- வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 29 அன்று வழங்கிய தீர்ப்பு பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2011 செப்டம்பர் 29 அன்று வழங்கிய தீர்ப்பையே, மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்திய நீதித் துறை வரலாற்றில் முக்கியமான ஒன்றாக வாச்சாத்தி வழக்கு பதிவாகிவிட்டது.
- இந்தத் தீர்ப்புகள் மூலம் இந்திய நீதித் துறையின் மாண்பு ஒருபடி உயர்ந்துவிட்டது. காரணம், வழக்கின் வாதிகள் - அடுக்கப்பட்ட மூட்டையில் அடிமூட்டையாக விளங்கும் பழங்குடி மக்கள்; பிரதிவாதிகளோ அரசாங்க அதிகாரிகள். அதிலும் அரசாங்கத்தின் பரிபூரண ஆதரவைப் பெற்றிருந்தவர்கள். எனவே, இரண்டு தீர்ப்புகளுமே வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்பதில் சந்தேகமில்லை.
அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர்கள்
- இத்தகைய அதிசயம் நடப்பதற்கு அடிப்படையாகப் பலர் இருந்துள்ளனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இப்பிரச்சினையில் தலையிட்ட காலம் முதல் இப்போதுவரை தொய்வின்றிச் செயல்பட்டுவந்தன. ஒரு சிறிய கிராமத்தின் பிரச்சினையை மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக மாற்றின. மக்களுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தி சமரசமின்றி வழக்கை நடத்தி நீதியை வென்றெடுத்தன.
- அதே நேரத்தில், மக்களுக்காகத் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் செயல்பட்டவர்களின் பங்களிப்பும் போற்றத்தக்கது. முதலில், இந்த வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது தேசிய பட்டியல் சாதியினர்-பழங்குடியினர் ஆணையத்தின் தென்மண்டல ஆணையராக இருந்த பாமதி ஐஏஎஸ் அளித்த அறிக்கை.
- நாங்களெல்லாம் அன்றைய அதிமுக அரசை எதிர்த்தும் நீதிமன்றத்தை நாடிக்கொண்டும் இருந்தபோது, தேசியப் பட்டியல் சாதியினர்-பழங்குடியினர் ஆணையத்தை இந்தப் பிரச்சினையில் தலையிட வைத்தவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவராக இருந்த மைதிலி சிவராமன்.
- 1992 ஆகஸ்ட் 3 அன்று, பாமதி ஐஏஎஸ்-ஐ நேரில் சந்தித்து, இது தொடர்பான புகார் மனுவை அவர் கொடுத்தார். அதன் அடிப்படையில், பாமதி ஐஏஎஸ், தன்னுடைய உதவியாளர் இனியனுடன் ஆகஸ்ட் 6 முதல் 8 வரை கிராமத்துக்கு நேரடியாகச் சென்று, பாதிப்புகளையெல்லாம் பார்த்தும், மக்களிடம் கேட்டும் தேசிய ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார்.
முக்கியத் திருப்புமுனை
- அதில், பாலியல் வன்கொடுமைக் குற்றம் தவிர, எங்களால் எழுப்பப் பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர்உறுதிப்படுத்தியிருந்தார். வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் எல்லாம் அப்போது சிறையில் இருந்ததால், அதை உறுதிப்படுத்த முடிய வில்லை என்பதுதான் அவரது கருத்து. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆணையம், பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உண்மையை உரக்கச் சொன்னது.
- மீண்டும் உயர் நீதிமன்றம் பாமதியையே ஒருநபர் விசாரணை ஆணைய அதிகாரியாக நியமித்து, வாச்சாத்தி கிராமத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில்தான், பாலியல் வன்கொடுமை, சந்தனக் கட்டை கடத்தல் தொடர்பாகத் திறமைவாய்ந்த புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று அவர் பரிந்துரைத்தார்.
- அதை ஏற்றுதான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹாதி, மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட்டார். எனவே, இந்த வழக்கில் முக்கியத் திருப்புமுனையாக விளங்கியவர் பாமதி ஐஏஎஸ் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
திறமையும் நேர்மையும்
- சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டபோதே சம்பவம் நடந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன. தடயங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. இத்தகைய நிலையில் வழக்கை எடுத்துக்கொண்டு மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து, குற்றங்கள் அனைத்தையும் நிரூபித்ததில் முக்கியப் பங்குவகித்தவர் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஜெகந்நாதன் டிஎஸ்பி ஆவார். அவரும் அவருடைய குழுவினரும் மிகுந்த அக்கறையுடனும் நேர்மையாகவும் இந்த வழக்கில் செயல்பட்டனர். அதனால், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் சிபிஐயின் பணியைப் பாராட்டி ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டது.
- மற்றொருவர் சிபிஐ சார்பில் சிறப்பு வழக்கறிஞராகத் திறமையாக வாதாடிய அரசு வழக்கறிஞர் ஜெயபாலன். குற்றவாளிகளுக்கு ஆதரவாக 12 வழக்கறிஞர்கள் ஆஜரான நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் இவர் ஒருவர்தான் ஆஜரானார். இவருடைய வாதத் திறமையும் எடுத்துரைத்த விதமும் வழக்கின் வெற்றிக்கு மிக முக்கியமாக அமைந்தன.
அரசு பெண் ஊழியர்களின் சாட்சியம்
- பாலியல் வன்கொடுமை குற்றத்தை நிரூபித்ததில் இரண்டு பெண் அரசு ஊழியர்களின் சாட்சியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1992 ஜூன் 20 அன்று வாச்சாத்தி கிராமத்துக்கு ரெய்டு சென்ற காவலர்களில் 15 பெண் காவலர்களும் இருந்தனர். அவர்கள் யாரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. “பெண் காவலர்களும் அங்கு இருக்கும்போது எப்படி கற்பழிப்பு நடத்திருக்கும்?” என்றுகூட அன்றைய அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
இதோ பெண் காவலரின் சாட்சியம்
- “அன்று மாலை 6 மணிக்கு வனத் துறையினர் பெண்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். நாங்கள் உடன் வருகிறோம் என்று சொன்னோம். அவர்கள் சந்தனக் கட்டை ஏற்றுவதற்குத்தான் அழைத்துச்செல்கிறோம். நீங்கள் வரவேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். அதனால் நாங்கள் உடன் செல்லவில்லை. ஒரு மணி நேரம் கழித்து லாரி திரும்ப வந்தபோது ஆலமரத்தடியில் நிற்காமலே சென்றுவிட்டது.”
- மற்றொருவர், சேலம் பெண்கள் சிறையில் அப்போது வார்டனாகப் பணிபுரிந்த லலிதாபாய். “வாச்சாத்தி பெண்கள் மிகுந்த துயரத்தில் சோர்வுடன் இருந்தார்கள். ஏன் என்று கேட்டபோது, ‘பாரஸ்ட்காரவுங்க சில பொம்பளப் பிள்ளைகளைக் கெடுத்திட்டாங்க. உதிரப்போக்கு இருக்கு’ என்று தெரிவித்தனர்.
- நான் சிறையிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்நோயாளியாகச் சேர்த்துச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்” என்று அவர் கூறினார். நானும் தோழர் அண்ணாமலையும் சிறைக்குச் சென்று பெண்களைச் சந்தித்தபோதும் எங்களிடம் இதே தகவலை அவர் பகிர்ந்துகொண்டார். தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றினாலும், மனசாட்சிப்படி உண்மையை அவர்கள் சாட்சியமாக அளித்தது வழக்குக்கு வலுசேர்த்தது.
மாபெரும் மனித உரிமை இயக்கம்
- தாமதிக்கப்பட்ட நீதி என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். எனினும், நேர்மையான நீதிபதிகளிடம் இந்த வழக்கு சென்றதால்தான் நீதி கிடைத்திருக்கிறது. கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. நீதிபதி அக்பர் அலி சாட்சிகளை விசாரிக்க ஆரம்பித்தார்.
- பட்டியல் சாதியினர்-பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கு என்பதால், பிறகு நீதிபதி அசோக்குமார், மதிவாணன், சிவக்குமார் ஆகியோர் விசாரித்தனர். தருமபுரி மாவட்ட நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கிய குமரகுரு, பிறகு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.வேல்முருகன் ஆகியோர் மிகவும் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டதும் இந்தத் தீர்ப்புக்கு மற்றொரு அடிப்படை.
- தன்னலம் கருதாது, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர்கள் குழு - மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை, வழக்கறிஞர்கள் ஜி.சம்கிராஜ், கே.இளங்கோ, டி.சுப்புராம் ஆகியோரின் பங்களிப்பு இல்லாமல் இந்த வழக்கின் வெற்றி இல்லை. ஆசை வார்த்தைகள், அச்சுறுத்தல்களுக்கு ஆட்படாமல் அமைப்புடன் உறுதியாக நின்று, வாச்சாத்தி மக்கள் போராடியதும் முக்கியமானது.
- மனித உரிமை என்கிற வார்த்தையே அதிகமாகப் புழக்கத்தில் இல்லாத காலத்தில், வாச்சாத்தியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய மாபெரும் மனித உரிமை இயக்கம் வாச்சாத்தி வழக்கு. நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் தீர்ப்பு இது என்பதில் சந்தேகமில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 10 – 2023)