TNPSC Thervupettagam

வாசிப்பு இயக்கம் - கனக்காத கதைகள் வேண்டும்

January 30 , 2024 352 days 288 0
  • வாசிப்பு இயக்கத்தின் தேவை என்ன என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்... பெரியவர்களின் தேவை என்ன? அடிக்கடி குறுக்கிட, அறிவுரை சொல்ல, தலையிட்டுப் பேச, கற்றுக்கொண்டதை இறக்கிவைக்க ஓர் இடம் வேண்டும். அதற்கு வசதியானது குழந்தைகள் உலகம்!
  • குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது, நாம்தான் வழிநடத்த வேண்டும் என்ற தவிப்பு வீடுகளில் இருக்கிறது; வகுப்பறைகளில் இருக்கிறது; புத்தகங்களுக்கு உள்ளேயும் அத்தவிப்பு இறங்கியிருக்கிறது. வாசிப்பில் தாகம் கொண்ட கண்களுக்கும், கவனி... கவனி என்று கூச்சலிட்டுவந்த வாய்ப் பேச்சுக்கும் இடையே நடந்த போராட்டம் ஒரு வரலாறு.
  • வாசிக்க ஆசைப்பட்ட கண்களை வாசிக்க விடாமல்தடுத்ததில் பெரும்பங்கு பேசும் வாய்க்கு இருக்கிறது. பேசும் வாய்க்குள் கிடக்கும் உபதேசம், பேசும் வார்த்தைகளில் அரங்கேறும் நாடகம், ஒருவித போதைதான்! போதை கண்களை மறைப்பதும் உண்மைதான்.
  • வாசிப்பு போதையல்ல; பாதை. கண்கள் வெளிச்சம் பெறும் பாதை. ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா!’ என்கிற பாரதி வரியை ஒருபோதும் மறக்க முடியாது.

அழுத்தம் தராத மொழி

  • இப்போது வாசிப்பு இயக்கத்துக்கு வருவோம். கேட்போராக இருக்கும்குழந்தைகளை, முக்கியமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய வீட்டுக் குழந்தைகளை வாசிப்போராக மாற்றுவதற்கு வந்ததுதான் வாசிப்பு இயக்கம். இதற்குத் தேவை மேதாவித்தனம் அல்ல; மேதாவிகளும் அல்ல.

தேவையானவை எவை

  • கனக்காத கதைகளும்அழுத்தம் தராத மொழியும்தான். எளியோர் வாசிப்புக்கு உறுதியான அடித்தளங்கள்!
  • 1 ஒரு பெரிய காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. எந்த நேரமும் சிங்கம் சிரித்தபடி இருக்கும்என்ற வரிகளைக் குழந்தைகளுக்காக இப்படி வடிவமைக்கிறோம்:

ஒரு காடு

பெரிய காடு

காட்டில் ஒரு சிங்கம்

சிங்கத்துக்குச் சிரித்த முகம்

(‘சிரிப்பு ராஜா’, மு.முருகேஷ்)

  • படு குறும்புக்காரச் சுண்டெலி ஒன்று வீட்டில் ஒரு பொந்துக்குள் வசித்தது. பொந்துக்குள் இருந்து தலையை நீட்டி எலி எட்டி எட்டிப் பார்த்ததுஎன்ற வரிகளை இப்படி வடிவமைக்கிறோம்:

ஒரு சுண்டெலி

படு சுட்டி!

குறும்பு செய்யும் சுண்டெலி.

வீட்டில் ஒரு பொந்து.

பொந்துக்குள் சுண்டெலி!

ஒரு நாள் -

சுண்டெலி எட்டி எட்டி

எட்டி எட்டி

வெளியே பார்த்தது.

(‘சுட்டிச் சுண்டெலி’, ஞா.கலையரசி)

  • இது வாசிக்க எளிய மொழி. ‘என்னாலும் வாசிக்க முடியும்என்கிற நம்பிக்கையைக் குழந்தைகளிடம் உண்டாக்கும் மொழி. மொழி குறித்த பிரமைகளையும் பிடிவாதங்களையும் விட்டால்தான் நம்மால் குழந்தைகளை எட்ட முடியும்.
  • விடைபெற்ற கூச்சம்: குறுக்கீடு செய்யத் தவிக்கிற (பெரியோர் சிலரின்) கர்வமும் அகம்பாவமும் குழந்தைகள் வாசிப்புக்கு ஆகாதவை. காலம் காலமாக மூடநம்பிக்கைகள் வந்த வழியும் அதுதான். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடம் இது. வாசிப்புக்குக் கனமற்ற கதை வேண்டும்! ஓர் உதாரணம், ‘நான் தோசை சுடுவேன்’ (சாலை செல்வம்). ஒவ்வொரு பக்கத்திலும் ஓர் உரையாடல். உரையாடுவோர் குழந்தைகள்... பெரியவர்கள் அல்ல.

நான் சுப்பம்மா

நல்லா ஓடுவேன் - என்பது முதல் பக்கம்.

நான் மாலா

விசில் அடிப்பேன் - இது எட்டாம் பக்கம்.

நான் அன்பு

தோசை சுடுவேன் - இது கடைசிப் பக்கம்.

  • ஆயிரக்கணக்கான குழந்தைகள் விரும்பி வாசித்த புத்தகங்களில் இது ஒன்று. கனக்காத கதை.
  • இந்தக் கதையைக் குழந்தைகளோடு சேர்ந்து வாசித்த கருத்தாளர் ஒருவர் சொன்னார்: “யாரோடும் இதுவரை ஒட்டாமல் இருந்தேன். வாசிப்பு இயக்கம் என் கூச்சத்தை உடைத்தது.” பிறகு குழந்தைகளிடம் கேட்டார்: “உங்களுக்குக் கூச்சம் வருவது எப்போது?” குழந்தைகள் கொட்டினார்கள்:

“அம்மாவிடம் பொய் சொல்லும்போது!”

“யாராச்சும் என்னைப் புகழும்போது!”

“புதுச்சட்டை போடும்போது!”

  • கடைசியாக ஒரு சிறுவன் சொன்னான்: “தினம் தினம் எனக்குப் பல் கூசுது!” வகுப்பறை மலர்ந்து சிரித்தது.
  • முதல் எட்டில் 53 சிறு புத்தகங்களைப் படங்களுடன் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக்கிறது. இது முக்கியமான எட்டு. ஆனால், போன தூரம் கொஞ்சம்தான்! வாசிப்பு இயக்கம் நெடுந்தூரப் பயணம்! குழந்தை உலகில் என்ன மாதிரி தலையிடலாம் என்றஅறிவாளித்தனத்தை உதறினால் மட்டுமே மீதி தூரம் போக முடியும்.
  • எப்போதும் பிரபலங்களின் பின்னால் போகும் மனநிலை நம்மிடம் இருக்கிறது. இது இலகுவான பாதை. ஆனால், நெடுந்தூரப் பயணம் இதில் சாத்தியமில்லை. களத்தில் இருந்து கதைகள் வர வேண்டும். குரல்கள் வர வேண்டும். கனம் தராத, எளிமையான, நம்பகமான குரல்கள்!
  • யார் முக்கியம்? எது முக்கியம் என்பதுதான் கேள்வி.தட்டுத் தடுமாறி வாசிக்கும் குழந்தைகள் தன்னம்பிக்கையோடு வாசிப்பதுதானே முக்கியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories