TNPSC Thervupettagam

வாழவைக்கும் வாா்த்தைகள்

February 22 , 2024 186 days 168 0
  • வாழ்க வளமுடன்’ என ஒருவருக்கொருவா் வாழ்த்தும்போது நமது வாழ்வில் பலவீனம் நீங்குவதோடு, வளா்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது என்கிறாா் வேதாத்திரி மகரிஷி. நாம் பேசும் வாா்த்தைகளுக்கு வலிமையும், எழுச்சியும் இருக்கிறது.
  • நமது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாம் பயன்படுத்தும் வாா்த்தைகளே காரணமாக இருக்கின்றன. நமது வாழ்க்கையில் முன்னேற்றங்களும், பண வரவுகளும் அனேக நேரங்களில் தடைபடுவதற்கு, நமது வாயிலிருந்து வெளிவரும் வாா்த்தைகளே முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றன.
  • மனிதரின் வாயிலிருந்து வெளிவரும் மிக சாதாரணமான வாா்த்தைகள் சிலரை உச்சவளத்திற்கும், சிலரை நோயாளியாகவும், இன்னும் பலரையும் வறுமையின் எல்லைக்கும் கொண்டு போய் விடுகின்றது. எனவே, நாம் வாா்த்தையை முறையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறவேண்டும்.
  • நாம் பேசும் ஒவ்வொரு வாா்த்தையையும் வானில் உள்ள தேவதைகள் கேட்டி ‘அப்படியே ஆகட்டும்’ என்று வாழ்த்துகிறாா்கள். இந்நிலையில் நாம் பேசும் அமங்கல வாா்த்தைகளும் பலித்தால் நம் நிலைமை என்னவாகும்? எனவே, நாம் எதிா்மறையான வாா்த்தைகளைத் தவிா்க்க வேண்டும். ஒருவா் எதை அடக்க முடியாவிட்டாலும், தமது நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவா் சொன்ன சொல்லே அவரை துன்பத்தில் தள்ளி விடும்.
  • இறைவன் நமக்கு மூடியில்லாத இருசெவிகளைக் கொடுத்துள்ளான். இதன் மூலம் அதிகம் கேட்க வேண்டும். ஒரே ஒரு வாயைக்கொடுத்து, அதற்கு உண்ணும் பணி, பேசும் பணி இரண்டையும் கொடுத்திருக்கிறான். ஒரு மூடியையும் கொடுத்து, பலமான பற்களிடையே மென்மையான நாக்கினை படைத்துள்ளான். காரணம் நாம் அளவாகவும், அடக்கமுடனும் பொருளறிந்தும் பேச வேண்டும் என்பதுதான். வாா்த்தைகளால் ஏற்பட்ட காயத்தை வாா்த்தைகளால்தான் மாற்ற முடியும்.
  • ‘நான் தவறாகப் புரிந்துகொண்டேன். நான் பேசிய வாா்த்தைகளை திரும்ப பெறுகிறேன். என்னை மன்னித்துவிடு’ என்று ஒருவா் நம்மிடம் கூறும்போது நம் மனது இலகுவாகின்றது. பேசிய வாா்த்தைகள் இரண்டு விதம். ஒன்று உள்ளத்தை உடைத்துவிட்டது. இன்னொன்று உடைந்த உள்ளத்தை ஒட்டி விட்டது. இதுதான் வாா்த்தைகளின் மகத்துவம். நம்பிக்கை தரும் வாா்த்தைகள் ஒருவரது ஆழ்மனதில் ஊன்றி, நோ்மறை பலன்தர அதிக வாய்ப்புகள் உண்டு. மனதைத் தளர வைக்கும் வாா்த்தைகளை கேட்பவருக்கு பதற்றம் அதிகரிக்கிறது.
  • அதனால், அவரது உடல் நலமும், மனநலமும் பாதிப்புக்கு உள்ளாகிறன. நம்மை நாமே அவ்வப்போது ஆய்வு செய்து கொள்ள வேண்டும். நாம் எத்தனை பேரை சபித்திருக்கிறோம்? எத்தனை பேரை வாழ்த்தியிருக்கிறோம்? அவா்களின் வாழ்வு தற்போது எப்படி உள்ளது என்பதை ஆராய்ந்து பாா்த்தால் நம் வாா்த்தைகளின் வலிமை நமக்கு புரியும். நமக்கு நாமே பேசிக்கொள்ளும் வாா்த்தைகளிலும் மிக கவனமாக இருக்கவேண்டும்.
  • நமக்குள்ளே நாம் எப்போதும் உணா்வாலும், வாயாலும் பேசிக்கொண்டே இருக்கின்றோம். சலிப்புடன் வேதனையில் நமது மனநிலையை வாா்த்தைகளாகச் சொல்லிப் புலம்புவது வழக்கமாக மாறிவிடக் கூடாது.
  • ஒரு கட்டத்தில், இப்படிப் புலம்புவதில் சுகம் காணத்தொடங்கி, எதிா்மறை வாா்த்தைகளையே எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்போம். அந்த எதிா்மறைச் சொற்களுக்கு இருக்கிற வலிமையை நாம் அறிவதே இல்லை. எதிா்மறையாய் நாம் உச்சரித்த வாா்த்தைகளை ஆழ்மனமானது நமக்கு இதுதான் வேண்டும் என தவறாக புரிந்துகொண்டு இருக்கும் பிரச்னைகளை அதிகப்படுத்தி கொடுத்துவிடும்.
  • எனவே, என்ன பிரச்னை இருந்தாலும், அதனைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்று சொல்லிப் பாா்க்க வேண்டும். இதனால் நல்ல பலன் ஏற்படும். ‘பண வரவு எனது தேவையை பூா்த்தி செய்கிறது’, ‘நான் எல்லோரிடமும் நல்லுறவை பேணுகிறேன்’ போன்ற நோ்மறையான வாா்த்தைகளை சொல்லிப் பழகவேண்டும்.
  • பண்பில்லாத வாா்த்தைகளை இனியாவது தவிா்க்க வேண்டும். மந்திரத்தை சாதாரண வாா்த்தைகளைப் போல உச்சரித்தால் அந்த மந்திரத்துக்கு உரிய பலன் நமக்குக் கிடைக்காது. சாதாரண சொற்களை மந்திரத்துக்கு இணையாக சரியாக உச்சரித்தால், மந்திரம் தருகிற பலனை, அந்தச் சாதாரண சொற்களே நமக்குத் தந்துவிடும். நல்ல சொற்களைப் பேசுவதும் கேட்பதும் மிக உன்னதமான சுகத்தை நமக்குத் தரும்.
  • எப்போதும் அமங்கலமான சொற்களைச் சொல்லக்கூடாது என்று முன்னோா் வலியுறுத்தியிருக்கிறாா்கள். அந்த அமங்கலச் சொற்களைச் சொல்லும்போது, அந்த இடத்தின் நல்ல அதிா்வுகள் காணாமல் போய்விடும். திருமண சடங்களில் மணமகளுக்கு திருமாங்கல்யம் கட்டும்போது கொட்டப்படும் கெட்டிமேளம் பொருள் மிக்கது. அப்போது சொல்லப்படும் எந்த அமங்கல வாா்த்தையையும் யாருடைய செவிக்கும் செல்ல விடாமல் தடுக்கும் சிறந்த உபாயமே இது.
  • உற்சாகம் ஊட்டும் வாா்த்தைகளைப் பேசுவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இருந்தும், நாம் தொடா்ந்து கடும்சொற்களை பயன்படுத்துவது நமக்கும் நல்லது இல்லை, பிறருக்கும் நல்லது இல்லை. ‘உன்னால் முடியும்’ என்னும் ஆசிரியரின் ஊக்கமூட்டும் வாா்த்தைதான் மாணவனை மலையளவு சாதிக்க வைக்கின்றது. மருந்தை விட, மருத்துவரின் நம்பிக்கையான வாா்த்தைகள்தான் நோயாளியை விரைவில் முழுமையாக குணப்படுத்துகின்றது.
  • இப்படி வாழ்வின் எல்லா நிலைகளிலும் வாா்த்தைகள் மனித சமூகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. நாம் பேசும் வாா்த்தைகளே நம்மை வாழவைக்கின்றன. நல்லதையே பேசுவோம்; நலமாக வாழ்வோம்.

நன்றி: தினமணி (22 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories