TNPSC Thervupettagam

வான் பொய்ப்பினும் தான் பொய்க்காது

July 5 , 2023 510 days 385 0
  • காவிரி ஆறு தமிழ்நாட்டில் 461 கி.மீ ஓடுகிறது. இதன் மொத்த நீளம் 805 கி.மீ. ஆகும். காவிரி பாயும் பகுதி பெரும்பாலும் சமவெளிப் பகுதியாகும். அதுவும் வண்டல் மண் நிறைந்த பகுதியாகும். அதனால்தான் அந்தப் பகுதியை "டெல்டா' என்று அழைக்கிறோம்.
  • நைல் நதி, அமேஸான் நதி, சீனாவின் மஞ்சள் நதி போன்றவை பயனுள்ள நதிகள் என்று கூற முடியாது. பாதிப்பை அதிகம் தந்த நதிகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் காவிரி நதி என்றும் மக்களுக்கு பயனுள்ள நதியாக, மக்கள் உயிர் வாழ உணவு விளைவிக்கும் நதியாகவே விளங்கி வருகிறது.
  • கர்நாடக மாநிலத்தை ஆண்ட பலரும் காவிரியின் குறுக்கே அணை கட்டி காவிரி நீரைத் தடுத்ததுண்டு. ஆனால் படைகொண்டு சென்று, அந்த அணைகளைத் தகர்த்தெறிந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவந்தார்கள் ராஜராஜசோழன் வாரிசுகள். ஏன் ராணி மங்கம்மாளும் தடுப்பணையைத் தகர்த்தெறிந்து தண்ணீர் கொண்டு வந்தார் என்பது வரலாறு.
  • எகிப்திலுள்ள நைல் நதியின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதன் குறுக்கே "கால்பா' என்ற அணையைக் கட்டினர். பிரமிடுகளை கட்டிய பெருமைக்குரியவர்கள் நைல் நதியின் குறுக்கே கட்டிய அணையில் தோற்றுப் போயினர். கால்பா அணை 250 ஆண்டுகள்கூட நிலைத்து நிற்கவில்லை. அதனை உடைத்தெறிந்தது நைல் நதி.
  • அப்போது எகிப்திலிருந்து ஒரு குழு இந்தியா வருகை தந்து மொகலாய மன்னனிடம் ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் அப்படி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை பற்றிக் கேட்டனர். அவர்களுக்கு கல்லணையைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கிறது. உடனே மொகலாய மன்னர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை பற்றி கூறினார்.
  • அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து நிலைகுலையாமல் இமயத்தைப் போல் நிமிர்ந்து நிற்கும் கல்லணையின் கம்பீரத்தைக் கண்டு அதிசயித்துப் போயினர். கல்லணை குறித்த செய்திகளை சேகரித்துக் கொண்டு, எகிப்து சென்றனர். நைல் நதியின் குறுக்கே கல்லணை போல் அணை ஒன்று கட்டினார்கள்.
  • சிமென்ட் என்ற ஒன்று இல்லாத காலத்தில் ஈராயிரம் ஆண்டு நிலைத்து நிற்கக்கூடிய கல்லணையைக் கட்டிய தமிழர்களின் அறிவாற்றல் வியப்புக்குரியது. மாமன்னன் கரிகாலன், இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று 14,000 சிங்களர்களை கைது செய்து கொண்டு வந்து காவிரிக்கு 160 கி.மீ. கரை அமைத்தான்.
  • காவிரியில் பாய்ந்து வரும் பல கோடி கனஅடி நீரின் போக்கைக் கட்டுப்படுத்திட கொள்ளிடம் உருவாக்கப்பட்டது. பிறகு வெண்ணாறு வெட்டப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல பல ஏரிகளையும் உருவாக்கி காவிரித் தண்ணீரை மடைமாற்றியுள்ளனர்.
  • காவிரியிலிருந்து முப்பத்தாறு ஆறுகள் பிரிந்து 999 மைல் தொலைவு ஓடுகின்றன. அதற்குப்பின் அந்த கிளை ஆறுகளிலிருந்து கால்வாய்கள் மூலம் சுமார் பதினைந்தாயிரம் மைல்கள் காவிரி நீர் பாய்கிறது. டெல்டா பகுதியில் நூறு அடி நிலம் கூட காவிரி நீர் பாயாத பகுதி இல்லை என்று ஆங்கிலேயர்கள் புகழ்ந்து எழுதியுள்ளனர்.
  • ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர்தான் முக்கொம்பு பகுதியில் மேலணையைக் கட்டினார். கரிகால் பெருவளத்தான் ஆண்டுக்கு ஆண்டு காவிரியின் பெருவெள்ளத்தால் நாடு பாதிப்படைவதைக் கண்டு அதை எப்படி தடுப்பது என்று காவிரியில் நின்று ஆழ்ந்து சிந்தித்தான். அப்போது, அவனது கால் ஊன்றி நின்ற பகுதி மண் வெள்ளத்தால் அரிக்கப்பட்டு கால் கீழே சென்று பதிகிறது. இதனை உணர்ந்த கரிகாலன் பெரிய பெரிய பாறை கற்களை போட்டு அதன் மேல் கல்லணையை கட்டியதாக வரலாறு கூறுகிறது.
  • காவிரி நதியை ஒட்டி "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' என்ற இரண்டு காப்பியங்கள் உருவாயின. வேறு எந்த நதியை ஒட்டியும் காப்பியங்கள் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை.
  • ஹீப்ரு மொழி மிகவும் பழைமையான மொழி. இயேசுபிரான் பேசிய மொழி. செம்மொழி தகுதி படைத்தது. அந்த மொழியில் நமது காவிரி நதியின் பெருமை பற்றி எழுதப் பட்டுள்ளது. அப்படிப்பட்ட காவிரி நதி, வளர்ந்து வரும் கால சூழலின் காரணமாக, உலகின் எத்தனையோ நதிகள் மாசு நிறைந்து காணப்படுவதைப் போல் மாசு நிறைந்து காணப்படுகிறது.
  • பல கோடி மக்களின் விவசாயத்திற்குப் பயன்படுவது மட்டுமின்றி பல கோடி மக்களின் குடிநீராகவும் காவிரி நதி நீர் பயன்படுகிறது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் இருபது மாவட்டங்களின் குடிநீர் தேவை இந்த காவிரியை நம்பித்தான் இருக்கிறது. உலகில் பல நதிகள் காணாமல் போய்விட்டன. அந்த நிலை நமது காவிரி நதிக்கும் வந்து விடக் கூடாது என்பதை இன்றைய தலைமுறை உணர வேண்டும்.
  • கர்நாடக மாநிலத்தில் வீரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெறாமலே 1968-இல் ஹேமாவதி அணையை காவிரியின் குறுக்கே கட்டினார். மேலும் பல அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டபோது தி.மு.க அரசும் விவசாயிகள் சார்பில் மூப்பனார், முரசொலி மாறன், திருச்சி ரெட்டியார், சீனிவாச ஐயர் ஆகியோர் காவிரிக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
  • அந்த வழக்கை திரும்பப் பெற்றால் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாணலாம் என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டதால் அதனை நம்பி வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
  • ஆயினும் திருச்சி ரெட்டியாரும், சீனிவாச ஐயரும் வழக்கைத் திரும்பப் பெறவில்லை. கிருஷ்ணசாமி ஐயர் விவசாயிகளின் சார்பாக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை அவரது மகனான முன்னாள் அட்வகேட் ஜெனரல் மு. சுப்பிரமணியம் நடத்தினார். ரெட்டியார் வழக்கை மன்னை ரங்கநாதன் நடத்தினார்.
  • இதற்காக கர்நாடக அரசுடன் முப்பது முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. பிறகு அந்த வழக்கில் தமிழ்நாடு அரசும் இணைந்து கொண்டது. 1990-இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா ஒரு மாத காலத்திற்குள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென தீர்ப்பளித்தார்.
  • தமிழக முதல்வராக மு. கருணாநிதி இருந்தபோது பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் வலியுறுத்தி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பதினேழு ஆண்டுகள் வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. 2007-இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே ஹேரங்கி, கபினி அணைகளும் கட்டப்பட்டன.
  • 1982 ஜனவரி முதல் நாள் அப்போதைய கர்நாடக முதல்வராக இருந்த குண்டு ராவ் (காங்கிரஸ்) காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டப்படும் என்று அறிவித்தார். பின்னர் வந்த பாஜக அரசு அந்த அணை கட்ட ரூ. 9,000 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன் பிறகு தற்போதைய கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு ரூ. 1,000 கோடி ஒதுக்கியுள்ளது.
  • மேக்கேதாட்டு அணை கொள்ளளவு 67 டிஎம்சி என்று கூறப்பட்டாலும் உண்மையில் 80 டிஎம்சி நீரை தேக்கிவைக்க முடியும். காவிரி, அர்க்காவதி ஆறு சங்கமத்துறை வரை 10 கி.மீ. தொலைவு தண்ணீர் தேக்கப்படும். அப்படியானால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஒகேனக்கல் வந்து சேராது.
  • நடுவர் மன்றம் 205 டிஎம்சி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென்று தீர்ப்பு கூறியது. அதன் பிறகு இறுதியில் 192 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் உச்சநீதிமன்றம் 177.25 டிஎம்சியாக தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரைக் குறைத்தது. பெங்களூருக்கு குடிநீருக்காக 14 டிஎம்சி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. ஆனாலும், ஆறு வாரத்திற்குள் காவிரி ஆணையம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • கர்நாடக தேர்தல் நேரத்தில் காவிரி ஆணையத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. கர்நாடக தேர்தல் முடிந்த பிறகுதான் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தை "பல் இல்லாத ஆணையம்' என்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா விமர்சித்தார்.
  • தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் வழக்கம்போல் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 2021-22-ஆம் ஆண்டில் கால்வாய்களில் தூர்வாரும் பணிக்கு ரூ.62 கோடியே 91 லட்சம் ஒதுக்கப்பட்டது. 3,589 கி.மீ. கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. 2022-23-ஆம் ஆண்டு முன்கூட்டியே மே 24ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தூர் வாருவதற்கு ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டது. 4,964 கி.மீ. தொலைவு கால்வாய்கள் தூர்வாரப்பட்டன.
  • குறுவை சாகுபடி என்பதையே இன்றைய தலைமுறையினரும் இதற்கு முந்தைய தலைமுறையினரும் மறந்து போய் விட்டனர். ஆனால் இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் 47 ஆண்டுகளுக்கு பிறகு 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இது வரலாற்று சாதனையாகும்.
  • இந்த ஆண்டும் தமிழக அரசு தூர்வாரும் பணிக்கு ரூ. 90 கோடி ஒதுக்கியது. இதனால் 4,773 கி.மீ. கால்வாய்கள் தூர் வாரப்பட்டன. அதே வேளையில் வேளாண் பொறியியல் துறை மூலமாக 5 கோடி ரூபாய் செலவில் 1,146 கி.மீ. நீளமுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. இதனை கண்காணிக்க ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்கப்பட்டார். தமிழக முதல்வரும் மேட்டூர் அணை திறக்கப்படும் முன்பே தூர்வாரும் பணியினை துரிதப்படுத்தி விட்டு வந்தார்.
  • பொதுவாக மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், காவிரியின் கடைமடைப் பகுதிகளுக்கு வருவதற்கு குறைந்தது 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும். ஆனால் தற்போது தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றிருந்ததால் ஒரு வாரத்தில் கடைமடைப் பகுதிகளுக்கு காவிரிநீர் வந்து சேர்ந்து விட்டது.
  • தற்போது குறுவை சாகுபடியும் தொடங்கி விட்டது. இயற்கை உதவினால் காவிரி என்ற பொன்னி நதி நீரால் தமிழ்நாடு செழித்து காட்சி தரும். பாதி தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இல்லாத நிலை உருவாகும்.

நன்றி: தினமணி (05 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories