TNPSC Thervupettagam

வாக்கு விகிதம் என்னும் விசித்திரம்

January 31 , 2024 350 days 301 0
  • இந்தியத் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் இருப்பதிலேயே யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர்தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுகிறார். அதாவது, ஒரு தொகுதியின் வெற்றியாளரைத் தீர்மானிப்பது வேட்பாளர்கள் பெறும் வாக்கு விகிதம்தான்.
  • எந்தக் கட்சி அல்லது கூட்டணி அதிகத் தொகுதிகளில் வெல்கிறதோ அதுவே ஆட்சி அமைப்பதற்கான உரிமையைப் பெறுகிறது. ஆனால், அதிகத் தொகுதிகளில் வெல்லும் கட்சியோ கூட்டணியோ ஒட்டுமொத்த வாக்குகளில் இருப்பதிலேயே அதிக வாக்கு விகிதத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
  • எடுத்துக்காட்டாக, 1998 மக்களவைத் தேர்தலில் 182 தொகுதிகளை வென்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, 25.59% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், 141 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் 25.82% வாக்குகளைப் பெற்றிருந்தது. அதேபோல், 2004 தேர்தலில் காங்கிரஸை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 221 தொகுதிகளில் வென்றிருந்தது. பாரதிய ஜனதா கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, 181 தொகுதிகளில் வென்றிருந்தது.
  • ஆனால், ஐமுகூ பெற்றிருந்த வாக்கு விகிதம் 35.9%; தேஜகூ பெற்றிருந்த வாக்கு விகிதம் 36.2% மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் வாக்கு விகிதம் 1951இலிருந்து பெரும்பாலும் குறைந்துவந்துள்ளது (சில தேர்தல்களில் அதிகரித்துள்ளது).
  • 1951 தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸின் வாக்கு விகிதம் 45%; 2014இல் பாஜகவின் வாக்கு விகிதம் 31.3%. மக்களவைத் தேர்தல் வரலாற்றில் ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சிக்குக் கிடைத்த குறைவான வாக்கு விகிதம் இதுதான். 2019 தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற பாஜகவின் வாக்கு விகிதம் 37.3% ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
  • இதுவரை ஆட்சி அமைத்த எந்தக் கட்சியும் 50% வாக்கு விகிதத்தைப் பெற்றதில்லை. 1984 தேர்தலில் காங்கிரஸ் அதிகபட்சமாக 49.1% வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸின் ஆதிக்கம் நிலவிய 1950, 60களில்கூட அக்கட்சியின் வாக்கு விகிதம் 40-47% வரையே இருந்துள்ளது. சரிபாதிக்கு மேற்பட்ட வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் ஆட்சி அமைப்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு முரணானது என்பது போல் தோன்றலாம்.
  • ஆனால் ஜனநாயக ஆட்சிமுறை நிலவும் பல நாடுகளில் இதுதான் நடைமுறை. அத்துடன், இந்திய மக்கள் ஒற்றைக் கட்சியின் ஆதிக்கத்துக்கு மாறாகப் பல கட்சி ஜனநாயகத்தை நாடுகிறார்கள் என்பதையும் இதிலிருந்து உணரலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories