- வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தருமபுரி அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்திருப்பதன் மூலம், நீதியை நிலைநாட்டியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம். தருமபுரி மாவட்டம் சித்தேரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள வாச்சாத்தி கிராமத்தில் சந்தனமரக் கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, 1992 ஜூன் 20 அன்று சோதனை நடத்தச்சென்ற வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளும் ஊழியர்களும் அங்குள்ள வீடுகளைச் சூறையாடி, மக்களைக் கடுமையாகத் தாக்கினர். 18 பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். பெண்கள், சிறுவர்கள் உள்பட 100க்கு மேற்பட்டோரைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
- இந்தச் சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் அன்றைய தமிழ்நாடு அரசு, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளைப் பாதுகாக்க முயன்றது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் வழக்கு தொடரப்பட்டு முறையான விசாரணை தொடங்கியது. 1995இல் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) ஒப்படைத்தது.
- 2011 செப்டம்பர் 29 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்த 269 பேரில், அப்போது உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், பட்டியல் சாதி - பட்டியல் பழங்குடிகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தததை அடுத்து தண்டிக்கப்பட்ட அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
- 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 215 பேரின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துத் தண்டனைகளையும் உறுதிசெய்துள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- அத்துடன், அரசு வேலை தருவது அல்லது சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம், வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோரின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவும், சம்பவம் நிகழ்ந்தபோது தருமபுரி மாவட்ட ஆட்சியர், காவல் துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட வன அதிகாரியாக இருந்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- வாச்சாத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. அதே நேரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க 31 ஆண்டுகள் ஆகியுள்ளதையும் மறந்துவிட முடியாது. நீதிக்கான போராட்டத்தை நடத்திய வாச்சாத்தி மக்களும் தொடக்கத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்ற மலைவாழ் மக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
- குற்றவாளிகள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இந்த வழக்கு மேலும் இழுத்தடிக்கப்படுவதற்குக் காரணமாவதை அனுமதிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு, வாழ்வாதார வசதிகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இனி இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நேர்ந்துவிடாமல் இருப்பதை அரசும் நீதித் துறையும் உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2023)