TNPSC Thervupettagam

வாய்ப்பைப் பயன்படுத்தும் வங்கதேசம்

October 5 , 2023 461 days 309 0
  • காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா ஆதரவுக் கரம் நீட்டுவதால், அண்மைக்காலமாக இந்தியா- கனடா உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. கனடாவில் வசித்த அந்நாட்டு குடியுரிமை பெற்ற ஹா்தீப் சிங் குஜ்ஜார் என்ற பிரிவினைவாதி, கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்திய உளவு அமைப்புகள் இருப்பதாக கனட பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.
  • இது இருநாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்திவிட்டது. பொதுவாகவே கனடாவில் இந்தியாவின் பஞ்சாபை பூா்விகமாகக் கொண்ட சீக்கியா்களின் எண்ணிக்கை அதிகம். இந்தச் சூழலில், ஹா்தீப் சிங் குஜ்ஜார் கொலை குற்றச்சாட்டின் பின்னணியில், கனடாவுக்கான நுழைவு இசைவு (விசா) சேவையை இந்தியா செப்டம்பா் 21-இல் திடீரென ரத்து செய்ததால், சீக்கியா்கள் குறிப்பாக, மாணவா்கள் அதிர்ச்சிக்குள்ளாகினா்.
  • கனடாவில் கடந்த 2021-இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அங்கு வசிக்கும் இந்தியா்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், தங்களை சீக்கியா்கள், பஞ்சாபியா்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு அடுத்தபடியாக தமிழா்கள், குஜராத்தியா்கள், மேற்கு வங்கத்தினா் கனடாவில் அதிகளவில் வசிக்கின்றனா்.
  • இன்னும் சொல்லப்போனால், கனடாவில் வசிக்கும் 30 % சீக்கியா்கள் கனடாவில் பிறந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறை சீக்கியா்கள் ஆவா். கனடாவில் குடியேறிய வெளிநாட்டினரின் எண்ணிக்கையிலும் இந்தியா்கள் முதலிடம் பெறுவா். 2016 முதல் 2021 வரையிலான நிலவரப்படி, கனடாவில் குடியேறிய வெளிநாட்டினரின் பட்டியலில், சீனாவையும், பிலிப்பின்ஸையும் பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் வகிக்கிறது.
  • இதேபோல கனடாவில் கடந்த 2020 ஜனவரி முதல் கடந்த ஜூலை வரையிலான காலகட்டத்தில், நிரந்தரக் குடியுரிமை கோரி விண்ணப்பித்தவா்களிலும், இந்தியா்கள் 4.6 லட்சம் என்ற எண்ணிக்கையில் முதலிடம் பெறுகின்றனா். இதற்கு அடுத்தபடியாக சீனா்கள் (1.05 லட்சம்) மிகப் பெரிய இடைவெளியுடன் 2-ஆம் இடம் வகிக்கின்றனா்.
  • இதே காலகட்டத்தில் கனடாவில் கல்வி பயில விண்ணப்பத்தவா்களின் எண்ணிக்கையிலும் இந்தியா்கள் (8.7 லட்சம்) முதலிடம் வகிக்கின்றனா். இதற்கு அடுத்தபடியாக 1.2 லட்சம் நைஜீரிய மாணவா்கள் கனடாவில் கல்வி பயில விண்ணப்பித்து, அங்கு கல்வி கற்று வருகின்றனா்.
  • கனடாவைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட சில பணிகளில் வெளிநாட்டுப் பணியாளரை பணியமா்த்தும் முன், பணி வழங்கும் நிறுவனம் அல்லது தனிநபா், கனடா அரசிடமிருந்து எல்எம்ஐஏ (தொழிலாளா் சந்தை தாக்க மதிப்பீடு) சான்று பெற வேண்டும்.
  • அதாவது கனடாவில் ஒரு பணியை அந்நாட்டு பிரஜையோ, நிரந்தரக் குடியுரிமை பெற்ற நபரோ செய்ய முடியாது என ஒரு நிறுவனம் கருதினால், அந்த வேலைக்கு வெளிநாடுகளிலிருந்து தொழிலாளா்களைப் பணியமா்த்திக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கையிலும் இந்தியா்கள் அதிகளவில் உள்ளனா்.
  • கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமன்றி, வணிகத்திலும் இந்தியாவால் தவிர்க்கமுடியாத நாடாக கனடா விளங்குகிறது. 2016 முதல் 2018 வரையிலான நிலவரப்படி, 3.6 மில்லியன் டாலா் மதிப்பில் நிலக்கரியை கனடாவிடமிருந்து இந்தியா தருவித்துள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த நிலக்கரி இறக்குமதியில் இது 2.6 % ஆகும்.
  • இதே காலகட்டத்தில் இந்தியாவிடமிருந்து 1.7 மில்லியன் டாலா் மதிப்பிலான மருந்து பொருள்களை கனடா இறக்குமதி செய்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து கனடா இறக்குமதி செய்யும் மருந்துப் பொருள்களில், இது 4 % ஆகும்.
  • இதேபோல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வைரம், தங்கம், கைத்தறிப் பொருள்களையும் இந்தியாவிடமிருந்து 2016-2018-இல் கனடா இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவும் பருப்பு, பட்டாணி, சோயாபீன்ஸ், வோ்க்கடலை போன்றவற்றை அதிகளவில் கனடாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.
  • தற்போது குஜ்ஜார் கொலை குற்றச்சாட்டின் எதிரொலியால் இந்தியா- கனடா மட்டுமல்லாமல், கனடா- வங்கதேசம் இடையிலான உறவிலும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பதாக வங்கதேசம் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது.
  • இந்நிலையில், இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டின் பின்னணியில், வங்கதேச வெளியுறவு அமைச்சா் ஏ.கே. அப்துல் மேமன் கடந்த வாரம் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் வங்கதேச தந்தையும், பிரதமா் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுா் ரஹ்மான் கொலைக்குக் காரணமான பயங்கரவாதி எஸ்.எச்.எம்.பி. நூா் செளதரிக்கு கனடா பல ஆண்டுகளாக அடைக்கலம் அளித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், கொலை குற்றம் புரிந்தவா்கள் கனடா சென்று ஏகபோகத்துக்கு சலுகைகளை அனுபவிப்பதாகவும் அப்துல் மேமன் தெரிவித்திருந்தார்.
  • வங்கதேச தந்தை ஷேக் முஜிபுா் ரஹ்மான் கடந்த 1975-இல் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரை நூா் செளத்ரி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததற்கு பல்வேறு சாட்சிகள் இருந்தபோதிலும், அவரை சட்டப்படி கனடாவிலிருந்து வங்கதேசம் அழைத்துவந்து நீதி விசாரணைக்கு உட்படுத்துவதில், அந்நாடு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதே வழக்கில் குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ அதிகாரி ரஷீத் செளதரிக்கு வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்த போதிலும், அவா் கடந்த 1990-களிலேயே அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.
  • நூா் செளதரியை கனடாவிலிருந்து நாடு கடத்த வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா மேற் கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.1996-இல் வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவி ஏற்றதும், தனது தந்தையின் கொலைக்கு காரணமானவா்களை தண்டிக்க உரிய சட்டத் திருத்தம் கொண்டுவந்தார்.
  • கொலை குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை டாக்கா உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. ஆனாலும், கனடாவில் நூா் செளதரிக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால், அவரை டாக்கா அழைத்து வருவதில் தொய்வு ஏற்பட்டது.
  • இந்த தருணத்தில், இந்தியா- கனடா இடையிலான பிரச்னையை வாய்ப்பாகப் பயன்படுத்தி, கனடா தங்களுக்கு இழைத்த அநீதியை வங்கதேசமும் உலக மன்றத்தில் முன்வைக்கத் தொடங்கி விட்டது.

நன்றி: தினமணி (05 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories