TNPSC Thervupettagam

வாளின் மேல் வரு மா தவம்!

September 25 , 2024 63 days 114 0

வாளின் மேல் வரு மா தவம்!

  • எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை பசியும், காமமும்தான்! பசித் தேவை அந்த வேளைக்கு முற்றாகத் தீர்ந்து, ஒரு புலி இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, ஒரு மான் கூட்டம் சாவகாசமாக அதைக் கடந்து போகலாம்!
  • அப்போது புலி எழுந்து, ""என்ன திமிர்? நான் ஒருவன் இருக்கிறேன் என்னும் பயமே இல்லையே!'' என்று சொல்லி, அவற்றின் மீது பாய்ந்து தன்னுடைய மரியாதையை நிலை நிறுத்திக் கொள்வதில்லை!
  • மனிதன் நீங்கலாக ஒரு புலிக்கோ அல்லது எந்த உயிரினத்திற்குமோ மரியாதை, புகழ் என ஒன்றுமே கிடையாது!
  • இவை போக, இந்த நிலையில் மனிதன் அடைய வேண்டியது "புகழ்' என்னும் கருத்து ஊன்றப்பட்டு விட்டது! அதுவே வாழ்வின் பயன் என்றும் கூறப்பட்டது! அதை அடைவதற்குப் போட்டி தோன்றுவதும், அடைய இயலா நிலையில் பொறாமை தோன்றுவதும் இயற்கைதானே!
  • "புகழ்' என்பது எந்த ஒன்றிலும் எவரையும் விஞ்சிய நிலை; உடல் வலிமையில், அறிவுச் சாதுரியத்தில், பணத்தைக் குவிப்பதில், அதிகாரத்தை அடைவதில் என்று எதுவானாலும் சரி, எதிலும் விஞ்சி நிற்பவன் புகழுக்குரியவன்! அப்படித்தான் உலகின் நடைமுறைகள் சொல்கின்றன!
  • "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் உலகத்தியற்கை' என்று சொல்லி, அதைக் கண்டித்து மாற்றுவதற்குப் பதிலாக, அதை மாற்ற முடியாது என்பது போலவும், அதுதான் இயற்கை என்பது போலவும் உடன்படுகிறது சங்கப்பாட்டு!
  • அவர்கள் மனித குலத்தை அழிக்கும் போரை வீரம் என்கிறார்கள்! தமிழ்ச் சமூகத்தின் சங்க காலம் "வீரயுகம்' எனப் புகழப்பட்டது!
  • ஒரு பெரிய பசுக் கூட்டம் வைத்திருக்கிறான் ஒருவன்; அதைப் பாதுகாக்க அதற்கேற்ற ஆள் வலிமை அவனிடமும் இருக்கும்.
  • ஆனால் இன்னொருவன் மாற்றானுக்குரிய மந்தையை ஓட்டிக் கொண்டு வந்து தனதாக்கிக் கொள்ள, ஒரு சிறு படையை உருவாக்கிக் கொண்டு அவன் மீது பாய்கிறான்; வெல்கிறான்! பெரிய மாட்டு மந்தை இவனுடைமையாகி விடுகிறது.
  • இப்போது தன்னோடு உடன் வந்த அடாவடியான வீரர்களுக்கெல்லாம், அவரவர்களின் பங்குக்கேற்பப் பசுக்கள் பிரித்தளிக்கப்படுகின்றன! இதற்குப் "பாதீடு' என்று பெயர்!
  • இன்று அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஒரு தலைவனின் கீழ் இரண்டாவது வரிசைத் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலர் பங்குகொண்டு, தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்து விட்டால், ஆட்சியின் பலன்கள் தலைவனிலிருந்து தகுதிக்கேற்றவாறு கடைசித் தொண்டன் வரை பங்கிடப் படுகின்றன! இதுவும் "பாதீடுதானே!'
  • சங்க காலத்திலிருந்து இன்று வரை, இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் காவிரியில் எவ்வளவு வெள்ளம் ஓடிவிட்டது! பாதீட்டில் மட்டும் எந்த மாற்றமும் வரவில்லை!
  • இப்படி ஆநிரை கவர்வதையும், உரிய பாதீடுகளை வழங்குபவர்களையும் சங்க காலம் போற்றியது போல, நிகழ்காலமும் அத்தகைய அரசியல் தலைவர்களுக்கு ஊருக்கு ஊர் சிலை வைத்துக் கொண்டாடுகிறது!
  • ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப, புகழுக்குரிய செயல்கள் தீர்மானிக்கப் படுகின்றன. ஆகவே புகழ் என்பது நியாயத்தின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுவதாக நாம் கருத முடியாது.
  • "புகழ்' எனின் உயிரும் கொடுக்குவர்' என்பதைப் பொது விதியாகக் கொள்ள முடியாது! ஒரு கூட்டம் புகழுக்குரியதாக எதைக் கொள்கிறது என்பதைப் பொறுத்தது அது!
  • சோழப் பேரரசின் சார்பாகக் கலிங்கத்தின் மீது, சோழத் தளபதி கருணாகரத் தொண்டைமான் படையெடுத்துச் சென்றான்! வர்த்தகக் கடற்பாதையில் கேந்திரமாக இருக்கும் அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் கலிங்கப் போரின் நோக்கம்! இதிலே என்ன நியாயம் இருக்கிறது?
  • இதற்கு எவ்வளவு அழிவு? கலிங்க வீரர்களின் தலைகள் பறந்து பறந்து வீழ்ந்ததையும், பூமி செந்நிறமானதையும், வியந்து வியந்து கலிங்கத்துப் பரணியில் பாடுகின்றார் செயங்கொண்டார்!
  • வங்கக் கடலில் அமைந்துள்ள ஒரிசா அன்று கலிங்கம் எனப்பட்டது! அதை எறிந்து (அழித்து) சயத் தம்பம் (வெற்றித்தூண்) நாட்டி, "தம் பொழியும்' யானைகளையும், குவிந்து கிடக்கும் செல்வத்தையும் கவர்ந்து கொண்டு வந்த தளபதி கருணாகரத் தொண்டைமான் அவற்றைக் குலோத்துங்கச் சோழன் காலடியில் கொட்டினானாம். "கொள்ளை அடித்து' என்னும் சொல்லைப் பயன்படுத்தக் கூச்சப்படும் செயங்கொண்டார் "கவர்ந்து' என்னும் மென்மையான சொல்லைப் பயன்படுத்துகிறார்! நாணம் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது போலும்!

கடற்கலிங்கம் எறிந்து

சயத் தம்பம் நாட்டிக்

கடகரியும் குவிதனமும்

கவர்ந்து...

  • (கலிங்கத்துப் பரணி 471)
  • ஒவ்வொரு பாடலுக்கும் அதைப் பாடிய செயங்கொண்டாருக்கு ஒரு தங்கத் தேங்காய் பரிசளித்தானாம் குலோத்துங்கன்!
  • எல்லா அழி செயல்களையும் நியாயம் போலவும், அதுதான் வீரம் போலவும் காட்டி, புதிய தருமங்களை நம் வசதிக்கேற்ப உருவாக்கி, மக்களை ஏற்றுக் கொள்ளும்படி செய்வது எளிய செயலா? இதற்குத் தங்கத் தேங்காய் போதுமா?
  • வலிமை மிக்கவன் வலிமை குறைந்தவனின் நாட்டைச் சூறையாடி, அங்குள்ள வளங்களை எல்லாம் சுரண்டிக் கொண்டு வந்து விட்டான் என்பதிலே என்ன பெருமை இருக்கிறது?
  • தமிழரின் செம்மாந்த வாழ்வின் அடையாளமாக இத்தகைய போர்கள் பேசப்படுகின்றன.
  • நியாயமாகப் படைகள் ஒரு நாட்டின் தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்!
  • கொள்ளைப் பொருளோடு வரும் வீரர்களை, "குவிபொருளோடு வரும் வீரர்கள்' என்று சொல்லி "கடைதிறமினோ' (கதவைத் திறவுங்கள்) என்று பாடுவது சிறந்த இலக்கியமாகப் போற்றப் படுகிறது. தமிழன் போற்றிய அறம் தடுமாறும் இடம் இது!
  • சோழப் பேரரசு கட்டப்பட்ட வகையும் இதுதான்!
  • முதலில் பல்லவர்களை ஒழித்தார்கள்! பின்பு பாண்டியர்களை; அடுத்துச் சேரர்களை; பின்பு கப்பலேறி இலங்கை அனுராதபுரத்தை; அடுத்து மாலத்தீவுகளை; அப்படியே கங்கையும் கொண்டார்கள்; கடாரமும் (மலேசியா) கொண்டார்கள்!
  • ரோமப் பேரரசு, ஆட்டாமன் பேரரசு, சீனப் பேரரசு, மொகலாயப் பேரரசு, மௌரியப் பேரரசு என்று விரிந்து செல்லும் பேரரசுகளுக்கிடையே, தமிழனுக்கு ஒரே ஒரு முறை ஒரு பேரரசு அமைந்தது!
  • இணை சொல்ல முடியாத, அழகிய, சைவத் தத்துவங்கள் முற்றாக அமையுமாறு செய்து சோழப் பேரரசில் கூத்தனுக்கு ஒரு சிலை வடிக்கப்பட்டது! சிவாலயங்கள் பெருகின. பிராமணர்களுக்கு பிரமதேயங்கள் வழங்கப்பட்டன. கடல் போன்ற வீராணம் ஏரி உருவாக்கப்பட்டது; நரம்பு போல பின்னிப் பிணைந்த வாய்க்கால்கள் காவிரி எங்கும்!
  • சங்க காலம் போல அன்றி வடமொழிக் கலப்புத் தமிழில் பெருகியது. மன்னர்களின் பெயர்களே வடமொழிப் பெயர்கள்தாமே! தஞ்சைப் பெருவுடையார் கோயில் நிகரற்றது! இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டுவதற்குத்தானே கடாரம் வரை வாளை உருவிக் கொண்டு போனார்கள் சோழர்கள்!
  • மொகலாயப் பேரரசில் கட்டப்பட்ட தாசுமகாலும் இணையற்றதுதான்; இப்படிப்பட்டதுதான்! சாசகானுக்குப் பதினான்கு பிள்ளைகள் பெற்றுக் கொடுத்த பேரழகி மும்தாசின் மீது, சாசகான் கொண்ட காதலைக் காலகாலத்திற்கும் பறை சாற்றிக் கொண்டிருப்பதற்கு, மக்களின் வரிப் பணத்தில் மன்னன் கட்டிய சலவைக் கல் சமாதி அந்த அதிசயம்!
  • செங்கிசுகான் போன்ற கொடிய விலங்குகளின் படையெடுப்போடு ஒப்பிட்டால், நம்மவர்கள் தங்கமானாவர்கள். நம்மவர்கள் பயன் கருதித் தேவையான அளவுக்கு அழிப்பார்கள்; செங்கிசுகான் அழிப்பதிலேயே இன்பங் காண்கின்றவன்!
  • சோழப் பேரரசு பற்றிப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியனான சான் கே இரண்டு சொற்களில் முடிப்பான். "ப்ளண்டர் அண்ட் கிஃப்ட் கிவிங்' (போரில் கொள்ளையடிப்பதும் பரிசளிப்பதும்') இதுதான் சோழப் பேரரசு என்பான்!
  • இஃது உலகில் உள்ள ஒவ்வொரு பேரரசுக்கும் பொருந்தும்!
  • உலகம் பெருவாரியான மக்களுக்காகப் படைக்கப்பட்டதில்லை! சிறுபான்மை மேலோர் கூட்டத்தின் விரிவான கொள்ளைக்கும், பேரரசு கட்டலுக்கும் படைக்கப்பட்டது! அதற்குப் புலவர்களைக் கொண்டு பாடச் செய்து, மக்களை ஏற்கச் செய்வது பேரரசின் நடைமுறைகளில் ஒன்று!
  • விவசாயியாக வாழ்வதை விட வீரனாக வாழ்வதே பெருமைக்குரியது என்பதைச் சமூகக் கருத்தாக்கி, ஒவ்வொரு பேரரசிலும் ஒரு சிறு கூட்டம் மேலான வாழ்வு வாழ வகுக்கப்பட்டவைதான் பேரரசுத் தத்துவங்கள்! அதற்காக உருவான அடாவடித்தனம்தான் போர்!
  • அன்றுதான் அப்படி என்றில்லை, இன்றும் அப்படித்தான்! பொதுவுடைமைச் சோவியத் நாட்டுக்கும், முதலாளித்துவ அமெரிக்காவுக்கும் ஆப்கானித்தானத்தில் என்ன வேலை?
  • பாக்கித்தான் ஒருமுறை இந்தியாவைப் பார்த்துச் சொன்னது: "இனிப் பெரிய நாடு, சின்ன நாடு என்கின்ற பேச்சுக்கே இடமில்லை! எங்களிடமும் அணுகுண்டு இருக்கின்றது!'
  • எத்தகைய அச்சுறுத்தல் இது?
  • சப்பானிய இரோசிமா, நாகசாகியில் அணுகுண்டு வீசி, அது வெடிக்கிறதா என்று சோதனை ஓட்டம் பார்த்தானே அரைக் கிறுக்கன் சனாதிபதிடுரூமென், அவனைப் போன்ற அரைக்கிறுக்கர்கள், நாட்டுக்கு நாடு பெருகிப் போயிருக்கிறார்கள்!
  • வடகொரியா அரைக் கிறுக்கர்களைப் பரம்பரையாக உற்பத்தி செய்யும் நாடு!
  • இத்தகைய அரைக்கிறுக்கர்களின் ஆட்சிகளிலேதான், உலக மக்கள் வாழ்கிறார்கள்!
  • மாறிச் சிந்திப்பதற்குக் கூட ஆளே இல்லையா?
  • எனக்குத் தெரிய இருவர்!
  • ஒருவன் டால்சுடாய்!
  • போர் என்னும் சொல்லைக் கேட்டாலே, "எதற்குப் போர்? ஏன் போர்' என்று மக்கள் வெடித்தெழ வேண்டாமா என்று வெந்து மொழிந்தவன் டால்சுடாய்! இன்னொருவன் கம்பன்!
  • "யாரோடும் பகை இல்லை என்னும் மனநிலையை வளர்த்துக் கொண்டால், போர் ஒழிந்து விடும்' என்று சொன்னவன், சங்கத் தமிழ் போரைத்தானே புகழுக்குரியதாகக் கருதுகிறது என்பது நினைவுக்கு வந்து, "போரால் வருவது புகழில்ல; போர் மறுப்பால் வருவதே புகழ்'என்று சங்கச் சிந்தனையை மறித்துச் சொல்கிறான்!

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது!

  • (இராமா: 1419)
  • "அப்படியானால் வாளே வேண்டாமா?' என்னும் கேள்விக்குக் கம்பன் பதிலளிக்கிறான்! வாள் தற்காப்புக்கு மட்டுமே வேண்டும்! அந்த நிலை வரும் வரை வாள் உறையிலேயே உறங்கட்டும்!
  • மேலும் வாள் ஒரு தண்டனைக் கருவி! குற்றத்தையும் கொடியவனையும் ஒடுக்கும் கொலைக் கருவி! அறம் பிறழாமல், நியாயவான் தண்டிக்கப்பட்டு விடாமல் ஆள வேண்டும் என்பதற்கு, வாள் எனும் கொலைக் கருவி ஆட்சிக்கு இன்றியமையாதது எனினும், அதன் நுனி மீது நின்று மாதவம் புரிபவனே சிறந்த மன்னன் என்று தமிழும், உலகமும் கேட்டறியாத, ஒரு புதிய வரைவிலக்கணம் வடிக்கிறான் கம்பன்!

வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே (1420)

போரற்ற உலகம்; கம்பனின் புரட்சி!

நன்றி: தினமணி (25 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories