- பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட இருக்கும் கட்சிகள் எவை என்பது அநேகமாக முடிவாகிவிட்டது. கட்சிகளின் வேட்பாளர்கள் யார், எவர் என்பதும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
- நடைபெற இருக்கும் தேர்தலுக்கு இந்திய வாக்காளர்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்போகிறார்கள் என்பதை வாக்குப்பதிவு வெளிப்படுத்தும். 2019 மக்களவைத் தேர்தலின் மொத்த வாக்குகளான 91,05,12,091-இல் 61,36,56,298 வாக்குகள்தான் (67.4%) பதிவாகின. அவற்றில் செல்லாத வாக்குகள் போக, செல்லும் வாக்குகள் 61,31,46,768 மட்டுமே. இந்தமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுபோல, பதிவாகும் வாக்குகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எடுத்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகள், பலதரப்பட்ட வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு ஈர்ப்பதற்கான முயற்சிகள். அரசியலில் ஆர்வமின்மை; கட்சிகள்-வேட்பாளர்கள் குறித்த புரிதலின்மை; கட்சிகளின் கொள்கைகளில் தெளிவின்மை; எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாமானிய மக்களின் வாழ்க்கையில் மாற்றம் வரப்போவதில்லை என்கிற சலிப்பு - இவைதான் வாக்காளர்களில் கணிசமான ஒரு பகுதியினர் மத்தியில், தேர்தல் குறித்த ஆர்வமின்மைக்கு அடிப்படை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- சுதந்திர இந்தியக் குடியரசில் 1952-இல் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில் பதிவான வாக்கு விகிதம் 45.7%. அதுவே 2019 தேர்தலில் 67.37%. இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகை 37.29 கோடியிலிருந்து 138.31 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 1952-இல் இருந்த 18.3%-லிருந்து இப்போது சுமார் 80%- ஆக அதிகரித்திருக்கிறது.
- மக்கள்தொகை அதிகரிப்பையும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பையும் வைத்துப் பார்க்கும்போது வாக்குப்பதிவு விகிதம் 90% அளவை எட்டுவதுதானே நியாயம்?.
- அதுமட்டுமல்ல, படித்த நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் தேர்தல் குறித்த ஆர்வம் குறைந்து காணப்படுவதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வாக்குவிகிதம் நகர்ப்புறங்களில் குறைந்து காணப்படும்போது மாநிலத்தின் மொத்த வாக்கு விகிதம் அதிகரித்து வரும் ஆச்சரியத்தையும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- சமீபத்தில் நடந்த ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தின் சராசரி வாக்குப்பதிவு 75.6% என்றால், சிம்லா உள்ளிட்ட நகரங்களில் 10% குறைவான வாக்குப்பதிவு காணப்பட்டது. இதிலிருந்து படித்த, நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் குறித்த அவநம்பிக்கை காணப்படுவதையும், ஊரகப்புறங்களில் ஆர்வம் கூடுதலாக இருப்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் முதல் முறையாக வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதியை 80 வயதுக்கு மேற்பட்ட 12.15 லட்சம் பேருக்கும், 5.5 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க முற்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவர்களது வீட்டுக்குப்போய் வாக்குப்பதிவை மேற்கொள்ள வழிகோல இருக்கிறார்கள்.
- அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டு வீட்டிலிருந்து வாக்களிப்பவர்கள் குறித்த வெளிப்படைத்தன்மையும், அவர்களின் வாக்களிப்பு குறித்த ரகசியத்தன்மையும் உறுதிப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெரிய அளவில் வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்துவிடாது என்றாலும்கூட, எந்தவொரு பிரிவினருக்கும் தங்களது வாக்கைப் பதிவு செய்யும் உரிமை மறுக்கப்படாது என்பது வரவேற்புக்குரியது. ஏறத்தாழ 30% வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது ஜனநாயகக் கடமை ஆற்றுவதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
- ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளை முந்திக்கொண்டு தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்திய பெருமை இந்தியாவுக்கு உண்டு. 1979-இல் அரசு நிறுவனங்களான பாரத் எலக்ட்ரானிக்ஸும், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் இணைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கின. அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 1982-ஆம் ஆண்டு கேரள மாநிலம் வடக்கு பரவூர் சட்டப்பேரவைத் தொகுதியின் ஒருசில வாக்குச்சாவடிகளில் சோதனை முயற்சியாக முதன்முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கையாளப்பட்டது.
- அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் சோதனை முயற்சி தொடர்ந்தது. 2004 மக்களவைத் தேர்தலில்தான் முதன்முதலில் நாடு தழுவிய அளவில் அனைத்துத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கையாளப்பட்டது. இன்று உலகமே இந்தியாவின் அந்த முயற்சியைப் பார்த்து வியக்கிறது.
- இந்தியர்கள் ஊதியம் பெறுவது, வங்கிச் சேவை, கடைகளில் பொருள்கள் வாங்குவது, வரி கட்டுவது, மானியங்கள் பெறுவது, அன்றாடப் பணப் பரிமாற்றம் என்று எல்லாவற்றையும் இணைய வழியில் நடத்துகின்றனர். அது கடவுச்சீட்டானாலும், வாக்காளர் அடையாள அட்டையானாலும் இணையத்தில் விண்ணப்பிக்க முடியும். டிஜிட்டல் இந்தியா என்பது கனவல்ல, நிஜம்.
- அப்படியிருக்கும்போது, அடுத்தகட்ட மாற்றமாக இணைய வழி வாக்குப்பதிவுக்கான முயற்சியை தேர்தல் ஆணையம் ஏன் முன்னெடுக்கக் கூடாது?. அதன்மூலம் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் காணப்படும் வாக்களிப்புத் தயக்கத்தை ஓரளவுக்கு குறைக்க முடியும். இணைய வழி வாக்கெடுப்பின் சாதக-பாதகங்களை ஆராய வேண்டிய கட்டத்தை இந்திய ஜனநாயகம் எட்டிவிட்டது!
நன்றி: தினமணி (27 – 03 – 2024)