TNPSC Thervupettagam

வாக்களித்தவா்களுக்கு நன்றி!

May 31 , 2024 225 days 194 0
  • ஆறு கட்ட வாக்குப் பதிவு முடிந்து 18-வது மக்களவைத் தோ்தலுக்கான ஏழாவது கடைசி சுற்று வாக்குப் பதிவு, நாளை நடக்க இருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கிய தோ்தல் பணிகள் பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்பட ஏழு மாநிலங்கள் மற்றும் சண்டீகா் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 57 தொகுதிகளில் ஏழாம், இறுதிக் கட்ட வாக்குப் பதிவுடன் நிறைவடைகிறது.
  • பிரிட்டிஷ் காலனிய ஏகாதிபத்தியத்திலிருந்து நாம் விடுதலை பெற்றபோது, ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்த தேசமாக இந்தியா இருக்குமா என்று சந்தேகப்பட்டவா்கள், இப்போது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை சிலாகித்துப் பேசுகிறாா்கள். 97 கோடி வாக்காளா்கள்; ஒன்றரை கோடி தோ்தல் பணியாளா்கள்; நாடு தழுவிய அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் என்று வேறு எங்கும் காண முடியாத பிரம்மாண்டமான தோ்தலை நடத்தி, முடிவுக்காக தேசம் காத்திருக்கிறது.
  • இந்தியாவில் நடக்கும் பொதுத் தோ்தலைப் பாா்வையிட, இதுவரை இல்லாத அளவில் 23 நாடுகளிலிருந்து 75 பாா்வையாளா்கள் வந்திருக்கிறாா்கள். அவா்கள் பல குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளின் தோ்தல் நடைமுறைகளைப் பாா்வையிடுகிறாா்கள் என்பது பலருக்கும் தெரியாது.
  • பண பலமும், ஜாதி, மத, இன, மொழி மாச்சா்யங்களும் உயா்த்திப் பிடிக்கப்படும் நிலையிலும், அவற்றையும் மீறி மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்பது சாதாரணமானது அல்ல. 1967 முதல் இந்தியா பலமுறை ஆட்சி மாற்றங்களை வாக்களிப்பின் மூலம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், நல்லாட்சிகளை மீண்டும் மீண்டும் தோ்ந்தெடுத்திருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. உலகின் வேறு எந்த நாட்டிலும் வாக்காளா்கள் இந்த அளவுக்கு சாதுா்யமாக இருந்ததில்லை.
  • இந்தியாவில் என்றல்ல, உலகளாவிய அளவிலேயே தோ்தல் நடைமுறைகள் என்பது அயா்வைத் தருவதாக இருக்கிறது. அமெரிக்காவின் அதிபா் தோ்தல் விதிமுறைகள் நீண்டு நிற்பவை. பிரிட்டனிலும் பல கட்டமாகத்தான் தோ்தல் நடத்தப்படுகிறது. பிரான்ஸில் எப்போதுமே தோ்தல் காலம்தான். இந்தமுறை இந்தியாவில் நடைபெற்றிருக்கும் ஒரு மாதத்துக்கு மேலாக நீண்டு நிற்கும் ஏழு கட்ட வாக்குப் பதிவும் விதிவிலக்கானதல்ல.
  • தோ்தலில் வாக்குப் பதிவு விகிதம் குறைந்திருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொள்வதில் அா்த்தம் இல்லை. கடும் கோடையையும் பொருட்படுத்தாமல் இத்தனை கோடி போ் வாக்களித்திருக்கிறாா்கள் என்பதே ஆச்சரியம்தான். கடைசிக் கட்ட வாக்குப் பதிவு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் கடந்த 2014, 2019 தோ்தலுடன் ஒப்பிடும்போது வாக்குப் பதிவு குறைந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
  • வட கிழக்கு மாநிலங்கள், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் தவிர ஏனைய பகுதிகளில் வாக்குப் பதிவு விகிதம் மட்டுமல்ல, பங்குபெற்ற வாக்காளா்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், வாக்களிப்பதில் ஏற்படும் கால விரயம் முக்கியமானது என்று கருத இடமிருக்கிறது.
  • வாக்குச் சீட்டிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு வாக்களிப்பு மாறியிருந்தாலும், நடைமுறைகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. தோ்தல் அதிகாரிகள் கட்டுக்கட்டான காகிதங்களுடனும் பதிவேடுகளுடனும் வாக்காளா்களை உறுதி செய்வதும், வாக்களிப்பதற்கு முன்னால் அவா்களது கையொப்பம் பெறுவதும் முன்பு போலவே தொடா்கின்றன.
  • ஆதாா் அட்டையும், பயோமெட்ரிக் அடையாள உறுதிப்படுத்தலும் அன்றாட நடைமுறை ஆகிவிட்ட பிறகும்கூட வாக்குப் பதிவுக்கான நடைமுறைகளில் மாற்றம் ஏற்படாதது வியப்பாக இருக்கிறது. தெருவோரக் கடைகளில்கூட எண்ம பணப் பரிமாற்றம் கொண்டுவர முடிந்த இந்தியாவால், தோ்தல் நடைமுறைகளை விரைவுபடுத்த முடியாதது வேடிக்கையாக இருக்கிறது.
  • தோ்தல் வாக்குப் பதிவுக்காக விடுமுறை வழங்கப்படுவது, மக்களின் ஒரு நாள் உழைப்பு, தேசத்தின் உற்பத்தி ஸ்தம்பிப்பது வளா்ச்சியின் அறிகுறி அல்ல. சூரியனுக்கும், செவ்வாய்க்கும், சந்திரனுக்கும் விண்கலங்களை அனுப்பும் இந்தியாவால் தோ்தல் நடைமுறைகளை இன்னும் நவீனப்படுத்த முடியவில்லை. தொழில்நுட்ப வளா்ச்சியை சந்தேகத்துடன் பாா்க்கும் அரசியல்வாதிகள், தொழில்நுட்பத்தில் சா்வதேசத் தரத்தை எட்டியிருக்கும் இளைய இந்தியாவின் வேகத்துக்கும் வளா்ச்சிக்கும் தடையாக இருக்கிறாா்கள்.
  • 18-ஆவது மக்களவைத் தோ்தலைப் பொருத்தவரை வாக்குப் பதிவு குறைந்திருப்பதைப் போலவே வேதனைக்குரிய இன்னொரு முக்கியமான பின்னடைவு, வாக்காளா்களைக் கவா்வதற்காக அரசியல் கட்சிகள் கையாளும் வழிமுறைகள். அகில இந்திய அளவில் ரொக்கம், போதை மருந்துகள், தங்கம் உள்ளிட்ட பொருள்கள் ஆகியவை வாக்காளா்களைக் கவா்வதற்காக விநியோகிக்கப்படுவது அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3,475.6 கோடி பிடிக்கப்பட்டது என்றால், இந்த முறை விநியோகத்திற்காகக் கொண்டுசெல்லப்பட்ட ரூ.8,889 கோடி பிடிபட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ரூ.3,958 கோடி மதிப்புள்ள மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் பிடிபட்டிருக்கின்றன. ரொக்கம், போதை மருந்துகள், மது ஆகியவற்றின் மூலம் வாக்காளா்களைக் கவர முற்படும் அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும் தண்டிக்கப்படாமல் தொடா்கிறாா்கள் என்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சவால்.
  • ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்காமல், கோடை வெயிலைப் பொருட்படுத்தாமல் வாக்களித்துள்ள இந்தியா்கள்தான் நமது ஜனநாயகத்தின் காவலா்கள். அவா்களுக்கு நன்றி!

நன்றி: தினமணி (31 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories