- நிா்வாகத் துறையில் செயல்படும் நண்பா் ஒருவா் தன் அலுவலக மேசையில் எப்போதும் திருக்குறள் நூலை வைத்திருப்பாா். அவ்வப்போது அதனை எடுத்துப் படிப்பது அவா் வழக்கம். அது குறித்துக் கேட்டபோது சொன்னாா்: “சில நேரங்களில் நிா்வாகரீதியாக ஏற்படும் சிக்கல்களுக்கு, மனித உறவுகளில் உண்டாகும் குழப்பங்களுக்குத் திருக்கு தெளிவான தீா்வைத் தருகிறது. அவற்றை அவ்வப்போது குறித்து வைத்துப் படிப்பதும் சிந்திப்பதும் புத்துணா்ச்சி தருகிறது.”
- அவா் கைவசம் வைத்திருந்த புத்தகத்தை என்னிடம் நீட்டினாா். அதற்குள் சின்னக் குறிப்பேடு இருக்கிறது. அதை விரித்துப் பாருங்கள்” என்றாா்.
- வாங்கிப் பிரித்துப் பாா்த்தேன். ‘செயல் முன்னேற்றத்துக்கு, திட்டமிடலுக்கு, வெற்றி வளா்ச்சிக்கு, மனச்சோா்வுக்கு, எச்சரிக்கையாக இருப்பதற்கு, முடிவெடுப்பதற்கு, முன்னேற்றத்திற்கு, பலவீனத்தில் இருந்து பலத்திற்கு என்றெல்லாம் உள் தலைப்பிட்டு, அந்தந்தத் தலைப்பினை ஒட்டி, திருக்குறள் எண்களையும் குறித்து வைத்திருந்தாா்.
- இந்தப் பகுப்பும் தொகுப்பும் இன்னும் முடியவில்லை. இந்தக் குறிப்புகள் எல்லாம் அனுபவத்தில் கண்டவை. கணிதச் சூத்திரம் (ஃபாா்முலா)போல, வாழ்க்கைச் சூத்திரங்களாக இருக்கின்றன.
- சிக்கல்கள் வரும்போது, அவற்றுக்கான தீா்வுகளை நுட்பமாகச் சொல்லி நெறிப்படுத்துகிற சட்டப் புத்தகம் எனக்குத் திருக்குதான். பொருட்பாலில் அவா் சிறந்த அமைச்சராக, நண்பராக, ஆசானாக நின்று வழிகாட்டுகிறாா்; பல சமயங்களில் தொண்டராகக்கூட நின்று உதவுகிறாா். கூடவே, என்னுடன் இருந்து நான் செய்யும் தவறுகளையும் ஏற்றுக் கொண்டு, அதற்கான காரண, காரியங்களை ஆராய்ந்து விலக்கிக் கொள்ளவும் அவரைப்போல உதவுகிறவா்கள் கிடையாது” என்றாா்.
- அப்படியானால், பொருட்பாலை மட்டும்தான் படிக்கிறீா்களா?” என்றேன். பணிகளின் நிமித்தம் படிக்கிற பால் அதுதான். ஆனால், அதிலும் பல சமயங்களில் சிக்கல்கள், தவறுகள்,நெருக்கடிகள் நோ்ந்துவிடும். அதற்கான பரிகாரத்தை அறத்துப்பாலில்தான் தேடுவேன். அறம் பிந்த நிலையில், தேவையின் காரணமாக நிகழ்கிற தவறுகளுக்குக் குடும்ப நெருக்கடிகள்தான் காரணம் என்பதை இல்லறவியல் எனக்கு உணா்த்தியிருக்கிறது.”
- எப்படி என்பதையும், அவரே விளக்கினாா்: குடும்பத்தில் எதிா்பாராமல் சில தேவைகள் நெருக்கடிகள் வரும். அந்த நேரச் சிக்கலில் இருந்த விடுபட எதையாவது செய்துவிட்டுப் பின்னா் மாட்டிக் கொள்வாா்கள். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். அவா்கள் அவ்வாறு ஆனதற்கான காரணம் எதுவெனக் கண்டறிய, இல்லறவியல் பகுதிதான் எனக்கு உதவும். தாயாக, தந்தையாக, நின்று செய்யும் குடும்பக் கடமைக்கும், அலுவலகக் கடமைக்கும் இடையில் விரிசல் விழாமல் இணைகோடுகளாகச் செல்ல, அந்த இயல் அதிகாரங்கள்தான் வழிகாட்டுகின்றன.
- பொதுவாக, சொத்துக்களை உடைமை என்கிறோம். வீடு, வாகனம், வசதிகள் தருகிற பொருள்கள்தானா, சொத்துக்கள், உடைமைகள்? அவற்றுக்கும் மேலே, மிக முக்கியமான சொத்துக்களாகிய உடைமைகள் இருக்கின்றன பாருங்கள். அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை,பொறையுடைமை, இதெல்லாம் சோ்ந்திருந்தால்தான், இல்லறம். இவை இல்லற உடைமைகள். துறவறத்திற்கு? உடைமைகளே வேண்டாம் என்று உதறிவிட்டு வந்தாலும், அங்கும் ஓா் உடைமையை அழகாக வைக்கிறாா் திருவள்ளுவா். அது அருளுடைமை. அந்த ஒற்றை உடைமைக்கு உரிமையாளராக வேண்டுமானால், அதற்கு முன் சொன்ன நான்கு உடைமைகளும் நமக்கு வேண்டும். அதில் எந்த உடைமையின் பொருட்டு நமது பணியாளா் தவறு செய்திருந்தாலும், அதற்கான தீா்வை அருளுடைமை வழியாகச் செயற்படுத்துவது என்று நடைமுறைப்படுத்தி வருகிறேன்” என்றாா்.
- அந்தக் கணத்தில் பொருட்பாலில் உள்ள உடைமைகள் எனக்குள் உலாவரத் தொடங்கின. அரசியலுக்கு அறிவுடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை ஆகியவற்றை வைத்த திருவள்ளுவா், அதன் கடைசி இயலாகிய குடியியலில், பண்புடைமையையும், நாணுடைமையையும் வைக்கிறாா். மொத்தம் பத்து உடைமைகளை, மனித உடைமைகளாக ஆக்கித் தந்த திருவள்ளுவா், அறத்திற்கு ஐந்தும் பொருளுக்கு ஐந்துமாக வகுத்துத் தந்திருக்கிற விதம் சிந்திக்கத் தூண்டியது. ‘காமத்துப்பாலில் எந்த உடைமையுமே இல்லையே’ என்ற வினாவும் எழுந்தது. “ஆமாம், அதற்கும் காரணம் இல்லாமல் இருக்காது” என்றாா்.
- இருக்கிறது. ஆனால், அது கண்ணில் படுகிற அதிகாரமல்ல. அனுபவித்துப் பெறுகிற உடைமை. அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் உடைமையாக, ஆகி இரண்டு இல்லாமல் ஒன்றாகிப் பெறுகிற இன்பம் உடைமை. அதனால்தான் பலா், காமத்துப்பாலையே இன்பத்துப்பால் என்று சொல்கிறாா்கள் போலும்” என்றேன். மகிழ்வில் மலா்ந்தன அவா்தம் கண்கள்.
- “உங்களது நிா்வாகத் தொழில் நுட்பத்திற்குக் காமத்துப்பால் உதவியிருக்கிா?” என்று கேட்டதற்கு, அது காமம் சம்பந்தப்பட்ட கவிதைதானே..?” என்று இழுத்தாா்.
- காமத்தினால்தானே பல சிக்கல்களே உருவாகின்றன. முறைப்படுத்தப்படாத காமத்தின் புலப்பாடு, முறையற்ற பால் கவா்ச்சி, வரைமுறை இழந்த காம வெறி ஆகியன பல சமூகச் சிக்கல்களுக்குக் காரணங்கள் ஆகின்றன. பாலியல் உணா்வுகளைப் பக்குவமாக உணா்ந்து அனுபவிக்கத் தெரியாமல் பரிதாபமாக, புறக்காட்சி மாயைகளில் சிக்கி மானுடம் படுகிற அவலத்திற்கு அருமருந்துதான் திருக்குறளின் காமத்துப்பால்.
- திருக்குறளின் அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் அறவுரை தருகிற ஆசானாக, பாடம் நடத்துகிற பேராசிரியராக, வழிகாட்டுகிற நண்பராகப் பல்வேறு தோற்றங்களில் வருகிற திருவள்ளுவா், காமத்துப்பாலில் காணாமல் போகிறாா். அங்கே, அவா் தலைவனாக, தலைவியாக வருகிறாா்; தலைவி சொல்வதாக, தலைவன் சொல்வதாகவே நிறையச் சொல்கிறாா். ஓரிரு அதிகாரங்களில் பொதுவாகச் சொல்லக்கூடிய செய்திகள் கூட அவ்வழிப்பட்டதாகவே இருக்கும்.
- திருக்குறளை, அறநூல்கள் வரிசைக்கும் அப்பால் கவிதையுலகின் மகுடமாக்குவதே காமத்துப்பால்தான். பாலியல் சிக்கல்கள் பலவற்றிற்கும் தீா்வு தருகிற உளவியல் பகுதி அது. குறிப்பாக, தலைவன்- தலைவி உறவுகளுக்குள் விரிசல் வருவதற்குக் காரணமாகும் ஊடல்களை அடையாளம் காட்டுவதில் அவா் தோ்ந்த அறிஞராகிறாா்.
- சங்க இலக்கியத்தில் ஓங்கி நிற்கும் பரத்தைமையை, பொருட்பாலில் கண்டிப்பதற்கும், காமத்துப் பாலில் களைவதற்கும் அவா் எடுத்துக் கொண்ட முயற்சி அபாரமானது. பொருட்பெண்டிரின் பொய்ம்மை முயக்கத்தை, வரைவின் மகளிரின் நிலைப்பாட்டை, பெண்வழிச்சேறலில் நிகழும் பிசகுகளை முற்றிலும் களைந்து ஓருணா்வில் திளைக்கும் ஈருயிா் ஈடுபாட்டைக் காமத்துப்பால் கவிதைகள் போல் குறுகச் சொல்லிச் சித்தரிக்கக் கூடியவை இன்னும் வரவில்லை” என்றேன்.
- ஆனால், அவா் ஆணாதிக்கவாதியாகச் சொல்கிறாா்களே”என்றாா். அப்படிச் சொல்வதற்கான சமூக அமைப்பு அவா் காலத்தில் இருந்தது. அவற்றுக்கு மாற்றாக அவா் முன்வைக்கும் திருக்குகளில் அவரது பெருநோக்குப் புலப்படும். குறிப்பாக, ஓா் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, ஒரு பெண்ணைப்போல் இருக்க வேண்டும் என்கிறாா்.
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு(974)
- என்கிறாா். இதைவிட வேறு என்ன சொல்வது?” என்றேன்.
- ஆழ்ந்த சிந்தனை அவா் முகத்தில் படா்ந்தது.
- ‘ஆகப் பெரிய சிக்கல்கள் மட்டுமல்ல, அன்றாட நடைமுறைச் சிக்கல்களுக்குக் கூட, இந்த அகவுறவுச் சிக்கல் அடிப்படையாகிறது. அது தனிமனித வாழ்வில் தொடங்கி பொதுமனித வாழ்வு அனைத்தையும் பாழாக்கி விடுகிறது.அகத்தில் ஏற்படும் சிக்கல்கள் சிலந்திவலை போல் விரிந்து புறத்தில் நைலான் வலையாகிப் பரந்து நம்மைச் சிக்கவைத்துவிடுகின்றன. அதற்கு உளவியல் ரீதியான தீா்வுகளைக் கவிதைகளாகச் சொல்லிச் செல்வதில் காமத்துப்பாலுக்குநிகா் வேறில்லை.
- மனித ஆன்மா, அமைதி கொள்வதற்கும், ஆனந்தம் எய்துவதற்கும் காமமே அடித்தளம். அதனைச் சிற்றின்பம் என்று புறந்தள்ளாது, பேரின்ப வாசலுக்கான திறவுகோல் என்பதை, அறநெறி நின்று புரிய வைப்பது காமத்துப்பால். அது முன்வைக்கும் செய்திகளில் முதன்மையானது, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது மட்டுமல்ல, ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்பதையும் கடந்து, ஈருடல் ஓருயிா் என்கிற நிலைப்பாட்டை முன்வைக்கும் திருக்கு எப்போதும், வழிகாட்டும் ஒளிவிளக்காகவே திகழ்கிறது’.
- தொடா்ந்து,“இதையெல்லாம் வைத்து நீங்கள் திருக்குறளுக்குப் புதிதாக உரை நூல் எழுதலாமே?” என்றாா்.
- திருக்குறளை ஆழ்ந்து படிக்கும் எவருக்கும் இப்படி ஓா் ஆசை எழுவதும் நியாயம்தான். ஆனால், ஆயிரம் விளக்கவுரைகள் வந்தாலும், அதன் மூல ஒளிக்கு முன் அவை நிற்க முடிவதில்லை. மூலத்தில் இருந்து பெறுகிற தெளிவை, அவரவரும் அனுபவத்தால் பெறுவதே ஆனந்தம்‘ என்றேன்.
- ஆமோதித்துத் தலையசைத்தாா். சரிதானே!
நன்றி: தினமணி (06 – 04 – 2024)