TNPSC Thervupettagam

வாழ்க்கை இனிக்க என்ன செய்ய வேண்டும்

December 3 , 2023 405 days 429 0
  • கூட்டம் கூட்டமாக வாழ்ந்திருந்த காலம் மாறி குடும்பம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி, கூட்டுக் குடும்பமாக ஒரே குடும்பத்தில் பதினைந்து இருபது என நபர்கள் வாழ்ந்திருந்த காலம் போய், இப்போது இணையர்களும் அவர்தம் பிள்ளைகளும் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட்டது. அடுத்த கட்டமாக இணையர்களுக்குள்ளேயே சிறிது இடைவெளி தேவை, பிள்ளைகள் வாழ்வில் நாம் மிகவும் குறுக்கிடக் கூடாது, அவர்களுக்கான இடத்தை அளிக்க வேண்டும் என்கிற இடத்தில் வந்து நிற்கிறோம். அந்தக் காலம்போல் மனிதர்கள் இப்போது இல்லை, பொறுமை இல்லை, ஒத்துப்போகும் தன்மை இல்லை, சுயநலம் அதிகமாக ஆகிவிட்டது, அப்படி இப்படி எனப் புலம்புவதில் ஒரு பலனும் இல்லை; அர்த்தமும் இல்லை.
  • இயற்கையில் மனிதன் மட்டுமல்லாமல் ஒவ்வோர் உயிரும் பயிர்களும் மரங்களும் செடிகளும் காலத்திற்கு ஏற்ப தங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் தகவமைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. பரிணாம வளர்ச்சி என்பது இதுதான். இந்தப் பரிணாம வளர்ச்சியில் நம் பரிமாணங்களும் அதற்கேற்ப மாறிக்கொண்டே வந்தால்தான் குழப்பங்களும் பிரச்சினைகளும் இல்லாமல் மனிதர்கள் இப்புவியில் சிறிதளவாவது நிம்மதியாக வாழ இயலும்.

வேலை பகிர்வு வேண்டும்

  • கூட்டுக்குடும்பங்களில் சிலர் படித்து வேலைக்குப் போகலாம், பள்ளி செல்லாதவர்கள் விவசாயத்தையோ குடும்பத்திற்கான மற்ற உதவிகள் புரிவதையோ வேலையாக அமைத்துக்கொள்ளலாம். குடும்பத்தில் ஒருவரே தலைவராக இருப்பார். வருமானம், செலவு என்று எல்லாவற்றையும் அவரே நிர்வகிப்பார். என் வருமானம், உன் வருமானம் என்கிற பிரிவினைகள் இருக்காது. வீட்டு வேலைகளையும் பகிர்ந்தே செய்வார்கள். ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் நிறைய நபர்கள் இருக்கும் வீட்டில் அவரைக் கவனித்துக்கொள்வது அவ்வளவு சிரமமாக இருக்காது. பெண்கள் பொதுவாக வீட்டிலிருந்தபடி வீட்டை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
  • ஆனால், இன்றைய காலகட்டம் அப்படியல்ல. இணையர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் வீட்டு வேலைகளை ஒருவர் மட்டுமே கவனிக்க இயலாது. அதனால், அதையும் இருவரும் பகிர்ந்துதான் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. பணம் ஈட்டுவதில் இருவரும் பங்கெடுக்கும் நிலையில் பொறுப்புகளிலும் வேலைகளிலும் ஆண்/பெண் பாகுபாடின்றிப் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பெரியவர்களை வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்ள இன்றைய காலகட்டத்தில் யாருக்கும் நேரமும் இருப்பதில்லை, கூட்டுக்குடும்பங்கள்போல் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொள்ள மனிதர்கள் இல்லாததால் ஒருவரே பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகையில் அலுப்பும் சலிப்பும் ஏற்படுவதும் இயற்கையே.

பிள்ளைகளை எதிர்பார்க்க வேண்டாம்

  • அதேபோல் மனிதர்களின் தேவைகள் அதிகமாகிவிட்டதால் அவர்களின் செலவுகளும் அதிகமாகிவிட, பெற்றோர்களுக்கான செலவு பிள்ளைகளுக்குச் சுமையாகத் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. “நாங்கள் எவ்வளவோ பாடுபட்டு வளர்த்தோம். எங்களைக் கவனித்துக்கொள்வதில்லை” என்று புலம்புவதில் ஒரு பலனும் இல்லை என்பதையும் உணர வேண்டும். அதனால், பெற்றோர்களும் முடிந்தவரை பிள்ளைகளுக்கெனத் தங்கள் பணம், நேரம் எல்லாவற்றையும் மொத்தமாகச் செலவு செய்துவிட்டுப் பிற்காலத்தில் அவதிப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, சம்பாதிக்கும்போதே பிற்காலத்திற்கெனக் கொஞ்சம் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை தியாகங்களைக் குறைத்துக்கொண்டு, தங்கள் உடல்நிலையையும் கவனித்துக்கொள்ள வேண்டும். தங்களுக்கென சில நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால், வயதான பிறகு பிள்ளைகளின் உதவியின்றித் தங்களைப் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
  • பிள்ளைகள் மனமுவந்து செய்தால் அதை வரமென கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம். மற்றபடி அவர்கள்தாம் வயதான பிறகு நம்மைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இல்லாமல் ஆரம்பத்திலிருந்தே நம் வயோதிகத்தையும் மனதில்கொண்டு வாழ்ந்துவிட்டால், உறவுகளுக்குள் பிரச்சினைகள் குறையும். கழிவிரக்கம் இல்லாமல் நிம்மதியாக இருக்க வழிவகுக்கும்.

ஆரோக்கியமான விவாதம்

  • பெண்களுக்கும் படிப்பும் தொழிலும் முக்கியம். நாளை எந்தச் சந்தர்ப்பத்திலும் தனியாக நிற்க வேண்டிய அவசியம் வந்தால் பெற்றோரையோ, உடன்பிறந்தவர்களையோ எதிர்பார்க்காமல் தன்னால் தன்னையும் பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் வாழவைக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை இருப்பது அவசியம்.
  • இணையர்களுக்குள் கருத்து வேற்றுமை இருந்தால் மறைத்துவைத்து, மனதிற்குள் புழுங்கி ஒரு நாள் ஒட்டுமொத்தமாக வெடித்துப் பிரிவைத் தேடுவதைவிட அவ்வப்போது ஒருவர் கருத்தை ஒருவர் மதித்து அமர்ந்து விவாதித்து புரிந்துகொள்ள முயற்சி செய்தால் பிற்காலத்தில் பிரிவுக்கு வழிவகுக்காமல் இருக்கும். எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதரின் தேவையும் வெவ்வேறாக இருக்கலாம் என்கிற புரிதல் அவசியம். அவர்களுக்கு என்ன தேவை என்று நாமே யூகிப்பதைவிட அவருக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொடுப்பதுதான் உறவைப் பலப்படுத்தும்.
  • எல்லாரும் இங்கே தனி மனிதர்தான் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்பவர்கள் என்கிற உண்மையையும் உணர வேண்டும். இணையர், பெற்றோர், பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள் என்கிற உறவுகளைத் தாண்டி நமக்கென ஒரு நட்பு வட்டம் மிகவும் அவசியம். ரத்த உறவுகளை நாம் தீர்மானிப்பதில்லை. ஆனால், நண்பர்கள் என்பது நம் தேர்வு. அதனால், இங்கு புரிதலும் விட்டுக்கொடுத்தலும் தானாகவே அமைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆதிக்கம் வேண்டாம்

  • அன்பு என்கிற ஒன்றுதான் இவ்வுலகைச் சுழல வைத்துக்கொண்டிருக்கிறது. அதன் தேடல்தான் இங்கே புரிந்துகொள்ளப்படாமல் வெவ்வேறு உருவம் கொண்டு ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆதிக்கம் செலுத்த முயலாமல், அன்பை வியாபாரமாக்காமல், எவ்வளவு உரிமையுள்ள உறவாக இருந்தாலும் நம்மையும் மதித்து, பிறரையும் மதித்து, வேண்டிய இடைவெளியை அளித்து, மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாமல், நம் சுதந்திரத்தையும் தக்கவைத்துக் கொண்டு வாழ்ந்தாலே போதும்.
  • சுதந்திரம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் தேவையானது. அதேநேரம் சுதந்திரம் என்பது இலவசமாக வருவதில்லை. பொறுப்புணர்வுடன் இணைந்து வந்தாலே அது உண்மையான சுதந்திரம். வாழ்க்கை மிகவும் எளிமையானதும் தற்காலினமானதும் ஆகும். நமக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தற்காலிக வாழ்வில் எதற்கு இவ்வளவு குழப்பங்களை நாமே விளைவித்துக்கொள்ள வேண்டும்? வாழ்வதற்குத்தானே பிறந்திருக்கிறோம்? போவதற்கு முன் அதை வாழ்ந்துவிட வேண்டாமா?
  • காலமாற்றத்தைக் கண்டு அஞ்சாமல், அதைப் புறக்கணிக்க எத்தனிக்காமல், அதை முழுமனதுடன் ஏற்று, அதற்குத் தகுந்த மாதிரி நம்மைத் தகவமைத்துக்கொண்டால்தானே நாம் பெருமைகொள்ளும் ஆறாம் அறிவு நமக்கு இருப்பதாக ஆகும்? மற்ற உயிர்கள் அனைத்தும் இதைச் செய்யும்போது நாம் செய்ய மறுத்தால் நமக்கு என்ன பெயர் வைப்பது?

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories