TNPSC Thervupettagam

வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்: தீர்வு என்ன

April 25 , 2024 261 days 287 0
  • பதினெட்டாவது மக்களவைக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக முடிந்துவிட்டது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிலவரத்தை அறிவிப்பதில் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆனால், வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது, சென்னையில் வாக்குப்பதிவு குறைந்துபோனது போன்றவை போதிய கவனம் பெறவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் நீடிக்கும் இந்த விவகாரங்களுக்குத் தீர்வுகாண, தேர்தல் ஆணையத்திடம் என்ன திட்டங்கள் இருக்கின்றன என்கிற கேள்வி எழுகிறது.

பெயர் எப்படி விடுபடுகிறது?

  • ஏப்ரல் 19 அன்று தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1.88 கோடிப் பேர் (மொத்த வாக்காளர்களில் 30% பேர்) வாக்களிக்கவில்லை. தேவையான ஆவணங்களோடு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று, பட்டியலில் பெயர் இல்லாமல் ஏமாற்றத்தோடு திரும்பியவர்களும் ஏராளம்.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்குரிமையைச் செலுத்தாதது வாக்காளரின் தனிப்பட்ட விவகாரமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் என்கிற நம்பிக்கையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியாமல் திரும்பும் வாக்காளர்களின் குமுறல்களுக்கு யார் பதிலளிப்பது?
  • ஒரே வீட்டில் பல ஆண்டுகளாக வசித்துவருபவர், பல தேர்தல்களாக வாக்களித்துவரும் சூழலில், அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து எப்படி விடுபட்டுப்போகும்? தேர்தல் பணியாளர்கள் எந்த அடிப்படையில் பெயரை நீக்குகிறார்கள்? பெயர் நீக்கத்தைத் தேர்தல் பதிவு அதிகாரி (ERO) எப்படி அங்கீகரிக்கிறார்? இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுகின்றன.
  • இந்தியத் தேர்தல் ஆணைய விதிகளின்படி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து படிவம் 7-ஐப் பெற்றால் வாக்காளர் பெயரை நீக்கலாம். ஒரு வாக்காளர் மரணமடைந்தாலோ, குறிப்பிட்ட முகவரியிலிருந்து வீடு மாறிச் சென்றுவிட்டாலோ தாமாக முன்வந்து பெயர்களை நீக்கும் அதிகாரம் தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரிக்கு உண்டு.
  • இதுபோன்ற காரணங்கள் இருந்தாலும்கூட வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்கள்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) களத்துக்குச் சென்று சரிபார்க்க வேண்டும். ஒரு வாக்காளரின் பெயரை நீக்குவதற்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் வழிகாட்டுதலும் பரிந்துரைக்கிறது.
  • ஆனால், அது சாத்தியப்படுவதில்லை என்பதே நடைமுறை யதார்த்தம். தமிழ்நாட்டில் 2022 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரை 12.45 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் நீக்கத்துக்கு வாக்காளர்கள் மரணமடைந்தது, வீடு மாறியது போன்ற காரணங்களே தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

யார் பொறுப்பு?

  • குறிப்பிட்ட முகவரியில் வசித்து நீண்ட காலமாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்கள் பெயர் ஏன் விடுபட்டுள்ளது என்று தேர்தல் நாளில் புகார் தெரிவிப்பது, பெயர் நீக்கத்துக்கு முன்பாகக் கள ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த அடிப்படையில், வருங்காலத்தில் ‘வாக்காளர் பெயர் நீக்கப்படும் முன்பு நோட்டீஸ் அளிக்க வேண்டும்’, ‘கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என்கிற விதிகளைக் கட்டாயமாக்குவது இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்கும்.
  • வாக்காளர் பெயர் நீக்கத்தைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்துக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, அதுதொடர்பான விவரங்கள் அடங்கிய பட்டியல் அரசியல் கட்சிகளின் பூத் கமிட்டிகளுக்கு வழங்கப்படும்.
  • அவர்கள் அதை ஆராய்ந்து எதிர்ப்புத் தெரிவிக்காதபோது, வாக்காளர் பெயர் நீக்கம் எளிதாகிவிடுகிறது. கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் நாளன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். தேர்தல் நடைபெறும்போதோ முடிந்த பிறகோ அரசியல் கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைப்பது தங்களையே குறைகூறிக்கொள்வதற்குச் சமமானது.
  • இந்த விஷயத்தில் வாக்காளர்கள் மீதும் குற்றச்சாட்டு உண்டுதான். இறுதி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்று வாக்காளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பதும் உண்மைதான்.
  • ஆனால், ஒரே முகவரியில் வசித்து, தொடர்ச்சியாக வாக்களித்துக்கொண்டிருக்கும் ஒரு வாக்காளர், தன் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தன் பெயர் நீக்கப்பட்டுவிடும் என்று சந்தேகிக்க வாக்காளருக்கு என்ன முகாந்திரம் இருக்க முடியும்?

சரியும் சென்னை வாக்குப்பதிவு

  • தலைநகர் சென்னைகுறைவான வாக்குப்பதிவுக்காக மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த முறை மாநிலத்தின் வாக்குப்பதிவு சராசரி 69.72%; சென்னையின் சராசரி 56.08%. வித்தியாசம் 13.64%. சென்னையின் வாக்குப்பதிவு எப்போதுமே மாநிலத்தின் சராசரி வாக்குப்பதிவைத் தாண்டியதும் இல்லை; நெருங்கிவந்ததும் இல்லை.
  • கடந்த 20 ஆண்டுகளின் 2004 (60.6%), 2009 (73.1%), 2014 (73.7%), 2019 (73.3%) மக்களவைத் தேர்தல்களில் மாநில சராசரி வாக்குப்பதிவுக்கும் சென்னையின் வாக்குப்பதிவுக்கும் முறையே 13%, 10.3%, 11.9%, 10.8% வித்தியாசம் உண்டு. விதிவிலக்காக 2006 சட்டமன்றத் தேர்தலில்தான் அதிகபட்சமாக 64% பேர் சென்னையில் வாக்களித்திருக்கிறார்கள். அப்போது மாநிலத்தின் சராசரி வாக்குப்பதிவு 70.8%. மாநிலத்தின் சராசரியோடு ஒற்றை இலக்க வித்தியாசத்துக்கு சென்னை வாக்குப்பதிவு நெருங்கிவந்தது அப்போது மட்டுமே.
  • சென்னையில் மட்டுமல்ல பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களிலும் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பெருநகரங்களில் வாடகைக்குக் குடியிருப்போர் அதிகம். இவர்கள் கல்வி, வேலை, வசதி, வீட்டு வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடிக்கடி வீடு மாறும்போது, தங்கள் பெயரை ஒரு தொகுதியிலிருந்து இன்னொரு தொகுதிக்கு மாற்றிக்கொள்வதில் சுணக்கம் காட்டுகிறார்கள்.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் பகுதிக்கு வந்து வாக்களிப்பதிலும் மெத்தனம் காட்டுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் சென்னையில் பெயரைச் சேர்த்துவிட்டு, தேர்தல் தொடர் விடுமுறைக்குச் சொந்த ஊருக்குச் செல்வது அல்லது சொந்த ஊர், சென்னை என இரண்டு இடங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பது போன்ற சிக்கல்களும் இதில் உண்டு.
  • இதுபோன்ற சிக்கல்களைத் துல்லியமான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதன் மூலமே களைய முடியும். அதற்கு வாக்காளர் அடையாள எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஒரு தீர்வாக இருக்கலாம். ஏற்கெனவே, ஆதார் எண்ணுடன் பல சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் வாக்காளர் அடையாள எண்ணைச் சேர்ப்பதும் பலன்அளிக்கும். இந்தக் கருத்தைத் தலைமை தேர்தல் முன்னாள் ஆணையர் என்.கோபாலசுவாமியும் வலியுறுத்தியிருக்கிறார். இதன் மூலம் ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது உறுதிசெய்யப்படும்.
  • உள்ளாட்சி அமைப்புகளில் இறப்புச் சான்றிதழுக்கு ஆதார் எண் கேட்கப்படுவதால், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து எளிதாக நீக்கிவிடலாம். ஒருவர் ஆதாரில் வீட்டு முகவரியைத் திருத்தம் செய்யும்போது, அதன் அடிப்படையில் வாக்காளர் வசிக்கும் இடத்துக்குப் பெயரையும் மாற்றலாம். ஆதாரில் பதியப்பட்டுள்ள கைபேசி எண் மூலம் தேர்தல் ஆணையப் பணியாளர்கள் வாக்காளரைத் தொடர்புகொள்ள முடியும்.
  • தற்போது தன்னார்வரீதியில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள எண் இணைக்கப்படுகிறது. அதைக் கட்டாயமாக்கத் தேவையான நடவடிக்கையைத் தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும். இது வாக்காளர் பட்டியலை எளிமைப்படுத்தவும் எதிர்காலத்தில் வாக்குப்பதிவு அதிகரிக்கவும் உதவக்கூடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories