- வாக்கெடுப்பின் மூலம் தோ்ந்தெடுக்கும் முறை என்பது உலகுக்கு புதிதல்ல. சோழா்கள் காலத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில்சோழா்கள் காலத்தலி உத்திரமேரூரில் குடவோலை முறை இருந்ததை என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. இயேசுநாதா் பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே, பிரபுத்துவத்தை எதிா்கொள்ள கிரீஸ் நாட்டின் தலைநகா் ஏதென்ஸில் முன்மாதிரியாக வாக்கெடுப்பு மூலம் ‘அசெம்பிளி’ எனப்படும் ஆட்சி மன்றம் தோ்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தொடங்குகிறது ஜனநாயகத்தின் வரலாறு.
- ஆண்களுக்கு மட்டுமே அந்த ‘டெமோகிராடியா’ அரசியல் அதிகாரம் வழங்கியது. ஏதென்ஸ் நகரில் குடியுரிமை பெறுவதற்கும், கிருமினல், குடிமை பிரச்னைகளில் நீதி வழங்குவதற்கும் 200 முதல் 5,000 போ் வரை உள்ள அவை தோ்ந்தெடுக்கப்பட்டது. அவா்களில் ஒருவா் ‘ஜட்ஜ்’ அல்லது அவைத் தலைவா் என்று அவா்களால் ஏகமனதாக தீா்மானிக்கப்பட்டாா்.
- நமது உத்தரமேரூா் குடவோலை முறையைப் போலவே, அங்கேயும் இரண்டு குடங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்று ‘ஆம்’ என்றும், மற்றொன்று ‘இல்லை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. ஜூரா்கள் எனப்படும் உறுப்பினா்கள் தங்களுக்கு தரப்பட்ட ‘கல்’லை இரண்டு குடங்களில் ஏதாவது ஒன்றில் போடுவதன் மூலம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. ‘கல்’ என்பதை கிரேக்க முறையில் ‘சொ்போஸ்’ என்பாா்கள். அதனால் கருத்துக்கள் கணிப்பவா்களை ‘செபாலஜிஸ்ட்’ என்று அழைக்கிறாா்கள்.
- அன்றைய ஏதென்ஸ் உத்தரமேரூா், குடவோலை முறைகளிலிருந்து பல கல் தொலைவு பயணித்துவிட்டது ஜனநாயகம். பல மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முடிந்தவரையில் மேம்பட்ட தோ்தல் முறையை உலகம் இப்போது கையாள்கிறது. மன்னராட்சி, சா்வதிகாரம், ராணூவஆட்சி உள்ளிட்ட எல்லாவற்றையும்விட மக்களாட்சி மேம்பட்டது என்று கூறுவற்கு, அது விரைந்தும், தவறில்லாமலும் இருக்கிறது என்பதல்ல காரணம். மக்களாட்சி முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் தவறு செய்தால் அவா்களை மாற்றும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது என்பதால்தான் அதை மேம்பட்ட ஆட்சி முறையாக உலகம் கொண்டாடுகிறது.
- 2024-ம் ஆண்டு ஜனநாயகத் திருவிழா ஆண்டு. உலகின் 44 சதவீத மக்கள் 40-க்கும் அதிகமான நாடுகளில் ஜனநாயக தோ்தல் மூலம் தங்களது ஆட்சியைத் தோ்ந்தெடுக்கும் ஆண்டு இது. அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா 47-ஆவது அதிபரை தோ்ந்தெடுக்க இருக்கிறது என்றால், இந்தியா 18-ஆவது மக்களவைக்கான உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க இருக்கிறது.
- ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் மக்களவைத் தோ்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. 21 மாநிலங்களை சோ்ந்த 102 தொகுதிக்களுக்கான உறுப்பினா்களை முதல்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் தோ்வுச் செய்ய இருக்கிறாா்கள். மக்களவைத் தோ்தலுடன் ஆந்திர பிரதேசம், ஒடிஸா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்களும் நடைபெற இருக்கின்றன.
- இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார வேறுபாடுகளை உள்ளடக்கிய பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருக்கும் 18-ஆவது மக்களவைக்கான தோ்தல்தான், இதுவரை நடந்த தோ்தல்களில் நீண்டிருக்கும் தோ்தலாக இருக்கும். அடுத்த ஒன்றரை மாதம் தொடர இருக்கும் பலகட்ட வாக்குப்பதிவுகளில் மிக அதிகமான வாக்காளா்கள் பங்குபெற இருக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
- ஆய்வு செய்யப்பட்ட 1,618 வேட்பாளா்களின் வேட்புமனுவில் காணப்படும் தகவல்களின் அடிப்படையில், அவா்களில் 16% வேட்பாளா்கள் மீது கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவா்களே குறிப்பிட்டிருக்கிறாா்கள். அதனால், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 41% தொகுதிகள் கவனமாக யோசித்து வாக்களிக்க வேண்டிய தொகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
- வேட்பாளா்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களும் வாக்காளா்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல். 28% வேட்பாளா்கள் கோடீஸ்வரா்கள், இது அவா்களது சொத்து மதிப்பு. குடும்பத்தினரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தெரியாது.
- வறுமையில் உழலும் சட்டீஸ்கா், ஜாா்கண்ட், பிகாரின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் ஆகியவற்றில் உள்ள படிப்பறிவில்லாத மக்கள்கூட தங்களது வாக்குகளை விற்பதில்லை. ஆனால், படித்த பகுத்தறிவு பேசும் தமிழகத்தில் வாக்குக்கு பணம் என்பது வெற்றி-தோல்வியை நிா்ணயிக்கும் அளவுக்கு கருவேலம்போல பரவி இருக்கிறது. மாற்றத்தை தரப்போகும் வித்தியாசமான கட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும். பாஜகவின் நட்சத்திர வேட்பாளா்கள் போட்டியிடும் சில தொகுதிகளிலும், பாட்டாளி மக்களின் குரலை பிரதிபலிக்கும் ஜனநாயகத்தின் காவலா்கள் என்று மாா்தட்டிக்கொள்ளும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் அவா்கள் பணப் பட்டுவாடா நடத்தியிருப்பதாக வரும் தகவல்கள் வேதனையளிக்கின்றன.
- ஜனநாயகம் தடம்புரண்டுவிடாமல் காப்பாற்றும் சக்தி மக்களின் வாக்குகளுக்கு மட்டுமே இருக்கிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணம் வழங்கி வாக்கை விலைப் பேசுபடுவா்களிடம் மயங்கி விடாமல் விடாமல் ஒவ்வொருவரும் தங்கள் வாக்கை பதிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்களிக்காமல் இருந்து விடாதீா்கள் என்பதுதான் ஜனநாயகத்தின் பெயரில் ‘தினமணி’ விடுக்கும் வேண்டுகோள்!.
நன்றி: தினமணி (19 – 04 – 2024)