- கஸ்தூரி என்ற பெயருடைய வானொலியின் முன்னாள் இயக்குநர் ஒருவர் முதுமையின் காரணமாக 2020இல் காலமானார். 1950களில் சேவையாற்றியவர் என்பதால், என்னைப் போன்ற இந்தத் தலைமுறை வானொலிப் பணியாளர்களுக்கு அறிமுகம் இல்லாதவர். அவர் அலெக்ஸாண்டர் பிளமிங்கைக் கொண்டு நிகழ்ச்சி ஒலிபரப்பியவர் என்கிற குறிப்பு கிடைத்தது. அந்தச் வேளையில் வெளிவந்த ‘வானொலி’ இதழ்களை நூலகத்திலிருந்து தேடிப்பிடித்தோம்.
- அலெக்ஸாண்டர் பிளமிங், ஆன்டிபயாட்டிக்ஸ் (Anti biotics) என்கிற தலைப்பில் பேராசிரியர் வி.ஈஸ்வரய்யாவுக்கு 15 நிமிட நேரத்துக்கு ஆங்கிலத்தில் நேர்காணல் அளித்திருந்தார். அந்த நேர்காணல் 17 மார்ச் 1953 அன்று இரவு ஒன்பதரை மணிக்கு சென்னை நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகும்; விஜயவாடா நிலையமும் அஞ்சல் செய்யும் என்னும் தகவல் ‘வானொலி’ இதழில் பதிவாகியிருந்தது கிடைத்தது. எழுபது ஆண்டுகளுக்கு முன் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சியைப் பற்றித் துல்லியமாக அறிய முடிகிறது எனில், அதற்கு ‘வானொலி’ இதழே காரணம்.
- வானொலியின் நிகழ்ச்சி நிரலையும் தேர்ந்தெடுக்கப்பட்ட வானொலிப் பேச்சுகளின் எழுத்து வடிவத்தையும் தாங்கிச் சென்னை வானொலி நிலையத்திலிருந்து வெளிவந்த இதழ் ‘வானொலி’. 1938 ஜூன் முதல் 1987 ஏப்ரல் வரையிலான காலத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் வெளிவந்த மாதம் இருமுறை இதழ் ‘வானொலி’. முதல் இரண்டு ஆண்டுகளில் மாதம் ஒருமுறை, இருமுறை, மும்முறை என வசதிக்கேற்ப வெளிவந்த இதழ் 1940கள் முதல் மாதம் இருமுறையாக 7, 22ஆம் தேதிகளில் வெளிவந்தது. சென்னையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘வானொலி’, இரண்டாம் உலகப் போர்ச்சூழல் காரணமாகத் திருச்சிக்குத் தற்காலிகமாக இடமாறி, பின் மீண்டும் சென்னைக்கே வந்து சேர்ந்தது.
- ராஜாஜி வைத்த பெயர்: ‘வானொலி’ இதழ் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கில் ‘வாணி’ என்கிற பெயரிலும் டெல்லியிலிருந்து ஆங்கிலத்தில் ‘இந்தியன் லிசனர்’ என்னும் பெயரிலும் உருதுவில் ‘ஆவாஸ்’ என்றும் இந்தியில் ‘சாரங்’ எனவும் வெளிவந்தன. ‘சாரங்’ பின்னாளில் ‘ஆகாஷ் வாணி’ ஆனது. தமிழ் இதழுக்கு ‘வானொலி’ என்று பெயர் சூட்டியவர் ராஜாஜி. ‘வானொலி’ இதழுக்கு ஆசிரியராக அமைபவர் நிலையத்தின் இயக்குநர் பதவி வகிக்கும் அலுவலர். உதவி ஆசிரியராக விளங்குபவரே உண்மையில் ஆசிரியராகச் செயல்படுபவர். அவ்வகையில், முதல் ஆசிரியராகச் செயல்பட்டவர் ‘தீபன்’ என்கிற தெ.சி.தீத்தாரப்பன்.
- அவர் தமிழறிஞர் டி.கே.சி.யின் மகன். 'அரும்பிய முல்லை' என்கிற அற்புதமான நூலை எழுதிய தீத்தாரப்பன், அவர் ஆற்றல் முழுவதுமாக மலருமுன்பே அகால மரணத்தைத் தழுவினார். இரண்டாம் உலகப் போரின்போது, வெளியீட்டு இடம் திருச்சிக்கு மாறியபோது அங்கே ஊழியராகவிருந்த எழுத்தாளர் பெ.கோ.சுந்தரராஜன் ‘சிட்டி’ ஆசிரியராக இருந்தார். இதழ் நின்ற காலத்தில் ஆசிரியராக இருந்தவர் சுமூகன்.
- ‘வானொலி’ இதழ்களைக் கொண்டு இந்திய ஒலிபரப்பின் வரலாற்றை ஆதாரபூர்வமாக எழுதிவிட முடியும். சென்னையுடையது மட்டுமல்லாது அன்றைய சென்னைப் பெருநிலத்தின் விஜயவாடா, கோழிக்கோடு உள்பட அனைத்து வானொலி நிலையங்களின் தோற்ற வரலாற்றை அறியவும் ‘வானொலி’ இதழ் பயன்படும். தமிழ்நாட்டு நிலையங்கள் அனைத்தின் வரலாற்றையும் இவ்விதழ்களிலிருந்து பெறலாம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஒலிபரப்பின் வரலாறு தவிர, நாட்டின் வரலாற்றையும் பதித்துவைத்துள்ள காலப் பெட்டகம் ‘வானொலி’ இதழ்.
- ஹார்மோனியத்துக்குத் தடை: விடுதலைக்கு முந்தைய இந்திய நிலை, விடுதலை, மகாத்மாவின் மரணம், இரண்டாம் உலகப் போர், சீனா, பாகிஸ்தான் நாடுகளுடனான போர்கள், நெருக்கடி நிலை போன்ற தேசம் சந்தித்த சவால்களையும் இந்த இதழ்களின் மூலம் அறிய முடியும்.
- மும்பையில் பின்பற்றப்பட்டது ஒரு நேரம், கல்கத்தாவில் பின்பற்றப்பட்டது வேறு நேரம் என்றெல்லாம் இருந்த நிலை மாறி, இந்தியா முழுவதும் ஒரே நேரம் பின்பற்றப்படத் தொடங்கியதற்கு நாடு முழுவதும் தொடங்கப்பட்ட வானொலிகளே காரணம் என்றால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இந்திய நாள்காட்டியைச் சீர்திருத்த மேக்நாட் சாகா குழு உருவாக்கப்பட்டதையும் அதன் செயல்பாடுகளையும் மக்கள் மொழியில் அறிய ‘வானொலி' இதழ்போல இன்னொரு இதழ் உண்டா என்று தெரியவில்லை.
- இன்று ஹார்மோனியம் என்ற இசைக் கருவி உயர் கலைஞர்கள் என்று கருதப்படும் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் மடிகளில் தவழ்கிறது/தவழ்ந்தது. ஆனால் 1930-40களில் தாகூர், நேரு போன்ற பெரும் தலைவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட இசைக் கருவி அது. ‘ஹார்மோனியத்தைச் சாந்தி நிகேதனில் தடை செய்துவிட்டேன். நீங்கள் எப்போது தடைசெய்யப் போகிறீர்கள்' என்று கல்கத்தா வானொலி நிலையத்துக்குக் கடிதம் எழுதினார் தாகூர். தொடர்ந்து விடுதலைக்கு முந்தைய கால இந்திய வானொலி ஹார்மோனியத்தைத் தடைசெய்தது. பின்னர், பல்லாண்டுப் போராட்டங்களுக்குப் பிறகு தடை நீங்கியது. இந்த வரலாறுகளை எல்லாம் வானொலி இதழிலிருந்து ஒரு ஆய்வாளர் பெற முடியும்.
- கொடியேற்றிய கருணாநிதி: வானொலியோடு வளர்ந்தது கர்னாடக இசையும் இசைக் கலைஞர்களும். பாலமுரளி கிருஷ்ணா சிறுவனாக இசை வழங்கிய படம் முதல் முதியவராக இசைக்கும் படம் வரை ‘வானொலி’யில் கண்டு களிக்கலாம். எம்.ஜி.ராமச்சந்திரன் ரேடியோ நாடகத்தில் நடித்தார் என்பதும் ராம்சந்தர் என்ற பெயரில் அவர் பிரபலமானார் என்பதும் அவர் பற்றாளர்களுக்கும் புதிய செய்தியாக இருக்கலாம். ஒரு குடியரசு தினத்தன்று வானொலி நிலையத்தில் கருணாநிதி கொடியேற்றினார் என்றால் ஆதாரத்தைக் கேட்பீர்கள். எல்லாம் ஆவணமாக இருக்கிறது 'வானொலி' இதழ்களில்.
- ‘வானொலி’ இதழ்கள் 'நியூஸ் பிரின்ட்' காகிதத்தால் ஆனவை. அவை நாள்தோறும் பாழாகிக்கொண்டே வருகின்றன. என்னதான் நவீன முறையில் பராமரிப்பை மேற்கொண்டாலும்கூட. காகிதம் காகிதம் தானே, அழியத்தானே செய்யும். ‘வெற்றிடத்தில்’ வைக்க முடிந்தால் ஒருவேளை பாதுகாக்க முடியுமோ என்னவோ? ஆனால், அது இப்போதைக்குச் சாத்தியம் இல்லை. எனவே, எண்ணிலக்கமயமானால் மட்டுமே அவற்றைப் பாதுகாக்க முடியும். பாதுகாக்கப்பட்டால் இந்த நாட்டின் வரலாற்றுக்கு அவை பயன்படும். இல்லையெனில், கரையான்களுக்கு உணவாகும். முயற்சி பலன் தரவில்லையானால் பல்லுயிர் ஓம்புவதாகச் சொல்லிச் சமாதானம் அடைய வேண்டியதுதான். கரையானும் உயிர்தானே!
- ஜூன் 16, ‘வானொலி' இதழ் தொடங்கப்பட்ட 86ஆவது ஆண்டு
நன்றி: தி இந்து (18 – 06 – 2023)