TNPSC Thervupettagam

வாழ்வளித்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவோம்!

August 13 , 2024 153 days 127 0

வாழ்வளித்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவோம்!

  • சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (ஐஐடி) அதன் முன்னாள் மாணவர் கிருஷ்ணா ஷிவுகுலா, ரூ.228 கோடி மதிப்பில் நன்கொடை அளித்திருப்பது, இந்திய உயர்கல்வித் துறையில் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தனிநபர் ஒருவர், ஒரு கல்வி நிறுவனத்துக்கு அளித்துள்ள மிகப் பெரிய நன்கொடை இது எனக் கூறப்படுகிறது.
  • இந்தியா விடுதலை அடைந்து, அனைத்துத் துறைகளிலும் தன்னை வேரூன்றச் செய்வதற்கான பணியில் இருந்தபோது, அன்றைய பிரதமர் நேருவின் கூடுதல் அக்கறையுடன் ஐஐடி என்கிற கட்டமைப்பு தோன்றியது.
  • நவீன அறிவியல் தொழில்நுட்பத் துறையில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். முதலில் 1951இல் காரக்பூரிலும், அதையடுத்து மும்பை, சென்னை, கான்பூர் ஆகிய இடங்களிலுமாக ஐஐடிகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொன்றும் ஒரு வெளிநாட்டின் கூட்டுழைப்புடன் தொடங்கியது.
  • 1959இல் தொடங்கிய சென்னை ஐஐடிக்கு மேற்கு ஜெர்மனி பல வகைகளில் ஒத்துழைப்பு வழங்கியது. ஐஐடி ஆளுநர் குழுவின் தலைவராக அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.லட்சுமணசுவாமி நியமிக்கப்பட்டார். முதல் இயக்குநராக நியமிக்கப்பட்ட பி.சென் குப்தா உள்ளிட்ட பலரது பங்களிப்பில் ஐஐடி வளர்ச்சி கண்டது.
  • ஐஐடியின் தொடக்கக் கால மாணவர்களில் ஒருவரான கிருஷ்ணா ஷிவுகுலா, வானூர்திப் பொறியியல் (ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங்) பயின்றவர். மும்பை ஐஐடியில் இளங்கலையும் சென்னை ஐஐடியில் முதுகலையும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏவும் பயின்ற கிருஷ்ணா, நியுயார்க்கில் உயர்நிலை வேதியியல் துறை சார்ந்த ‘சிவா டெக்னாலஜிஸ்’ என்கிற நிறுவனத்தை நிறுவினார்.
  • வெற்றிகரமாக இயங்கிய அந்நிறுவனத்தை அவர் நல்ல விலைக்கு விற்றார். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பியவர், 1997இல் பெங்களூருவில் இன்னொரு நிறுவனத்தைத் தொடங்கினார். மெட்டல் இன்ஜெக்ஷன் மோல்டிங் (எம்ஐஎம்) என்கிற தொழில்நுட்பத்தை ஆரம்பக் காலத்திலேயே பயன்படுத்திய தொழில்முனைவோரில் இவரும் ஒருவர்.
  • இதன் மூலம் லேபராஸ்கோப், என்டாஸ்கோப், அறுவைசிகிச்சைகளுக்கான கருவிகள் போன்றவற்றுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் கிருஷ்ணா நடத்திவருகிறார். இவரது ஆண்டு வருமானம் ரூ.1,000 கோடி என மதிப்பிடப்படுகிறது.
  • ஐஐடியில் மிகக் குறைந்த கட்டணத்தில் தனக்குக் கிடைத்த உயர்கல்வியின் தரத்தை உலகில் வேறெங்கும் கண்டதில்லை என்பதை கிருஷ்ணா தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார். உயர்ந்த இடத்துக்குத் தன்னை இட்டுச் சென்ற ஐஐடி நிறுவனத்துக்கு நன்றி கூறும்வகையில், தனது நிறுவனத்தின் ரூ.228 கோடி மதிப்புள்ள பங்கை சென்னை ஐஐடிக்கு தற்போது அவர் அளித்துள்ளார்.
  • அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்வி, மருத்துவத் துறைகளில் செல்வந்தர்கள் நன்கொடை அளிக்கும் செயல்பாடுகள், இவருக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன. கிருஷ்ணாவின் மனைவி ஜெகாதாம்பாவும் இதே நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறார். அவர் பெங்களூரு அரசுக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, அமெரிக்காவிலும் படித்துப் பணிபுரிந்தவர்.
  • சென்னை ஐஐடி, கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.1,200 கோடியை முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்களிலிருந்து நன்கொடையாகப் பெற்றுள்ளது. மிகப் பெருமளவில் பங்களிப்பு செய்துள்ள கிருஷ்ணாவுக்கு நன்றி கூறும்வகையில், அவர் பெயரிலேயே சில மாணவர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
  • அரசுக் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த விழைகின்ற கிருஷ்ணாவைப் பின்பற்றி, மற்றவர்களும் தங்கள் உயர்வுக்கு வழிவகுத்த பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமளவில் நன்கொடை வழங்க முன்வர வேண்டும். அவர்களின் கொடை உள்ளத்தை அரசுகள் சிறப்பாகப் பயன்படுத்தி, எதிர்காலத் தலைமுறையினருக்குச் சிறந்த அடித்தளத்தை அமைக்க வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories