- மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை செயலகத்திலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் அண்மையில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் கூறும் செய்தி நம் பஞ்சாயத்துக்களும் உயர்கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். உயர்கல்வி நிறுவனங்கள் சமூகத்துடன் இணைந்து மக்களுக்குச் சேவை புரிவதை இன்றைய மத்திய அரசு கட்டாயமாக்கிவிட்டது. அதற்கான ஒரு திட்டத்தையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதுதான் "உன்னத் பாரத் அபியான்'.
- உயர்கல்வி நிறுவனங்களில் சமூகத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யும் வளங்கள் உள்ளன. அவற்றை மக்களுடன் பகிர்ந்து கொண்டு செயல்படும்போது மக்களின் தேவைகள் நிறைவேறுவதோடு, மாணவர்களின் திறனும் வளர்க்கப்படும். அத்துடன், அவர்களுக்கு சமூகம் சார்ந்து சிந்திக்கும் பார்வையும் உருவாகிவிடும்.
- இந்தச் செயல்பாடு நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஒருசில உயர்கல்வி நிறுவனங்களில் நடந்து கொண்டுதான் இருந்தது. அதற்குப் பெயர் விரிவாக்கப்பணி. அந்த விரிவாக்கப்பணி என்பது ஒருசில உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயப் பணியாக இருந்தது. மற்ற நிறுவனங்களில் அது விருப்பப் பணியாக இருந்தது.
- நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காந்திய நிறுவனங்களும் ஒருசில கிறிஸ்தவ உயர்கல்வி நிறுவனங்களும் விரிவாக்கப் பணியை செம்மையாக செய்து வந்தன. இந்த விரிவாக்கப் பணியை எல்லா உயர்கல்வி நிறுவனங்களும் கட்டாயமாகச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்கலைக்கழக மானியக் குழுவையும் மத்திய அரசையும் வலியுறுத்தி வந்தன. குறிப்பாக காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் பலமுறை இந்தக் கருத்தை வலியுறுத்தி வந்தது.
- இந்த நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொண்டு விரிவாக்கப்பணியை கட்டாயக் கடமையாக அறிவித்து விட்டது. அதற்குக் காரணம் பல்கலைக்கழக மானியக்குழு ஓர் குழு அமைத்து இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. அந்தக் குழுவின் அறிக்கையிலும் காந்திகிராம விரிவாக்கப் பணி மேற்கோள் காட்டப்பட்டு இதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டிருந்தது.
- இதற்கும் மேலாக புதுதில்லியில் இயங்கும் ஆசிய பங்கேற்பு ஆய்வு (பார்ட்டிசிபேட்டரி ரிசர்ச் இன் ஏஷியா) நிறுவனத் தலைவர் உயர்கல்வி நிறுவனங்கள் மக்களுடன் பணி செய்ய வேண்டும் என்பதை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தார். அதன் அடிப்படையில் இந்திய அரசு அவரையும் இதில் ஒரு உறுப்பினராகச் சேர்த்தது.
- மத்திய அரசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது மட்டுமல்ல, இதற்கான பிரத்தியேகத் திட்டம் ஒன்றையும் உருவாக்கி அறிவித்தது. அதுதான் "உன்னத் பாரத் அபியான்'. ஆனால் இந்தத் திட்டத்தை ஒருசில கல்வி நிறுவனங்களைத் தவிர வேறு எவரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. மாநில அரசுகளும் பெரும் முன்னெடுப்பைச் செய்யவில்லை. ஆனால் மத்திய அரசு இதை விடுவதாக இல்லை. அந்தத் திட்டம் ஏன் தொய்வடைந்தது எனக் கண்டுபிடித்து அதற்கு உயிரூட்ட "உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை மறுபடியும் அறிவித்து அதற்கு நிறுவனங்களைக் கண்டுபிடித்து, பொறுப்பேற்கச் செய்து வருகிறது. இன்று இந்தப் பணி மேலும் வலுவடைந்து வருகிறது.
- இந்த நேரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இந்தக் கடிதத்தை ஏன் எழுதியுள்ளது என்பதை புரிந்து கொண்டு நம் அரசு செயல்பட்டால் இந்தத் திட்டம் வெற்றி பெறும். அது மட்டுமல்ல நம் கிராமங்கள் பயன் அடையும் என்பதுதான் முக்கியம். இந்தக் கடிதத்திற்கு ஒரு பின்னணி உண்டு. மத்திய அரசு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு பயிற்சித் திட்டம் ஒன்றை கொள்கை அளவில் உருவாக்க குழு ஒன்றைஅமைத்திருந்தது. அந்தக் குழு பலமுறை கூட்டம் நடத்தி வல்லுனர்களின் கருத்துகளைக் கேட்டு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
- அந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் உள்ள மிக முக்கியமான பரிந்துரை, உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து ஒருசில கிராமங்களில் செயல்பாடுகளில் ஈடுபட்டால் மிகப்பெரிய மாற்றங்களை சமூகத்தில் கொண்டுவர முடியும் என்பது. இந்தக் குழுவிற்கு நான் பலமுறை அழைக்கப்பட்டு அதில் கலந்து கொண்டு எனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறேன். அவை எனது கருத்துகள் அல்ல, எங்கள் பல்கலைக்கழகத்தில் நாங்கள் செய்த பணிகளின் அனுபவங்களை வைத்து உருவானதுதான்.
- பல்கலைக்கழகங்கள் சமுதாயத்திற்குத் தேவையான பல வளங்களை வைத்திருக்கின்றன. சமூகத்தில் இன்னும் பல தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. சமூகமும் பல்கலைக் கழகங்களும் இணையும்போது மக்களின் தேவையும் பூர்த்தி செய்யப்படும், பல்கலைக்கழகமும் இந்தச் செயல்பாடுகளால் பயன்களைப் பெற முடியும் என்ற கருத்தை அந்தக் குழு ஏற்று பரிந்துரை செய்திருந்தது. இன்று கிராமங்களில் பஞ்சாயத்துகளுக்கு, திட்டமிடும் பணி என்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிராம பஞ்சாயத்துகளால் அதை நிறைவேற்ற இயலவில்லை. காரணம், அங்கு அதற்கான நிபுணத்துவமும் இல்லை, அதற்கான கட்டமைப்புகளும் இல்லை.
- ஆனால் அந்த நிபுணத்துவம் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளது. இருந்தபோதும் அது பயன்படுத்தப்படவில்லை. இதேபோல் ஐ.நா.வில் நீடித்த வளர்ச்சியின் குறிக்கோள்களை அடைய கிராமங்களும் நகரங்களும் பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. அந்தச் செயல்பாடுகளை எப்படி அடிமட்டத்தில் செய்வது என்பதை பஞ்சாயத்துக்களுக்கு கற்றுத் தரவேண்டிய முக்கியப் பணி இந்த உன்னத் பாரத் அபியான் மூலம் உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ளது.
- எனவே, இந்த இரண்டு பணிகளையும் கிராம பஞ்சாயத்துக்கள் செய்திட வேண்டும். இதற்குத் தேவையான நிபுணத்துவத்தைப் பெற்றிருக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் கிராம பஞ்சாயத்துக்களுடன் கைகோத்துச் செயல்பட்டால் மக்கள் பயன்பெறுவார்கள். கல்வித்துறையும், ஊரக வளர்ச்சித்துறையும் இணைந்து இந்த முன்னெடுப்பைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் மத்திய அரசு இந்த கடிதத்தை மாநில அரசுகளுக்கு எழுதியுள்ளது. ஏற்கெனவே, இந்தப் பணியை கேரள மாநிலத்தில் ஒரு கல்லூரி, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் செயல்படுத்தி ஒரு அறிக்கையை அந்த பஞ்சாயத்திற்குத் தந்துள்ளது. அந்த அறிக்கையும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
- அதனை ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்துடன் கேரள மாநில பஞ்சாயத்தில் நடைபெற்ற இந்த சோதனை முயற்சி செயல்பாட்டின் அடிப்படைகளை விளக்கி ஒரு கருத்துரு இணைக்கப்பட்டுள்ளது. அதில் அந்தக் கல்லூரியும் கிராம பஞ்சாயத்தும் இணைந்து செயல்பட்ட முறை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இதனை முன்னுதாரணமாக வைத்து மாநிலங்கள் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது மத்திய அரசு.
- தமிழகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன. பல கிராம பஞ்சாயத்துகள் சமூக மேம்பாட்டை மையப்படுத்தி வளர்ச்சித் திட்டங்
- களை மாவட்ட நிர்வாகத்தின் பங்கேற்புடன் செய்துள்ளன. அதை காந்திகிராம பல்கலைக்கழகமே ஒருங்கிணைத்துச் செய்துள்ளது. அதன்பின் ஒருசில பஞ்சாயத்துகள், ஒருசில தன்னார்வ நிறுவனங்களின் உதவியுடன் வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்தன. ஆனால் அப்பணி தொடரவில்லை. அரசு தொடர்ந்து அதில் ஆர்வம் காட்டாததும், பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாததுமே அதற்கான காரணங்கள். இதனைச் செய்ய அவர்களிடம் உரிய கட்டமைப்பும் இல்லை.
- இன்று இந்தக் குறையைப் போக்கிடத்தான் கிராம பஞ்சாயத்துக்கள், அருகில் இருக்கும் உயர்கல்வி நிறுவனத்தை முறையாக அணுக வேண்டும் என்ற அறிவுரையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அப்படி அணுகும்போது உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் "உன்னத் பாரத் அபியான்' திட்டத்தின் மூலம் பஞ்சாயத்துத் திட்டமிடலுக்கு உதவிட முன்வர வேண்டும். இந்த செயல்பாட்டை ஊக்குவிக்க மாநில அரசு முன்வர வேண்டும். கேரளத்தில் நடைபெற்றுள்ள இந்த திட்டத்தில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். மிகக் குறைந்த செலவில் அந்தத் திட்டத்தை அவர்கள் தயாரித்துத் தந்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் முன்பு தயாரித்த திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்பட்டது. அதற்கு பல நிறுவனங்கள் உதவியளித்தன. தற்போது கூட இரண்டு கிராம பஞ்சாயத்துகள் (முத்துகாபட்டி கிராம பஞ்சாயத்து, நாமக்கல் மாவட்டம் / பிரதாமபுரம் கிராம பஞ்சாயத்து நாகை மாவட்டம்) நல்ல திட்டத்தினை தயாரித்து வைத்திருக்கின்றன. இந்தத் திட்டங்களை தயாரிக்க மிகுந்த சிரமங்களை இந்தப் பஞ்சாயத்துகள் அனுபவத்திருக்கின்றன. இருந்தும் திட்டங்களை தயாரித்து விட்டன.
- கடந்த காலங்களில் பல வாய்ப்புக்களை நாம் தவற விட்டிருக்கின்றோம். இந்த புதிய வாய்ப்பை நம் அரசும், பஞ்சாயத்துகளும், உயர்கல்வி நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐ.நா.வின் செயல்பாடுகளை உள்ளூர்மயப்படுத்தி அடிப்படை மாற்றங்களை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம் பஞ்சாயத்துகள் திட்டம் தீட்டிட முயல வேண்டும். இதற்கான உந்துசக்தியை பஞ்சாயத்துகளுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும், பயிற்சி நிறுவனங்களுக்கும் மாநில அரசு தந்திட வேண்டும்.
நன்றி: தினமணி (09 – 11 – 2023)