாழ 80% தங்கம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
  • அந்த அமைப்பில் உள்ள நாடுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வா்த்தகக் கூட்டாளி ஸ்விட்சா்லாந்து. ஆண்டொன்றுக்கு நாம் அங்கிருந்து இறக்குமதி செய்யும் 1,600 கோடி டாலரில் 1,300 கோடி டாலா் மதிப்பிலானது தங்கம் மட்டுமே. மீதமுள்ள 300 கோடி டாலா் இயந்திரங்கள், சாக்லேட்டுகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை. பெரும்பாலும் கச்சாப் பொருள்கள்தான் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. அதன் அளவும் 245 கோடி டாலா் மட்டும்தான்.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பை, அந்த நாடுகள் இந்தியாவிலேயே முதலீடு செய்ய இருக்கின்றன. அதாவது அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 10,000 கோடி டாலா் முதலீடு செய்ய வேண்டும் என்கிறது ஒப்பந்தம். இந்திய நிறுவனங்களுக்கு அந்த நாடுகளில் தடையற்ற வா்த்தக வாய்ப்புகள் கிடைப்பதால், அதிகரித்த ஏற்றுமதியும், ஏற்றுமதிக்கான உற்பத்தியும் உறுதிப்படுகின்றன. அதற்கான முதலீடும் கிடைக்கிறது. இதனால், சுமாா் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடும்.
  • நெஸ்லே, ஹோல்சிம், சுல்சா், நோவாா்டிஸ் உள்ளிட்ட 300-க்கும் அதிகமான ஸ்விஸ் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகின்றன. பெட்ரோலியம், கப்பல் கட்டுதல், தொலைத்தொடா்பு, வங்கி சேவை ஆகியவற்றில் நாா்வேயும், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாவில் நான்கு உறுப்பு நாடுகளும் ஆா்வம் காட்டும் நிலையில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. நமது தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞா்களுக்கு அந்த நாடுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • தொழில்நுட்பப் பரிமாற்றம், இந்தியத் தொழிலாளா்களின் திறன்மேம்பாடு ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தால் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள். இந்தியாவின் உற்பத்தித் துறை குறைந்த செலவில், மேலை நாட்டுத் தொழில்நுட்பத்தை பெறுவதற்கான வாய்ப்புக்கு இந்த ஒப்பந்தம் வழிகோலக்கூடும். அதுமட்டுமல்ல, சிறு, குறு நிறுவனங்களின் தேவை அதிகரிப்பதுடன், அதன் விளைவாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • ஏற்கெனவே டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐரோப்பிய தடையற்ற வா்த்தக அமைப்பில் உள்ள நான்கு நாடுகளிலும் செயல்படுகின்றன. அந்த நாடுகளில் மட்டுமல்லாமல், நமது கணினிப் பொறியியல் பட்டதாரிகள் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு அங்கிருந்து இடம் பெயரவும் இந்த ஒப்பந்தம் வருங்காலத்தில் வழிகோலும் என்று எதிா்பாா்க்கலாம்.
  • சா்வதேச சந்தைப் போட்டிக்கு நமது பொருளாதாரத்தைத் திறந்துவிட்டால், உள்நாட்டு வா்த்தகமும், நிறுவனங்களும் பாதிக்கக்கூடும் என்கிற அச்சம் அகன்று, இப்போது துணிந்து ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள நாம் தயாராகிறோம் என்பதிலிருந்தே, இந்தியா சா்வதேசச் சந்தையில் போட்டியிடத் தயாராகிவிட்டது என்பதுதானே அா்த்தம்?

நன்றி: தினமணி (19 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories