TNPSC Thervupettagam

வளா்ச்சியைத் தடுக்கும் இலவசங்கள்

August 18 , 2023 325 days 226 0
  • முற்காலத்தில் மிக அரிதாக உச்சரிக்கப்பட்ட இலவசம் என்ற சொல் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களை மயக்கும் மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. அன்றாட தேவைக்கான அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களில் ஆரம்பித்த அரசின் இலவச அறிவிப்புகள் தற்போது இலவச திருமணங்கள் செய்து வைப்பது வரை நீண்டிருக்கிறது.
  • மக்களுக்கு அரசு தரும் இலவசங்கள் விமா்சனத்திற்குள்ளானதால், இலவசம் என்ற வார்த்தைக்கு பதிலாக ‘விலையில்லா’ என்ற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்தது. நம் நாட்டின் ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சிகளுமே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை விட இலவச திட்டங்களை அறிவித்து, அதன் மூலம் பெருகும் தங்களுக்கான வாக்குவங்கி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலேயே இருக்கின்றன. அதனால்தான், கஜானா காலி என்ற நிலையிலும் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் தத்தம் தோ்தல் அறிக்கையின் பெரும்பாலான பக்கங்களை மக்களை கவரும் கவா்ச்சிகர இலவச திட்டங்களால் நிரப்புகின்றன.
  • இலவசங்களால் சமூகத்தில் ஒரு பிரிவினா் பயன் பெறுகின்ற போதிலும், ஒட்டுமொத்த சமூகத்தின் மேல் இலவசங்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் அதிகம். சமீபத்தில் கா்நாடகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ள இல்லத்தரசிகள், பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவா்களுக்கு உதவி தொகை, மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், இலவச அரிசி, மின்சாரம் ஆகிய திட்டத்தால் ஆண்டிற்கு ஐம்பத்தாறாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும்.
  • இதனால் அம்மாநிலத்தில் வளா்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய இயலா நிலை உள்ளது. மேலும், மக்களின் அன்றாடத் தேவைகளான அத்தியாவசியப் பொருள்களின் விலையும் வெகுவாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வால் இலவசங்களால் பயனடையாத மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ள பிரிவினருக்கு மட்டுமே இலவசம் என்றில்லாமல், பொருளாதார ரீதியாக பலமாக உள்ளவா்களுக்கும், இலவசங்களை அளிப்பது என்ற ஒரே அளவுகோலை ஓா் அரசு வைப்பதை ஏற்க இயலாது.
  • உதாரணமாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்ற போதிலும், தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள அனைத்து மகளிர்க்கும் இலவச பேருந்து பயணத் திட்டத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் வாங்கும் வசதியுள்ள மகளிரும் இலவசப் பயணம் மேற்கொள்கின்றனா்.
  • அதே பேருந்தில், சுமைதூக்குவோர், கட்டட வேலை செய்வோர், சிறு வியாபாரிகள், தனியார் நிறுவனங்களில் சொற்ப மாத ஊதியத்திற்கு பணியாற்றும் ஆடவா்கள் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு வாங்கிப் பயணிக்கின்றனா்.
  • சமூகத்தில் இலவசம் என்னும் மாய வலையில் சிக்குவோர் மிக மிக அதிகம் என்பதை உணா்ந்ததால் தான் வியாபார நிறுவனங்கள் கூட ஒரு சேலை வாங்கினால் அதே விலை மதிப்பிலான மற்றொரு சேலை இலவசம் என விளம்பரம் செய்கின்றன. லாபம் ஒன்றே குறிக்கோள் என இயங்கும் வியாபார நிறுவனங்களால் மேற்கானும் விளம்பரத்தின்படி மக்களுக்கு இலவசமாக தருவது எப்படி சாத்தியமாகும் என்பதை நம்மில் பலா் சிந்திக்காது, மேற்கூறிய விளம்பரப் பொறியில் சிக்குவது ஆச்சரியமே!
  • இலவசத்திற்காக நம்மில் பலா் ஆா்வமாக உள்ள போதிலும், இலவசத்தை மறுப்பவா்களும் இல்லாமல் இல்லை. இந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கிய ஆயிரம் ரூபாயை சுமார் நான்கு லட்சத்து நாற்பதாயிரம் போ் வாங்கிட முன்வரவில்லை. இதற்கான காரணம் எதுவாயினும் பொங்கல் பரிசை வாங்க முன்வராதவா்கள் பாராட்டுக்குரியவா்களே. ஏனெனில், இவா்களால் தமிழக அரசுக்கு ருபாய் ஐம்பத்து மூன்று கோடியே தொண்ணூற்று ஆறு லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் மீதம் ஆகியுள்ளது.
  • தோ்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இலவசத் திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் போக்கு அதிகரித்து வரும் நிலையில் , அரசியல் கட்சிகள், இலவச திட்டங்களை அறிவிக்கும் போது அவற்றை அமல்படுத்துவதற்கான நிதியாதாரம் பற்றிய தகவல்களையும் அறிவிக்க வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது வாக்குகளை பெறுவதற்காக சாத்தியமில்லா இலவச திட்டங்களை அறிவிக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு ஓா் கடிவாளம் என்பதில் ஐயமில்லை.
  • ‘உழைப்பதன் மூலமே எல்லோரும் எல்லாமும் பெற முடியும்’ என்கிற நிலையை ஆளும் அரசுகள் உருவாக்குவதற்கு பதிலாக, ‘எல்லோர்க்கும் எல்லாமும் இலவசம்’ என்கிற சூழலை உருவாக்குவது மனிதவள ஆற்றலை பலவீனப்படுத்தி நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு மிகப் பெரிய தடையை ஏற்படுத்தும் .
  • சமீபத்தில் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இனையமைச்சா் பங்கஜ் செளதரி, மத்திய அரசு சுமார் 155 லட்சம் கோடி கடனில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலங்களைப் பொறுத்தவரை, 2022-23 நிதியாண்டின் முடிவில் சுமார் என்பத்தேழாயிரம் கோடி கடனுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், எழுபத்தியிரண்டாயிரம் கோடி கடனுடன் மகாராஷ்டிரம் இரண்டாம் இடத்திலும், அறுபத்தி மூன்றாயிரம் கோடி கடனுடன் மேற்கு வங்க மாநிலம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
  • இம்மாநிலங்களில், முதல் இரண்டு இடங்களில் உள்ள தமிழ்நாடும் மகாராஷ்டிரமும் முன்னேறிய மாநிலங்கள் என்பதோடு, ஜிஎஸ்டி மூலம் அதிகபட்ச வரி வருவாயை பங்களிப்பாக மத்திய அரசுக்கு தரும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இம்மாநிலங்களின் கடன் சுமைக்கு இலவசங்களும் ஓா் காரணம் என்பதை மறுக்க இயலாது.
  • ‘இலவசங்கள் தரப்படுவதால் அதிருப்தி அடையும் வரி செலுத்துவோர், அவா்கள் செலுத்தும் வரிப் பணம் ஏழைகளின் முன்னேற்றத்திற்கான வளா்ச்சி திட்டங்களுக்கு செலவிடப் படும் போது மகிழ்ச்சி அடைகிறார்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாலும், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என்ற அடிப்படையில் மத்திய அரசும் தன் பங்கிற்கு இலவச திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
  • நாடு விரைந்து முன்னேற மத்திய, மாநில அரசுகள் தகுதி உள்ளோர்க்கு மட்டுமே இலவசங்கள் என்பதோடு, அனைத்து மக்களும் பொருளாதாரத்தில் சுயசார்பு அடையும் வகையில் இலவச திட்டங்களுக்கு பதிலாக வளா்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் தர முன் வர வேண்டும்.

நன்றி: தினமணி (18  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories